Skip to main content

போன் கேட்டால் இல்லை என்று சொல்வதற்கு பதிலா, இப்படி சொல்லுங்க - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :12

Published on 16/12/2023 | Edited on 18/12/2023
parenting-counselor-asha-bhagyaraj-advice-12

இன்றைய குழந்தைகள் பெரியவர்களை விட அதிகமாக போன் பயன்படுத்துகிறார்கள். அடிக்சனாகவே ஆகிவிட்டார்கள் என்று சொன்னாலும் மிகையாகாது; அப்படி அடிக்சனாகி கேம் விளையாண்டு அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு ஆட்பட்ட ஒரு குழந்தைக்கும், பெற்றோருக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

ஏழாம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகள் தன்னுடைய பர்ஸிலிருந்து தனக்கு தெரியாமல் பணத்தை எடுக்கிறாள் அவளை எப்படி கண்டிப்பது என்பது தெரியவில்லை என்று ஒரு அப்பா தொடர்பு கொண்டார். அடுத்த முறை பணம் எடுக்கும் போது ஏன் எடுக்குற என்று கேட்டு விடுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். ஏற்கனவே செய்தது போல் இந்த முறை குழந்தை பர்ஸிலிருந்து பணம் எடுத்த போது கண்டுபிடித்து ஏன் பணம் எடுக்குற என்றதற்கு பதில் சொல்லவே இல்லை. 

கவுன்சிலிங்கிற்கு நேரே அழைத்து விசாரித்த போது அந்த குழந்தை மொபைல் கேம் விளையாடுவதற்காக பணத்தை எடுத்ததாக சொன்னது. தன்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவன் 500 பணம் கட்டி 600 ஜெயித்தானாம், அதே போல நீயும் பணம் கட்டி கேம் விளையாடினால் இரண்டு மடங்கு வரும் என்று சொல்லி இருக்கிறான். அதை நம்பி அந்த குழந்தையும் அப்பாவின் பர்ஸிலிருந்து பணத்தை தொடர்ச்சியாக எடுத்து கேம் விளையாடியிருக்கிறது என்பது தெரிய வந்தது.

உனக்கு பணத்தின் அவசியம் தான் என்ன என்று விசாரித்த போது, அம்மாவும் அப்பாவும் நமது குடும்பத்திற்கு பணக்கஷ்டம் அதிகம் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்கள். அதனால் கேம் விளையாடி அதிலிருந்து பணம் ஜெயித்து அப்பாவிற்கு கொடுக்கலாம் என்று யோசித்து இப்படி செய்ததாக அந்த குழந்தை சொன்னது. உன்னுடைய எண்ணம் நல்லது தான் பாப்பா, அதற்காக நீ எடுத்துக் கொண்ட வழி என்பது தவறானது என்பதை உணர்த்தி பெரியவர்களோ ஆன்லைன் கேம் விளையாடி எப்படியெல்லாம் சிக்கலாகி இறந்து போயிருக்கிறார்கள் என்பதையெல்லாம் செய்தியாக சேகரித்து காண்பித்த உடன் அதன் சீரியஸ்நெஸ்ஸை குழந்தை புரிந்து கொண்டது. இனி பணம் எடுத்து கேம் விளையாட மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னது. 

குழந்தைகள் போன் கேட்டால் கொடுத்துத்தான் ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம். ஏனெனில் ஆன்லைன் கிளாசுக்கு நாம் தான் போன் கொடுத்துப் பழக்கினோம். இப்போது விளையாட போன் கேட்டாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறித்துக் கொண்டு போன் தர வேண்டும், மேற்கொண்டு கேட்டால் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக இன்றைய போன் டைம் முடிந்து விட்டது. நான் போன் தருவேன் அதை நாளைக்கான போன் நேரத்தின் போது தான் தருவேன் என்று சொல்ல வேண்டும். அடம் பிடித்தால்  பெற்றோர்கள் சற்று கடினமான முகபாவத்துடன் சொல்லிப் பழக வேண்டும். குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.