தவறான தொடுதல் மற்றும் சரியான தொடுதல் குறித்து குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விளக்குகிறார்
ஒருநாள் இரவு நேரத்தில் ஒரு பெண் குழந்தையின் தாயிடமிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. மிகவும் பதட்டத்தோடு பேசிய அவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் 6 வயதான தன்னுடைய முதல் குழந்தையை மூன்று மாதங்கள் கிராமத்தில் தன்னுடைய மாமியார் வீட்டில் விட்டிருந்ததாகவும், வீட்டுக்கு வந்த பிறகு அடிக்கடி வயிறு வலிக்கிறது என்று குழந்தை சொல்வதாகவும் அவர் கூறினார். மேலும் பேய் வருகிறது என்று அடிக்கடி அவராக பயப்படுவதாகவும் அவர் கூறினார்.
மூன்றாவது படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னை உடலின் சில இடங்களில் தொட்டதாக அந்தக் குழந்தை கூறினாள். கல்யாணம் ஆகாமல் இருந்த பெரியப்பா ஒருவர் பேயாக இருக்கலாம் என்றும் அவள் கூறினாள். இருவரும் தவறான முறையில் குழந்தையைத் தொட்டிருக்கின்றனர் என்பது தெரிந்தது. பெரியப்பா அப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை குழந்தையின் தந்தை மறுத்தார். தன்னுடைய அண்ணன் நல்லவர் என்று கூறினார். தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தாய் என்னிடம் வந்தார். அந்த இடத்திற்கு குழந்தையைக் கொண்டுபோய் விட வேண்டாம் என்றும், குழந்தையிடம் அவர் அமர்ந்து நிறைய பேச வேண்டும் என்றும் நான் அறிவுறுத்தினேன்.
ஒருவர் தொடும்போது வசதியாக மனம் உணரவில்லையெனில் இல்லையென்றால், அது தவறான தொடுதல் (பேட் டச்) தான் என்பதை குழந்தைகளுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். சரியான தொடுதல் எது என்பது குறித்தும், தவறான தொடுதல் எது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வயதிலும் அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லித் தர வேண்டும். வித்தியாசமான விஷயங்கள் நடக்கும்போது அதைத் தங்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்று பெற்றோர் குழந்தையிடம் சொல்ல வேண்டும். நாங்கள் உன்னை நம்புகிறோம் என்கிற எண்ணத்தை குழந்தைக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
குழந்தையை முதலில் பெற்றோர் நம்ப வேண்டும். பெண்கள் பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்திருக்கும். அவை மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அந்த பாதிப்பிலிருந்து குழந்தைகள் வெளிவருவதற்கான வேலைகளை நாம் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் அவர்களை கவனம் செலுத்த வைக்க வேண்டும். பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களை கவுன்சிலிங்கின் போது குழந்தைகள் நம்மிடம் சொல்வார்கள். பெண் குழந்தைகளை மனம் திறந்து பேச வைப்பது கடினமான விஷயம் தான். ஆனால் அதை பழக்கத்தின் மூலம் கொண்டு வர முடியும்.