கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.
என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.
கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.
நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.
எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.