Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #44

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

marana muhurtham part 44

 

டிராஃபிக்கில் மாட்டிய சுமோ மாதிரி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தான் சூரியன். சூரியனைவிட மெதுவாக எழுந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன். உடலை விட வேகமாக எழுந்து அன்றைய வேலைக்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டன எண்ணங்கள். அதில் முதலிடத்தைப் பிடித்திருந்தது லில்லியின் விபத்து குறித்த விசாரணைச் செயல்பாடுகள்தான்.

 

குளித்து முடித்து உடம்புக்கு எரிபொருள் நிரப்பி, உடம்பு என்னும் வண்டியை முழு எனர்ஜியுடன் வைத்துக்கொண்டு அலுவலகம் புறப்படத் தயாரானார் கண்ணன். ஹாலுக்கு  வந்தவரை "குட் மார்னிங்" சொல்லி வரவேற்றாள் அவருடைய 16 வயது மகள் ஹேமா.

" குட் மார்னிங் டா" என்று சொல்லி புன்னகைத்தார் கண்ணன்.

"டாடி அந்த லில்லி டீச்சர் விபத்து கேஸ் எப்படி போய்கிட்டு இருக்கு"? என்று ஏதோ சீரியல் கதை கேட்பது போல ஆர்வமுடன் கேட்டாள் ஹேமா.

"ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது, எக்ஸ் ஒருத்தர் இருக்கார். அவரைக் கண்டுபிடித்து விட்டால் ஃபைலை மூட்டை கட்டித் தூக்கிப் போட வேண்டியதுதான் என்று கேசின் முடிச்சு ஏறத்தாழ அவிழ்ந்துவிட்டதில்  மகிழ்ந்து கூறினார் கண்ணன்.

"ஓ.. அப்ப உங்க கண்ணோட்டத்தில் லில்லி நல்லவங்க அப்படித்தானே?" என்று காலையிலேயே நீயா..? நானா..? வை ஆரம்பித்தாள் ஹேமா. "நல்லவங்களா? கெட்டவங்களா? என்பது அல்ல என் போலீஸ் சட்டம். இறந்தவர்  கொலை செய்யப்பட்டிருக்கிறாரா? இயற்கை மரணமா? என்பது தான் சட்டத்துக்கு தேவை", என்று  சொல்லிக்கொண்டே வெளி வராண்டாவில் இருந்த ஷு ரேக்கில் இருந்து ஷூவைக் கையில் எடுத்தார். அப்போது பூரான் ஒன்று அதனுள் ஒளிந்து இருப்பதைப் பார்த்தார். அதைத் தட்டினார் அந்த பூரான் வெளியே வந்தது. அதை அடிக்க முயலும் போது 

"அப்பா பாவம் ஒரு உயிர் அடித்து கொல்லாதீங்கப்பா" என்று பரிதாபத்துடன் சொன்னாள் ஹேமா.

"லூசா.. நீ  பூரான் கடித்தால் வலி தாங்காது  உடம்பெல்லாம் தடிதடியாக மாறிடும். கடித்த இடத்தில் எரிச்சல் ஏற்படும்" என்று சொல்லிக்கொண்டே அது எங்கே போயிருக்கும் என்று அந்த ஷூ ரேக்கை நகர்த்திவிட்டுத் தேடினார். கடைசியில் கால் மிதியடி கீழே ஒளிந்திருந்ததைக் குற்றவாளியைக் கண்டு பிடிப்பது போல கண்டுபிடித்தார். ஷூவினால் பூரானை அடித்து நசுக்கினார் கண்ணன்.

" அப்பா அது உங்களை கடிக்கலை  தானே. அது ஏதோ மூலையில் இருந்தது. அதை அடித்து ஏன் கொன்றீர்கள்?" என்று மீண்டும் ஒன்றும் தெரியாத குழந்தை போல கேள்வி கேட்டாள்  ஹேமா.

"விஷ ஜந்துக்களை உயிரோடு விடக்கூடாது என்று உனக்கு தெரியாதா?" என்று சற்று கோபப்பட்டார்.

"ஏம்பா மனிதர்களில் விஷமிகளை  உயிருடன் விடலாமா? அவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்கள் உயிருடன் இருக்கலாமா?  என்று கேள்விகளால் கண்ணனின் மனசாட்சியை உலுக்கினாள்  ஹேமா .

 

கண்ணனின் மனசு லேசாகக் குழம்ப ஆரம்பித்தது அதன் எதிரொளியாக மௌனமாக இருந்தார். 

"அப்பா.. அந்த பள்ளியில் தற்கொலை செய்து கொண்டு இறந்த தியா என்னுடன் தான் டியூஷன் படித்தாள். ரொம்ப அமைதியான அப்பாவியான பெண். வாழவேண்டிய ஆயிரம் கனவுகளை மனதில் சுமந்து பிரச்சனைக்கு வழி தெரியாமல் இறந்தாள். அந்த தற்கொலை உங்க மனசை கரைக்கலையாப்பா..?" என்று இளகிய குரலில் கேட்டாள்.

"சட்டம் தன் கடமையை செய்யும்மா. சட்டப்படி லில்லியின் இறப்பு கொலை போல் இருக்கிறதே.. என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

"சட்டம் மக்களின் பாதுகாப்பிற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது மக்களைப் பாதுகாக்காமல் சட்டத்தைப் பாதுகாக்கிறீர்களே இது நியாயமா?" என்று சற்று ஆவேசமாகப் பேசினாள் ஹேமா. அந்த இடத்தில் சிறிது நேரம் வார்த்தைகளுக்குப் பதில் மௌனம் பேசியது. அந்த மௌனத்தில் முதலில் வார்த்தைக் கல்லெறிந்தவள் ஹேமா "அப்பா நீங்க சொன்னது போல விபத்தை ஏற்படுத்திய அந்த எக்ஸை கண்டுபிடிக்கும் நீங்க தற்கொலை செய்து கொண்டு இறந்த தியாவின் உயிரையும் மீட்டுக் கொண்டு வாங்க" என்று விவாதம் செய்தாள்.

"நீ ..புரிந்துதான் பேசறியா?" என்று கோபப்பட்ட கண்ணனிடம்,

"இல்லைப்பா.. உங்களுக்கு புரிய வைக்க பேசறேன்" என்று பொறுமையாகச் சொன்னாள்

"சரிங்கப்பா.. உங்களுக்கு மனசாட்சி இருந்தால், லில்லி செய்த தவறுகள் எல்லாம் சரி என்று மனசுக்குத் தோன்றினால், விபத்து ஏற்படுத்திய அந்த "எக்ஸ் "யாரென்று தேடிக் கண்டுபிடித்து தண்டனை வாங்கி தாங்கப்பா. உங்க சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்காது, அவர்களாகச் சட்டத்தைக் கையில் எடுத்தால் அதற்கும் தண்டனை தருவீங்க.. பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களை வெட்டுவோம், எரிப்போம் என்று முகநூலில் கவிதை எழுதுவதற்கு மட்டும்தான் முடியும். துணிந்து தண்டனை கொடுத்தால் சட்டம் அவர்களை விலங்கிடும்,  தப்பு பண்ணவங்களை  ஆதாரம் இல்லை என்று ஆரத் தழுவும். எப்படியோ செய்யுங்கப்பா... உங்கள் மகளுக்கும்  இது நடக்கலாம் அப்ப உங்க சட்டம் என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்" என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

ஸ்டேஷனுக்கு வந்த கண்ணன் ரைட்டரை அழைத்து லில்லியின் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்களை எல்லாம் ஒரு கோப்பாகத் தயார் செய்யச் சொன்னார். அதன் பிறகு சில வாசகங்களை டைப் செய்யச் சொன்னார். அந்த பேப்பர்களையும் ஒட்டு மொத்தமாக வைத்து லில்லியின் விபத்து கேஸ் தயாரானது. அதன் சுருக்கம் லில்லியின் விபத்து ஆய்வகத்தில் அவரின் கவனக் குறைவால் தான் ஏற்பட்டது வேறு எந்த தனிப்பட்ட காரணங்களோ பள்ளி நிர்வாகமோ பள்ளியில்  இருப்பவர்களோ யாரும் காரணமில்லை என்று கையொப்பமிட்டு ஃபைலை மூடி வைத்தார். 

 

அவர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை, இன்னொரு கொலைக்கான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். அங்கே உருவாகி வருகிறது என்பதை...

 

(திக்திக் தொடரும்)

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #43