தந்தையைப் பழிவாங்க காதல் செய்து படிப்பை விட முயன்ற சிறுமிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.
விவாகரத்து ஆகும் நிலையில் இருந்த ஒரு பெண்மணி, தன் 11ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். அந்தச் சிறுமியின் தந்தை மிகவும் கடுமையானவர், எப்போதும் தன் சொல் மட்டுமே கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவார். மீறினால் அடிப்பது வழக்கம். மனைவியையும் அடித்து துன்புறுத்துவார். இதனால் அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.
தந்தையை பழிவாங்கும் எண்ணத்தில், அவரது மகள் ஒரு பையனுடன் காதலில் விழுந்திருந்தாள். அந்த காதலில் அவளுக்கு அதிக பிடிப்பு இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தாமல், ஸ்க்ரீன் டைம் அதிகம் செலவழித்தாள். அப்பாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி அந்த பையனிடமே போய் பிரச்சனை பண்ணும் அளவுக்கு போய்விட்டார். அந்த சிறுமியைப் போட்டு அடிப்பது, கேட்க வந்த மனைவியையும் அடிப்பது போன்று நடவடிக்கை அதிகரித்து பொறுக்க முடியாமல் போனதால் பெண்ணின் படிப்பு பாதிக்க கூடாது என்பதால் பெண்ணை கூட்டிக்கொண்டு ஒரு நாள் கணவர் இரவு தூங்கியபிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டார்.
என்னிடம் அந்த பெண்மணி வந்ததற்கான காரணம் பல முயற்சிகள் செய்தும், அவரது மகள் தன் காதலை விட தயாராக இல்லை. படிப்பையும் விட்டுவிட்டாள். எனக்கு அந்த அன்பு பிடித்திருக்கிறது என்று அந்தப் பதின் பருவக் காதலை தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறாள். மகளுக்கு புரிய வைத்து படிப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் என்று வந்திருந்தார். நடந்த நான்கு செஷன்களிலும் அந்தக் காதலை விடப்போவதில்லை என்று ரொம்ப ஸ்ட்ராங்காக இருந்தாள். என்ன செய்தாலும் மனம் மாற்ற கடினமாக இருந்தது. படிக்கவும் மாட்டேன், நான் அவர் வரும்வரை காத்திருக்கிறேன் என்று மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இந்தப் பெண்ணின் தந்தை போய் பிரச்சனை பண்ணியதில் அந்தப் பையனையும் பள்ளியிலிருந்து அனுப்பி விட்டனர். பள்ளியில் உள்ள டீச்சர்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்பதால் அவர்கள் கொஞ்சம் அனுசரித்து அந்த பெண்ணிற்காக ஒரு மாதம் கழித்து மீண்டும் எக்ஸாமை எழுத வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் படிப்பை தொடரலாம் என்று கால அவகாசம் கொடுத்து இருந்தனர். அதனல், அந்த ஒரு மாதத்திற்குள் நான் அவளை மாற்ற வேண்டி இருந்தது. அதிகமாக வீடியோஸ் பார்ப்பது என்று அவள் ரொம்ப அதிகமாகவே ஸ்கிரீன் டைம் கொண்டு இருந்தாள். அதனால் அவள் போக்கிலேயே போய் வீடியோஸ் மூலமாகவே அவளுக்கு அவர்களது நிலைமையை புரிய வைத்தேன். அவளுடைய அம்மா பொருளாதார ரீதியாக பலவீனமானவர் என்பதால், கணவனிடம் அடி வாங்குவதை சகித்து கொண்டார். அதே நிலைமை தனக்கும் வரக்கூடாது என்றால் படித்து நிதி ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் என்று அந்த பெண்ணுக்கு புரிய வைத்தேன்.
மோட்டிவேஷன் காணொளிகள் மூலம், அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்தேன். நிதி ரீதியாக நீ ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்றால் அதற்கு படிப்பு அவசியம் என்று புரிய வைத்தேன். படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாள். தன்னை தந்தை அடிக்கும் போது தனக்கு அம்மா ஆதரவு தரவில்லை என்ற கோபம் அந்த சிறுமிக்கு இருந்தது. ஆனால், உண்மையில் அம்மாவும் கணவரால் துன்புறுத்தப்பட்டார் என்பதை புரிந்து கொள்ள வைத்தேன். சிறுமியின் அம்மா வெறுமையாக இருந்தார். தன்னால் யாருக்கும் எந்தவித பயனும் கிடையாது என்பது போன்ற மனநிலையிலேயே அவர் இருந்தார். அவருக்கும் கவுன்சிலிங் தேவைப்பட்டது. முதலில் அவர் தன் தான் யார் என்று புரியாத நிலைமையில் இருந்தார். அவருக்குள் இருக்கும் ஒரு திறமையை நினைவுபடுத்தி அதில் கவனம் கொண்டு சொந்த காலில் நிற்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவருக்கு சில வேலையை தேடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவர் மகளும் நன்றாக தேறி படிப்பை தொடர்கிறார் கூடவே கவுன்சலிங்கும் தொடர்கிறது.