முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளின் நடவடிக்கை குறித்து பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
அம்மா அப்பா இருவரும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். தங்களுடைய மகள், சென்னையில் இருப்பதாகவும், அவளுடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி அவளைப் பற்றி விசாரித்துக் கூறும்படி சொன்னார்கள்.
நாங்கள் அந்த கேஸை எடுத்து அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். அந்த பெண் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து தங்கி ஒரு கோர்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருந்தாள். மேலும், ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணை ஃபாலோவ் செய்ததில், அந்த பெண்ணினுடைய அப்பா வயதில் ஒருவர் வந்து அந்த பெண்ணை காரில் ஏற்றிச் செல்கிறார். இப்படியாக, காரில் போவது வருவதுமாக கேஸுவலாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உறவு ஒரு தந்தை - மகளுக்குமான உறவு மாதிரியாக தெரியவில்லை. இரண்டு பேரும் நெருக்கமாகவும் இருக்கிறார்கள். இதுமாதிரி நிறைய பார்க்கிறோம். ஃபோட்டோஸ் எடுக்கிறோம். ஒரு நாள் காரை ஃபாலோவ் செய்த போது, அவர்கள் வெளியூர் போகிறார்கள். அதற்கு மேல் எங்களால் அவர்களை ஃபாலோவ் செய்யமுடியவில்லை.
இந்த விஷயத்தையெல்லாம் அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் சொன்னோம். அவர்களும் ஒரு காரை எடுத்து ஃபாலோவ் செய்யுங்கள் என்று சொன்னார்கள். மீண்டும், அந்த பெண் சென்னைக்கு வந்துவிட்டார். அதன் பிறகு, சில நாட்கள் அவர்களை ஃபாலோவ் செய்கிறோம். அதன்படி, மீண்டும் அவர்கள் வெளியூர் செல்ல நாங்களும் கார் மூலமாக அவர்களை ஃபாலோவ் செய்து அவர்கள் நெருக்கமாக இருக்கும் நிறைய ஃபோட்டோஸ் எடுத்தோம்.
இந்த ஃபோட்டோஸ் அனைத்தையும், அந்த பெண்ணின் பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் உடனடியாக அனுப்பினோம். அந்த ஃபோட்டோஸை பார்த்ததும் அந்த பெண்ணி தந்தை அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால், அந்த நபர் இவருடைய நண்பர். ஏதாவது உதவி வேண்டுமானாலும் தன்னுடைய நண்பரிடம் கேட்டுக்கொள் என்று மகளிடம் சொன்னதன் விளைவு இது. இந்த கோர்ஸை உடனடியாக முடிக்க வைத்து, மகளை உங்களுடனே வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அந்த பெண்ணுடைய அம்மாவையும் இங்கு வரச்சொன்னோம். அதன்படி, அவர் இங்கு வந்து பார்த்துக்கொண்டார். நாங்களும், அந்த பெண் வெளியே செல்லும் போது ஃபாலோவ் செய்து, அந்த நபர் வருகிறார் என்று தெரிந்தால் உடனடியாக நாங்கள் அம்மாவுக்கு தகவல் கொடுத்து கார் எடுத்து வரச்சொல்லி மகளைக் கூட்டிச் செல்ல சொல்வோம். இப்படியாக நாட்கள் சென்றது. அந்த பெண்ணுக்கும் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பினோம். இதற்கிடையில், அந்த பெண்ணின் அப்பா வெளிநாட்டில் ஒரு கோர்ஸை எடுத்து மகளை அழைத்துச் சென்றுவிட்டார்.