Skip to main content

திகிலூட்டும் தக்ஸ் வரலாறு; கொலைகாரன் பிடிபட்டது எப்படி? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 57

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
thilagavathi ips rtd thadayam 57

தனிமனிதராக 931 கொலைகள், 1200 பேர் கொல்லப்பட்டதற்கு திட்டங்கள் வகுத்து கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தக் பெஹராம் என்பவரைப் பற்றி தான் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார். 

தக்ஸ் குழுவில் இணைந்த பெஹராம் செய்த கொலைகள் பற்றியும், தக்ஸ் குழுவினுடைய பின்னணி பற்றியும் முந்தைய தொடரில் விரிவாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக பின்வருமாறு...

டோபி, தச்சர், இசைக்கலைஞர், நாட்டியம் ஆடும் பெண்கள், பசுமாடுகளை கையில் வைத்திருக்கும் நபர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை கொல்லக்கூடாது என நிறைய விதி அவர்களுக்கு இருக்கிறது.  பெண்கள் எல்லாம் காளியினுடைய அம்சமாக நினைக்கும் அவர்கள், இதுபோன்றவர்களை கொல்லமாட்டார்கள். அதே போல் அவர்களுக்கு நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கிறது. ஒரு குழுவினரை தாக்குவதற்கு முன்பாக, காளி கோவிலுக்கு சென்று ஆடு ஒன்றை பலி கொடுத்து அந்த ஆட்டின் மேல் விளக்கு வைத்து பூஜை செய்வார்கள். அப்படியான பலியை கொடுத்து நல்ல சகுணம் வந்தவுடன் தாக்குவதற்கு கிளம்புவார்கள். பல்லி கத்துவது, காகம் கரைவது, ஒரு புலி எதிரே வந்தால் அது நல்ல சகுணமாக எடுத்துக்கொள்வார்கள். அதே போல், பாம்பு, முயல், குறுக்கே வரக்கூடாது ஒற்றை குள்ளநரி ஊளையிடக் கூடாது, ஒற்றை காகம் பாறை மீது ஏறி கத்தக்கூடாது இப்படி நடந்தால் அது கெட்ட சகுணமாக எடுத்துக்கொள்வார்கள். இப்படியான நிறைய நம்பிக்கைகள் இருக்கிறது.

அப்படி இவர்களையெல்லாம் இணைத்து செயல்படுத்துபவராக தக் பெஹராக் தலைமை பொறுப்பில் இருக்கிறார். ஒவ்வொருவரையும் கொல்வதற்கு அதிக நேரம் எடுத்துகொள்வதால் சீக்கிரம் கொல்ல வேண்டும் என்று பெஹராம் தனது நண்பரான சையத் அமீர் அலியிடம் கூறிகிறார். மேலும் அவர், ஒருவரின் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்வதற்கு முன்பாக கழுத்தின் மேல் ஒரு நாணயத்தை வைத்து துணியால் நெரித்து கொலை செய்தால் நேரம் நமக்கு மிச்சமாகும் என்று ஐடியாவும் கொடுக்கிறார். அதன்படி தான் அவர் 931 பேரை தனிமனிதராக கொலை செய்கிறார். இவருடைய புகழ் பரவலாக பரவுகிறது. இதனால், இந்தியாவில் இருக்கக்கூடிய பல இளைஞர்கள் இவரை தேடி வந்து இவருடைய குழுவில் இணைகிறார்கள். அப்படியாக இவருடைய குழு பெருகிகொண்டே இருக்கிறது. அவர்களை வைத்து பெஹராம், வெவ்வேறு இடங்களில் இந்த சம்பவங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு 50,000 பேர் கொல்லப்பட்ட காலங்களும் உண்டு. 

இப்படியாக கிட்டத்தட்ட 40 வருடங்களாக எந்தவொரு அதிகாரியாலும், போலீசாராலும் பெஹராமை பிடிக்கமுடியவே இல்லை. அன்றைக்கு ஆங்கிலேயர்களுக்கு தலைநகரமாக மேற்கு வங்கம் தான் இருந்தது. அங்கு, கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் என்பவர், தக்ஸை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொள்கிறார். தக்ஸ் போலீஸ் என தனியாக அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் கொடுக்கிறார். இந்த அமைப்பில் எந்தவொரு போலீஸும் வர முன்வராததால், வில்லியம் ஹிண்டரி ஸ்லீமன் என்ற கேப்டனை பிடித்து வலுக்கட்டாயமாக இந்த அமைப்பின் எஸ்பியாக அமரவைக்கிறார்கள். வில்லியம் ஹிண்டரியும், இந்த தக்ஸ் குழுவை போலவே மூன்று குழுவை அமைக்கிறார். தகவல் கொடுப்பதை ஒரு குழுவாகவும், பகுதி பகுதியாக பயணிகள் மாதிரியாக ஒருக்கக்கூடியவர்களை ஒரு குழுவாகவும், தக்ஸ் குழுவின் பிண்ணணியை தெரிந்துக்கொள்வதற்கு ஒரு குழுவாகவும் அமைக்கிறார். 

தக்ஸ் குழு வடமாநிலங்களில் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அந்த மாநில மொழிகளை வில்லியம் ஹிண்டரி கற்றுக்கொள்கிறார். அப்படி கற்றுக்கொண்டு, அந்த தக்ஸ் குழுவில் இருக்கக்கூடிய நபர்களை பிடித்து விசாரித்து அவர்கள் மூலமாக தகவல்களை பெற்றுக்கொண்டு படிப்படியாக பெஹராமின் நண்பர் சையத் அமீர் அலியின் குடும்பத்தை வில்லியம் ஹிண்டரி பிடித்துவிடுகிறார். தக்ஸ் குழு செய்யும் தவறுகளை பற்றி அந்த குடும்பங்களுக்கு தெரியாமல் வைத்திருப்பதால், சையத் அமீர் அலி தக்ஸ் இல்லை என அவர் குடும்பம் சொல்கிறது. ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைக்க வைத்திருந்த சையத் அமீர் அலியின் சொந்தகாரரான ஜிர்துவின் முன்னால் சையத் அமீர் அலியின் குடும்பத்தை வில்லியம் ஹிண்டரி நிறுத்துகிறார். ஜிர்துவும், சையத் அம்மாவிடம் நாம் தக்ஸ் இல்லை தான் ஆனால், நாங்கள் எல்லாம் தக்ஸ் குழுவில் இணைந்து தகியாக மாறிவிட்டோம். அதே போல், சையத் அமீர் அலியும் தகியாக மாறிவிட்டார் என்ற உண்மையை சொல்கிறார். 

இந்த விவகாரம் முழுவதும் சையத் அமீருக்கு தெரியவருகிறது. இது அவருக்கு மனதளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் பின் அவரது செயல்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் சோர்ந்து இருக்கிறார். அதன் பின்னர், அவரை பற்றி தகவலை சேகரித்து சையத் அமீர் அலியை பிடித்துவிடுகிறார்கள். பெஹராமை பற்றி தகவலை சொன்னால் தான் உன்னுடைய குடும்பத்தை விட்டுவிடுகிறேன் என்று வில்லியம் ஹிண்டரி கூறுகிறார். சையத் அமீர் அலியும், பெஹராமுக்கு நெருக்கமான ரம்ஜான் என்பவர் இருக்கும் இடத்தை பற்றி சொல்லி அதை வைத்து பெஹராமை பிடித்துவிடலாம் என்று கூறுகிறார். அப்படியாக அந்த ரம்ஜானை பிடித்து மிரட்டியதன் பேரில் பெஹராமை ரம்ஜான் வெளியே கொண்டு வருகிறார்.  வெளியே வந்த அவரை, வில்லியம் ஹிண்டரியினுடைய படைகள் சுற்றி கைது செய்கிறார்கள். இது ஒரு தியரி.

இன்னொரு தியரி என்னவென்றால், 75 வயதில் இருந்த பெஹராமுக்கு விலைமாதுவான மும்தாஜ் என்பவர் நெருக்கமாக இருக்கிறார். மும்தாஜ் வீட்டுக்கு பெஹராம் அடிக்கடி போவது வழக்கம். அப்படி மும்தாஜை பிடித்து மிரட்டியுள்ளனர். அப்படி பெஹராம் ஒரு நாள் மும்தாஜ் வீட்டுக்கு வரும் போது வில்லியம் ஹிண்டரியினுடைய படைகள் நடமாடுவது குறித்து சந்தேகமடைந்த பெஹராம் தப்பிப்பதற்காக வெளியே செல்லும் போது வில்லியம் ஹிண்டரி அவரை பிடித்துவிடுகிறார்.  இப்படி ஒரு தியரியும் இருக்கிறது. ஆகமொத்தத்தில் இவரை பிடித்துவிடுகிறார்கள். எங்கெல்லாம் கொலை நடந்தது என பெஹராம் போலீசாரிடம் காட்டுகிறார். ஆனால், ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் கொடுக்க மாட்டிக்கிறார். அது காளிக்கு விரோதமான செயல் அதனால் இதை நாங்கள் வெளியே சொல்ல மாட்டோம் என்று கூறுகிறார். பெஹராமின் பையனான அலியை பிடித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் உயிரோடு விடுவோம் என வில்லியம் பெஹராமை மிரட்டுகிறார். அதன் பின்னர், தான் செய்த அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொள்கிறார். இந்த சம்பவம் 1846ஆம் ஆண்டில் நடக்கிறது. இந்த வழக்கு நடைபெற்று அதன் பின்னர் அவரை தூக்கில் போடுகிறார்கள். அதன் பின்னர் ஒரு 10 ஆண்டுகள் கழித்து வில்லியம் ஹ்ண்டரிக்கு ஒரு பெரிய விருதை ஆங்கிலேய அரசு கொடுக்கிறது. பெஹராமின் குழந்தை அலியையும் சிறை பிடித்து தமிழ்நாட்டில் உள்ள வேலூருக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அங்கிருந்து அவர் தப்பித்து தன்னுடைய குடும்பத்தை அழைத்து ஹைதராபாத் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தார். அவருடைய வம்சாவளிகள் அனைவரும் அங்கே தான் இருக்கிறார்கள் என்ற தகவல் இருக்கிறது.