Skip to main content

இது வேலையா? பாவமா? - இ.எம்.ஐ. வசூலிப்பவரின் குற்ற உணர்ச்சி -  ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 27

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 jay-zen-manangal-vs-manithargal- 27

தான் செய்கிற வேலை கொடுக்கும் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட நினைக்கும் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

பொருள்கள் கொடுத்து அதற்கான இ.எம்.ஐ மாதாமாதம் வசூலிக்கும் நிறுவனத்தில் பணிபுரிபவர் அவர். வாடிக்கையாளர் கொடுக்க வேண்டிய மாத வட்டியை சொன்ன தேதிக்குள் வாங்கி விட்டால் இத்தனை ஸ்டார், சொன்ன தேதிக்கு முன்னரே வசூலித்து விட்டால் கோல்ட் ஸ்டார் என்றும் இன்சென்டிவ், பதவி உயர்வு, கார் என்று அந்த நிறுவனத்தில் வசூலிப்பவர்களுக்கு விதிகள் இருக்கிறது. இது பெரும்பாலும் வெளியே தெரியாது. என்னைப் பார்க்க வந்த நபர், அந்த பணியில் சிறப்பாக இருப்பவர். தன் வேலையை திறமையாகப் பார்த்துக் கொண்டிருப்பவர். என்னை பார்க்க வருவதே ஒரு முரண் தான்.

தன்னுடைய நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளரை ஒரு வண்டியோ, டிவியோ மாத வட்டி கொண்டு வாங்க வைக்க அந்த கம்பெனியில் ஒருவர் இருப்பார். என்னவெல்லாமோ இனிக்க இனிக்க பேசி சம்மதிக்க வைப்பார். அவருடைய வேலை அத்துடன் முடிந்தது. அதே நிறுவனத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு கட்ட வேண்டிய வட்டியை ஒவ்வொரு மாதம் சென்று வசூலிப்பவரின் வேலை வேறு விதமானது. ஆரம்பத்தில் திறம்பட நன்றாகத் தன் பணியை செய்கிறார். வட்டி வசூலித்து தனக்கான பெயரை நன்றாக சம்பாதிக்கிறார். இன்சென்டிவ் கிடைக்கிறது. ஆனால் இதுவே 365 நாட்கள் தொடர்ந்து ஒரு பொருளாதாரம் பாதித்திருக்கும் குடும்ப சூழலில் ஒவ்வொரு வீட்டிற்கும் வட்டி கேட்டு வற்புறுத்தி வாங்கி வருவது என்று தொடர அவரை அது உளவியல் ரீதியாக பாதித்திருக்கிறது. 

ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் கேட்கும்போது, அவர்களின் கட்ட முடியாத சூழ்நிலை, அவரிடம் காட்டப்பட்ட இயலாமை நிறைந்த சங்கடம் போன்றவை இவருக்கு ஓரளவுக்கு மேல் தாங்க முடியவில்லை. இதை சரியாக செய்தால் வேறு பதவி உயர்வு என்ற ஒரு விஷயம், இவருக்கு எப்படி இது சரியாக இருக்கும், நாம் செய்யும் இந்த வேலை முறையானது தானா என்று நெருடலாகிறார். மாறாக இவருக்கு கம்பெனியில் பெரிய திறமையானவர் என்று பெயர் வேறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலை என்றாலும் சொன்ன தேதியில் நன்றாக பணம் வசூலிப்பார் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் அவர் தன் மீது இருக்கும் இந்த குற்ற உணர்ச்சி, கோபம் எல்லாம் தன் மனைவியிடம் காட்டி இருக்கிறார். தேவையில்லாமல் திட்டுவது, அடிப்பது என்று இருந்து இருக்கிறார். நிறுவனத்தில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் நீ எப்படி என்னை நடத்துகிறாய் என்று சம்பந்தமில்லாத ஒரு வெறுப்பு. 

நான் நன்றாகத்தானே வேலை பார்க்கிறேன் அப்போது எனக்கு நிம்மதியும், சந்தோஷமும் தானே இருக்க வேண்டும். எனக்கு ஏன் மனசாட்சி உறுத்துகிறது சார் என்றார். என் வேலை அழுத்தம் என்னை வேறு விதமாக மாற்றுகிறது. நான் சாதாரணமாக மனைவியிடம் கோவம் கொள்ளும் நபர் கிடையாது. மற்றவர் பணத்தை உரிமையாக கேட்கும் ஆள் கிடையாது. ஆனால் என் நிறுவத்தினால் அந்த இடத்திற்கு சென்று எப்படியாவது மிரட்டி, பிடுங்கி என்று பணத்தை வாங்கி விடுகிறேன். எனக்கே தெரியாத அந்த வில்லத்தனமான புது ஆளாக நான் மாறி விடுகிறேன். கம்பெனியிலிருந்து வெளியே வந்தும் என்னால் அந்த புது ஆளிலிருந்து மாற முடியவில்லை அதுதான் என் பிரச்சனை என்றார்.

தான் வேறு வேலை மாறலாம் என்ற முடிவோடு வந்திருப்பதாகவும், அப்படி மாறுவது சரியா அல்லது இதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்க்கலாமா என்ற யோசனையில் வந்திருந்தார். அவர் இதை விட்டு வேறு எந்த வேலை சென்றாலும் அங்கேயும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று வரும்போது, அதற்கான இலக்கை அடைய சில நியாயமில்லாத வேலைகளை செய்யும்படி வரத்தான் செய்யும். எனவே அதுவும் சரி இல்லை. அதே நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அவர் செய்யும் வேலையை நியாயமானதாக இருக்க வேண்டும். எனவே மாற்ற வேண்டியது அவரை உறுத்திக்கொண்டிருக்கும் மனசாட்சியை தான். இதையெல்லாம் அவருக்கு எடுத்து சொல்லி, இதை விட்டால் நல்ல தொழில்கள் எவ்வளவோ இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு லாண்டரி சர்வீஸ் என்று எடுத்துக்கொண்டால், அழுக்கு துணியை கொண்டு வரும் கஸ்டமர் முகமும், அதை வாங்க வரும் அதே கஸ்டமர்சின் முகமும் வேறுபடும். சந்தோஷமாக சிரித்த முகத்துடன் பணத்தை கொடுத்து வாங்கி போவார்.

அதேபோல இந்த கம்பெனியில் நீங்கள் கொடுத்து வாங்கும் பணம் மற்றவர் வேதனையோடு, கஷ்டத்தில் வருகிறது. அது உங்களை வருத்துகிறது. வேறு தொழிலில் பொருளை திருப்தியோடு வாங்கி பணத்தை சந்தோஷமாக கொடுக்கும் வாடிக்கையாளர்கள் வரும் நல்ல தொழிலை நீங்கள் செய்யலாம் என்று எடுத்து சொன்னேன். அவரும் புரிந்ததை போன்று உணர்ந்தார். அவரும் வெளியே வந்து தற்போது வேறு தொழில் செய்து வருகிறார். தனக்கு முன்பு பண வசதி, பதவி உயர்வு என்று எல்லாம் இருந்தாலும் அங்கே கணவன் மனைவி சுமூகமாக இல்லை. ஆனால் இப்போது அவர் மனைவியும் தன் கணவர் பழைய மாதிரி கிடைத்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.