ஹூனானில் நிலைமை அபாயகரமானதாக மாறிக் கொண்டிருந்தது. பிரிட்டனும் ஜப்பானும் ஆயுதந்தாங்கிய படகுகளை அனுப்பின. இதையடுத்து அங்கு ஒரு அமைதியான சூழல் நிலவியது. ஆனாலும், அது உண்மையில் அமைதியா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஏனென்றால், மஞ்சு எதிர்ப்பு பேரணிகளை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர். மஞ்சு ஆட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சீர்திருத்தவாத ஆதரவு நிலப்பிரபுக்கள் விவாதித்து வந்தனர். 1911 ஆம் ஆண்டு சீனாவில் ஹுவாங் ஸிங் தலைமையிலான வூச்சாங் புரட்சி வெற்றி பெற்றது.
அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக் கிழமை சாங்ஷா வந்த சீன நீராவிக் கப்பல் அந்தச் செய்தியை கொண்டுவந்தது. சீன ராணுவத்திலேயே இரு குழுக்களாக பிரிந்து புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சிக்கு ஆதரவான வீரர்கள் சீன அரசின் அடையாளங்களை பிய்த்தெறிந்தனர் என்றெல்லாம் அந்தக் கப்பலில் வந்த பயணிகள் பேசிக் கொண்டனர். ஆனால், சண்டை போட்டவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எதிராக சண்டை போட்டார்கள்? என்ற விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கு மட்டுமல்ல, ஹூனான் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கும் விவரங்கள் தெரியவில்லை. ஏனென்றால் சாங்ஷாவை வெளியுலகத்துடன் பிணைத்த ஒரேயொரு தந்தித் தொடர்பும் தகர்க்கப்பட்டு இருந்தது. கப்பல் வந்து சேர்ந்த அடுத்த மூன்று நாட்களில் வங்கிகள் அனைத்தும் செயலிழந்தன. பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வெளியுலகச் செய்தி கிடைப்பதே அரிதாக இருந்தது. பலவிதமான வதந்திகள் பரவின. இந்நிலையில் அன்று மாலையே ஜப்பானிய நீராவிக் கப்பல் ஹேன்காவிலிருந்து வந்தது. அதில் வந்த பயணிகள் புரட்சியாளர்கள் வெற்றி பெற்ற செய்தியை விரிவாகத் தெரிவித்தார்கள். வூச்சாங் புரட்சியில் ஈடுபட்டவர்களில் சிலர் அந்தக் கப்பலில் வந்தார்கள். ஹூனானில் தீவிரவாத உணர்வுடைய சக ராணுவ வீரர்களும் விரைவாக கலகத்தில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் மாவோ படித்த பள்ளிக்கு வந்தார். பள்ளி முதல்வரின் அனுமதியோடு அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அந்த மாணவர்களில் எட்டுப் பேர் மஞ்சுக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த நிகழ்ச்சி மாவோவை பெரிய அளவில் பாதித்தது. அவரும் சில நண்பர்களும் ஹேன்காவுக்கு சென்று புரட்சியாளர்களின் படையில் சேருவது என்று முடிவெடுத்தார்கள். அவர்களுடைய பயணத்துக்கான கப்பல் கட்டணத்தை மாணவர்கள் வசூலித்தார்கள். அவர்கள் கிளம்புவதற்கு முன்பே பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புரட்சியாளர்கள் கலகத்தில் ஈடுபடத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில், கலகத்தை அடக்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டார். ராணுவத்தினரை அவர் நம்பவில்லை. புதிதாக மக்கள்படையை அமைத்தார். அந்த படைகளுக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
இரவு நேரத்தில் புரட்சியாளர்கள் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோற்றது. நகரின் கிழக்கு வாயிலுக்கு அருகில் இருந்த ராணுவக் காப்பரணில் குதிரை லாயத்திற்கு தீவைத்தனர். அந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வருவதற்காக வாயில் திறக்கப்பட வேண்டும் என்று புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், மக்கள் படையினர் இதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து, புரட்சியாளர்கள் ஆயுதக் கிடங்கில் பூட்டி வைக்கப்பட்ட ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு நாட்களில் அதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்கள் வித்தியாசமான முறையில் நகரைத் தாக்கினார்கள்.
அதற்கு சற்றுமுன் நகரத்திற்கு வெளியே முகாமிட்டிருந்த ராணுவத்திலிருந்த தனது நண்பர் ஒருவரிடம் மெழுகுத் துணியால் ஆன பூட்சுகளையும் சில பொருட்களையும் இரவலாக பெற மாவோ சென்றார். ஆனால், காப்பரணில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விட்டனர். அங்கே பரபரப்பு நிலவியது. ராணுவ வீரர்கள் தெருக்களில் குவிந்து கொண்டிருந்தனர். புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை தொடங்கியது. நகரத்தின் வெளிப்புறச் சுவர்களுக்கு அப்பால் பெரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நகரத்திற்கு உள்ளேயும் கிளர்ச்சி வெடித்தது. சீனத் தொழிலாளர்கள் நகரத்தின் வாயில்களை தகர்த்துக் கைப்பற்றினார்கள்.
இது நடந்துகொண்டிருந்த வேளையில் மாவோ ஒரு வாயிலின் வழியாக நகரத்திற்குள் நுழைந்தார். அதன்பிறகு உயரமான ஒரு இடத்தில் ஏறி நின்றார். அங்கிருந்து சண்டையை பார்த்தார். அப்போது, ஆளுநர் மாளிகையில் மஞ்சு கொடி அகற்றப்பட்டு ஹேன் கொடி ஏற்றப்பட்டதை கண்டார். பிற்பகலுக்குள் நகரம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. எங்கும் வெள்ளைக் கொடி பறந்தது. வெள்ளைக் கைப்பட்டை அணிந்த வீரர்கள் நகரின் ஒழுங்கை பராமரிக்க ரோந்து சுற்றினர். காலையில் தோன்றிய பரபரப்பு அடங்கிவிட்டது. இதற்கிடையே ஆளுநரும் அவருடைய மூத்த அதிகாரிகளும் தப்பியோடினர். மக்கள்படைத் தளபதியாக ஆளுநரால் நியமிக்கப்பட்டவரையும், வேறு பல அதிகாரிகளையும் ஆளுநர் மாளிகை அருகே தலையை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.
அவர்களுடைய ரத்தம் தோய்ந்த தலைகளும் உடல்களும் தெருக்களில் அப்படியே கிடந்தன. புரட்சி வெற்றி பெற்றாலும் அடுத்த குழப்பம் தொடங்கியது. இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர்கள் அனைவருமே சீன ராணுவத்தில் பணிபுரிந்து , புரட்சியாளர்களுடன் இணைந்தவர்கள். அவர்களுக்கு பொறுப்பு எதுவுமே வழங்கப்படவில்லை. எனவே, புதிய புரட்சி நிர்வாகத்தை யார் தலைமை தாங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் வூச்சாங் மாகாணத் தலைநகர் ஹூ பேயில், தொடக்கத்தில் புரட்சியை எதிர்த்து பின்னர் ஆதரித்த லி யுவான்ஹாங் என்பவர் ராணுவ ஆளுநராக பொறுப்பேற்க சம்மதித்தார். அதே நாளில் நாட்டின் பெயரை சீனக் குடியரசு என்று மாற்றி அறிவித்தார். வூச்சாங் மாகாணத் தலைநகர் ஹூபேயில்தான், குய்ங் முடியாட்சி ஒழிக்கப்பட்டு சீனக் குடியரசு உதயமாயிற்று.
சாங்ஷாவிலும் நிலைமை குழப்பமாகத்தான் இருந்தது. அங்கு, முற்போக்குவாதிகளின் ஹூனான் கிளையின் துடிப்பான இளம் தலைவரான ஜியோவ் தாஃபெங் ராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். சீர்திருத்தவாத மேட்டுக் குடியினரில் முக்கியமானவரான டான் யாங்கெய் ராணுவம் சாராத குடிமைத் துறை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இருந்தாலும், புரட்சியில் பங்கேற்ற பலர் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து சாங்ஷா வந்தனர். அவர்கள் தங்களுக்குரிய பங்கை எதிர்பார்த்தனர். அவர்கள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டும், கத்திகளைக் கொண்டும் ஒருவரையொருவர் மிரட்டும் நிலைக்குச் சென்றனர். வூச்சாங்கில் புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக சாங்ஷாவிலிருந்து ஒரு படைப்பிரிவை ஜியோவ் அனுப்பினார். இந்தச் சமயத்தில் அவருக்கு அடுத்தகட்ட தலைவராக இருந்தவரை சிரச்சேதம் செய்து கொன்றார்கள். விரைவிலேயே ஆளுநர் மாளிகைக்குள் வைத்து ஜியோவ் தாஃபெங்கும் சிரச்சேதம் செய்யப்பட்டார். அவருக்கு அப்போது 25 வயதுதான் முடிந்திருந்தது. பொறுப்பேற்ற 9 நாட்களில் இரு தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
அந்த இரு தலைவர்களின் உடல்களும் தெருவில் வீசப்பட்டுக் கிடந்தன. இதை மாவோ நேரில் கண்டார். அவர்கள் இருவரும் ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவும் இருந்தனர். அதனால்தான் அவர்களை கொன்றார்கள். நிலப்பிரபுக்களும் வணிகர்களும் அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தனர் என்பதை மாவோ அறிந்திருந்தார். அவர்கள் கொல்லப்பட்ட அன்று மாலையிலேயே பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த டான் யெங்கேய் ஆளுநராக நியமிக்கப்பட்டார். புரட்சி வெற்றி பெற்றவுடன் இவர் ராணுவம் சாராத குடிமைத் துறை ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார். புரட்சி வெற்றி பெற்றாலும் பிரபுக்கள் கைதான் ஓங்கியிருந்தது.