மாயப் புறா - முந்தைய பகுதிகள்
மருத்துவமனையில் மல்லிகாவுக்கு தனியறை என்பதால் அதில் ஒரு கட்டில் மட்டும் போடப்பட்டு இருந்தது. அந்த வார்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் சேர்ந்தது போன்று கழிவறைகள் இருந்தன. பக்கத்து அறைகளில் இருப்பவர்கள் பேசுவது இந்த அறையில் கேட்கும். பயமில்லாமல் இருக்கலாம். மல்லிகாவின் கட்டிலுக்கு அருகிலேயே கொஞ்சமாக ஒரு ஆள் படுத்துக் கொள்வதற்கு இடம் இருந்தது. சங்கவி அங்கு படுத்துக்கொண்டாள். அந்த மருத்துவமனையை சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தன.
இரவு சங்கவிக்கு தூக்கமே வரவில்லை. இன்று முழுவதும் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாக அலைந்தது உடல் வலி அதிகமாக இருந்தது.
நம் மனது ஒரு இலக்கை நோக்கி போகும் போது உடலைப் பற்றிய சிந்தனை வராது. பசி எடுக்காது. தூக்கம் வராது. மனசு ஜெட் வேகத்தில் உடலை சுமந்து செல்லும். மனமானது தன் இலக்கும் எண்ணமும் முடிந்ததும் தொப்பென்று உடலை போட்டு விடும். மனசு ரிலாக்ஸ் ஆன பிறகுதான் உடல் வலி தெரியும். அது மாதிரி மல்லிகாவையும் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கில் இருந்த மனதிற்கு உடல் வலி தெரியவில்லை. கருவை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்ததும் மனசு லேசானது. உடல் பாரமானது. உடல் வலியுடன் புரண்டு புரண்டு படுத்தாள். மல்லிகாவிற்கு ஓய்வுக்காக ஊசி போட்டு இருந்தார்கள்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இவர்கள் தங்கியிருக்கும் அறையானது அந்த வார்டில் கடைசியாக இருந்தது. அதனால் ஜன்னல் ஒன்று இருந்தது. ஜன்னலுக்கு வெளியே பாதாம் மரம் நன்றாக பசுமையாக பெரிய மரமாக நிறைய கிளைகளுடன் இருந்தது. ஜன்னலுக்கு வெளியே அந்த மரம் அசைவது ஜன்னலில் உடைந்த கண்ணாடி வழியே பார்க்கும் போது ஏதோ விசித்திர உருவம் நிற்பது போல இருந்தது. சங்கவிக்கு பயம் லேசாக உச்சி முடியில் அமர்ந்தது. வேறு பக்கம் திரும்பி கண்களை மூடிக்கொண்டாள்.
புது இடம் என்பதால் தூக்கம் அவளிடம் சண்டையிட்டது. தலையணை கேட்டு வம்பு செய்தது. எப்படியோ சமாதானப்படுத்தி லேசாக கண்கள் நித்திரையை அணைக்கும்போது தடதடவென கதவு தட்டப்பட்டது. அந்த கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை. அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள் சங்கவி. நர்ஸ் வேகமாக உள்ளே வந்து அரை மயக்கத்தில் இருந்த மல்லிகா வாயில் ஏதோ மாத்திரையை போட்டு விட்டு சென்றாள். அதற்குள் தூக்கம் சென்னையை தாண்டி திண்டிவனம் சென்றுவிட்டது. தூக்கம் சங்கவியை விட்டு போகும் போது பிளைட் பிடித்து சென்றது. சங்கவியிடம் வரும்போது மட்டும் கட்டை வண்டியில் வருகிறது. வேறு வழியில்லாமல் கண்களை இறுக மூடினாள். ஏனோ கண்களுக்குள் பாதாம் மரம் தெரிந்தது. சங்கவி மீண்டும் திரும்பி அந்த மரத்தையே பார்த்தாள். அந்த பாதாம் மரம் இன்னும் வித்தியாசமான உருவங்களுடன் காட்சியளித்தது. அந்த காட்சிக்கு ரீரெக்கார்டிங் வாசிப்பது போல எங்கிருந்தோ ஆந்தை அலறியது. உடம்பினுள் உள்ள நரம்புகள் எல்லாம் நடனமாடியது.
நம் மனதிற்கு ஏதோ சில உணர்வுகள் வரும்போதுதான் அந்த உணர்விற்கு பாதுகாப்பான உறவுகளைத் தேடுகிறது. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்போது நட்பை தேடுகிறது. நட்பிடம் மனமானது தன் எண்ணங்களை கொட்டிய பிறகு இங்கு லேசாகிவிடும். கேட்ட நட்புக்கு மனம் கனமாகிவிடும்.அன்பாக இருக்கும்போது அம்மாவை தேடும் மனமானது, பயமாக இருக்கும்போது அப்பாவைத் தேடும். திருமணத்திற்கு பிறகு அப்பாவிற்கு இணையான பாதுகாப்பை தரக்கூடிய கணவனின் அன்புக்கு ஏங்குகிறது.
சங்கவி அசோக் பேசுவது போல அவன் நினைவுடன் பேசினாள்." நான் பயமாக இருக்கு என்று சொன்னால் அசோக் நல்லா கண்ணைத் திறந்து பாரு. அது மரம் கிளை காற்றில் அசைவது உனக்கு பயமாக இருக்கு" ன்னு சொல்வான். "எந்த விஷயத்தையும் தூர இருந்து பார்க்கும்போது பயமாகவும், பிரமிப்பாகவும் இருக்கும். அதன் அருகில் சென்றவுடன் தான் இவ்வளவு தானா என்று தோன்றும்". அசோக் சொல்வது போல நினைத்துக்கொண்டு அந்த பாதாம் மரத்தையே பார்த்தாள். சங்கவியின் பயம் மெல்ல மெல்ல விலகியது. சங்கவியின் காதருகே "ஏய்..பொம்மி தூங்கலையா"? என்று அசோக் கேட்பதுபோல இருந்தது. தனியா இருக்கும்போது அசோக் சங்கவியை பொம்மி என்று தான் அழைப்பான். சங்கவி பார்ப்பதற்கு பொம்மை மாதிரி இருப்பதால் அப்படி அழைப்பான். சங்கவியியும் அசோக்கின் நினைவு தரும் தாலாட்டில் மெல்ல கண் மூடினாள்.
வழக்கம்போல வீட்டில் எழுந்திருக்கும் நேரமான மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்தது. சங்கவி எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு குளிக்கப் போகும்போது தான் நேற்று கிளம்பிய அவசரத்தில் வேறு புடவை எடுத்து வரவில்லை, கட்டிய புடவையோடு வந்துவிட்டோமே என்பது நினைவுக்கு வந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சங்கவி, அனைவரும் விழித்துவிட்டால் குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது என்று உணர்ந்து உடனே குளித்து முடித்து, ஈர புடவையை கிராமத்தில் கம்மாயில் குளிக்கும் போது எப்படி கட்டிய புடவையை துவைத்து உலர்த்துவாளோ அது மாதிரி ஒரு முனையை பாத்ரூம் ஜன்னல் கம்பியில் கட்டி விட்டு மறு முனையை இடுப்பில் சுற்றிக்கொண்டு புடவையைக் காய வைத்துக் கட்டிகொண்டாள் அதற்குள் விடிய ஆரம்பித்தது.
மல்லிகாவும் நன்றாக உறங்கி எழுந்தாள். சங்கவி வாளியில் தண்ணீர் வைத்து அவளுடைய உடம்பை துடைத்து எடுத்தாள். "சங்கவி .. டீ குடிக்கணும் போல இருக்கு" என்று மல்லிகா சொன்னாள். "நான் போய் வாங்கி வரேன்"என்று எவர்சில்வர் சொம்பை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள் சங்கவி. அந்த தெரு முனையில் ஒரு டீக்கடை இருந்தது. நிறைய ஆண்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். எப்படி அவர்கள் எதிரில் நின்று கேட்பது என்று தயங்கி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதை பார்த்த டீக்கடைக்காரர் "த..பாருமா யாருமா நீ ஏன் இங்க நிற்கற" என்று குரல் கொடுத்தார்.
" அண்ணா ஒரு டீ வேணும்"என்று தயங்கியபடியே சொன்னாள்.
"எங்க இந்த தெரு முக்குல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கியா "என்று கேட்டுக்கொண்டே டீயை கொடுத்தார். 1.50 ரூபாய்கொடுத்து டீயை வாங்கி வந்து சங்கவியும், மல்லிகாவும் குடித்தனர்.
காலையில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் மல்லிகாவை சோதித்துவிட்டு "பரவாயில்லை முன்னேற்றம் இருக்கு இப்படியே அசையாமல் இருங்க. அதுதான் முக்கியம். அதே நேரம் சத்தான சாப்பாடு சாப்பிடணும்னு" அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். காலை டிபனுக்கு என்ன செய்வது, எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் ஆஸ்பிட்டல் விட்டு வெளியே வந்து நடந்துகொண்டிருந்தாள் சங்கவி. டீக்கடைக்கு பக்கத்தில் அந்த தெருவிலேயே ஓட்டல்கள் இருந்தன. ஒரு இட்லி 2 ரூபாய் என்று போர்டு வைத்திருந்தார்கள். அந்த ஓட்டலில் ஒரு நாள் சாப்பிட்டாலே கையில் இருக்கும் பணம் எல்லாம் கரைந்து விடும். குறைந்த செலவில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று யார், யாரையோ கேட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.
சில ஆண்கள் சங்கவியை மென்று தின்று விடுவது போல பார்த்தார்கள். அவர்கள் பார்வையே சங்கவிக்கு பயமாக இருந்தது. அவர்கள் பக்கமே திரும்பாமல் வேறு திசையில் நடந்தாள். "எங்காவது வீடுகளில் இட்லி சுட்டு விற்பார்களா? "என்று அங்கு இருப்பவர்களை விசாரித்துக் கொண்டே நடந்து சென்றாள். சங்கவியின் பாட்டி அடிக்கடி சொல்வார், "வழி தெரியாத ஊருக்கு போகும்போது பயப்படாதே வழி வாயில் இருக்கிறது" என்று. கருத்து தெரியாத வயதில் சங்கவி "வாயில் பல் தானே இருக்கும் "என்று கிண்டல் பண்ணுவாள். சங்கவிக்கு இப்போதுதான் புரிகிறது வாயால் நாம் வழி கேட்டுக்கொண்டே சீமைக்கும் போய் வரலாம் என்று நினைத்தாள்.
சங்கவி இப்படியே கேட்டுக்கொண்டே ஆஸ்பிட்டல் பக்கத்திலுள்ள முடிச்சூர் என்ற ஊருக்கே வந்துவிட்டாள். அங்க முனையில் ரிக்ஷா வண்டியில் சிலர் அமர்ந்திருந்தார்கள். சங்கவி அவர்களிடம் கேட்கலாம்னு அருகில் சென்றாள்.
" வா...மே எங்க போவணும், நீ ரிக்ஷாவுல குந்து நான் வளிச்சிகினு போறேன்"னு ரிக்ஷாகாரன் சொன்னான். ஏதோ புரியாத பாஷையில் பேசுறாங்கன்னு சங்கவிக்குப் பயம் வந்துவிட்டது. என்ன செய்வது? எங்கே செல்வது? எப்படி இங்கிருந்து போவது? என்று தவித்தாள். மல்லிகாவிற்கு காலையில் சரியான நேரத்தில் உணவு கொடுத்தாக வேண்டும் என்று நினைக்கையிலேயே சங்கவிக்கு கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு "அண்ணா இங்கே எங்கேயாவது வீட்டில் இட்லி கடை இருக்குமான்னு" அப்பாவியாக கேட்டாள். இவள் அண்ணா என்று கேட்டாளே தவிர , அந்த ரிக்ஷாகாரன் இவளை தங்கை மாதிரி பார்க்கவில்லை. பார்வையில் வக்கிரம் இருந்தது. அதை புரிந்துகொள்ளும் அனுபவம் சங்கவிக்கு இல்லை. கிராமத்தில் வளர்ந்த பெண். "தங்கச்சி... ரிக்ஷாவுல குந்து நான் கூட்டிட்டு போறேன்" என்று அந்த ரிக்ஷாகாரன் சொன்னான். "வேண்டாம்.. அண்ணா நீங்க வழியைச் சொல்லுங்க நான் போய்க்கிறேன்" என்று சங்கவி மறுத்தாள்.
ரிக்ஷாக்காரன் சங்கவியை ரிக்ஷாவில் ஏற்றி செல்வதிலேயே குறியாக இருந்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு கை சங்கவியின் தோளின் மீது விழுந்தது.
(சிறகுகள் படபடக்கும்)