மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், தம்பியை நம்பி ஏமாற்றம் அடைந்த அண்ணனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
அண்ணன், தம்பி இருவரும் கல்யாணம் முடித்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அப்பா இல்லாத காரணத்தினால் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து அண்ணன், தம்பிக்கு உதவியிருக்கிறார். தம்பிக்கு கல்யாணமாகி குழந்தையில்லாமல் இருந்துள்ளார். அண்ணனுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். தம்பி பணம் ரீதியாக எந்தவித உதவி கேட்டாலும் அதை உடனே செய்துகொடுக்கும் அளவிற்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் அண்ணன் இருந்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில் தம்பி தொழில் செய்வதற்காக தன்னுடை பேரில் கடன்களை வாங்கி அண்ணன் உதவியிருக்கிறார். ஆனால் தம்பியிடம் யாரோ ஒருவர், வாங்கிய கடனுக்கெல்லாம் உங்க அண்ணன்தான் வட்டி கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். இதை மனதில் உள்வாங்கிக்கொண்ட அந்த தம்பி, தன் மனைவியுடன் வீட்டில் இருந்த நகை மற்றும் கோடிக்கணக்கான பணங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து மனவேதனையுடன் அந்த அண்ணனும் அவரது மனைவியும் என்னை சந்திக்க வந்தனர்.
அப்போது அவரின் மனைவியிடம் பேசும்போது, எத்தனையோ முறை உங்க தம்பி சரியில்லை எதோ தவறு செய்கிறார் என்று என் கணவரிடம் கூறினேன். இப்போது கடன் தொகை பெருகி தொழிலில் வருமானம் குறைந்து இந்த சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்று புலம்ப ஆரம்பித்தார். கொஞ்சம் படித்த பெண் என்பதால் அவரிடம் பொறுமையாக நடந்தை மீண்டும் கணவரைப் பார்த்து குத்தி காண்பித்து பேசாமல் அடுத்து முன்னேற வழியை யோசிங்கள் என்று அறிவுரைகளை கூறினேன். அந்த பெண்ணும் நடந்ததை யோசிக்காமல் அடுத்ததாக முன்னேற மனதளவில் தயாராக ஆரம்பித்தாள். ஆனால் தனது கணவர் மிகவும் வேதனைப்படுகிறார் எதுவும் சரியாக பேசாமல் இருக்கிறார் என்றார். அதன் பிறகு அவரை அழைத்து பேச ஆரம்பித்தேன். முதலில் அவர் என் தம்பியா ஏமாற்றியது! என்று மனதளவில் மிகவும் பாதிப்படைந்திருந்தார். அந்த அதிர்ச்சி அவரைவிட்டு விலகாமல் இருந்துள்ளது. அவரிடம் நான் ஏன் சார் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் புகார் சொல்லும்போது ஏமாற்றியது யாரென்று கேட்பார்கள் என் தம்பிதான் ஏமாற்றினான் என்று என்னால் சொல்ல முடியாது, என்று கலங்கியபடி சொன்னார். ஆனால் அந்த தம்பி, அண்ணன் பேரை சொல்லி இன்னும் நான்கு பேரிடம் கடன் வாங்கி அதையும் திருப்பி தராமல் ஓடியிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இவர் புகார் தெரிவிக்கவில்லை. அந்தளவிற்கு தம்பியின் மீது பாசமாக இருந்திருக்கிறார்.
நான் அவரிடம் தொடர்ந்து பேசும்போது, கடைசியாக நெருப்பை எப்போது தொட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சிறு வயதில் தொட்டதாக கூறினார். அதன் பிறகு ஏன் தொடவில்லை? என்று கேட்டேன். அவர் சுடும் என்றார். இதை யாராவது உங்களிடம் சொன்னார்களா? என்று கேட்டதற்கு சொன்னார்கள் என்று பதிலளித்தார். அதே போல் தம்பிக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்களா? என்று கேட்டபோது, சொன்னார்கள் என்றார். ஏன் பணம் கொடுத்தீர்கள் என்று கேட்டபோது பாசம் என்றார். இப்போது நான் அவரிடம், பாசம் இல்லை நீங்க சின்ன பையன் அதனால்தான் கொடுத்துள்ளீர்கள் என்றேன். அப்போது அவர் என்ன சார் இப்படி சொல்றீங்க என்று ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு நான் உங்க தம்பியின் வாழ்க்கையில் நீங்கள் அண்ணனாக மாறவில்லை இன்னும் சின்ன பையன் தான் என்றேன். தொடர்ந்து அவரிடம் தம்பியிடம் பணம் கொடுத்தது சுட்டுவிட்டது இனிமேல் தருவீர்களா என்றேன். சார் கஷ்டம் என்று யாராவது வந்தால் என்று இழுத்தார்... பின்பு நான் என்னிடன் கவுன்சிலிங் வந்த நான்கு பேர் கஷ்டத்தில் இருக்கின்றனர் பணம் கொடுத்து உதவுங்கள் என்று கூறினேன். இதையெல்லாம் கேட்டு தம்பிக்கு கொடுத்தது தவறா? எனக் கேட்டார். எனக்கு ஒரு புறம் இப்படி பாசமானவரா! என்று பிரம்மிப்பாக இருந்தது. ஆனால் ஒரு பக்கம் சிறுவனைபோல் நடந்துகொள்கிறார் என்று கவலையாக இருந்தது.
பின்பு அவரிடம் என்றைக்காவது உங்கள் மனைவிடம் எப்படி உனக்கு இது முன்பே தெரிந்தது என்று கேட்டீர்களா என்று கேட்க சொன்னேன். அவர் கேட்ட போது அவரின் மனைவி, உங்க தம்பி என்னிடம் பணம் வாங்கும்போது என் கண்ணைப் பார்த்து பேச மாட்டார் ஒரு மாதிரி நடவடிக்கைகள் மாறும் அப்படி இருந்தாலே தவறு செய்கிறார் என்று உணர்ந்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரின் தம்பியின் வாழ்க்கையில் அண்ணி அண்ணனாக இருந்து கண்டித்திருக்கிறார் என்று நான் அவரிடம் சொன்னேன். நான் சொன்ன சின்ன பையன் என்ற வார்த்தை மட்டும் அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து பொறுப்பில்லாமல் தம்பிக்கு இந்தளவிற்கு இடம் கொடுத்து பணத்தையும் கொடுத்து அவனையும் கெடுத்து விட்டோமே என்று உணர்ந்தார். பின்பு அடுத்து வாழ்க்கையில் நடந்ததை யோசிக்காமல் முன்னேற சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தேன்.