தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், அசைவ உணவு விரும்பிகளை பிடிக்காத வீகன் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
அசைவம், மற்ற உயிர்களில் இருந்து வரும் எந்த உணவு பொருட்களையும் சாப்பிடாத வீகன் மனநிலை கொண்ட ஒருவர் என்னிடம் வந்தார். ஆபிஸில் வேலை பார்க்கும் இவருக்கு, அசைவ உணவு விரும்பிகளை பிடிக்காமல் போகிறது. அப்படி அந்த அசைவ உணவு விரும்பிகளை, எப்படியாவது அந்த வேலையில் இருந்து அனுப்பிவிடுவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் வீகனாக இருக்க வேண்டும் என்ற மனநிலை வருகிறது. இதனால், பல பிரச்சனைகளை சந்திப்பதாக அவர் என்னிடம் வந்தார்.
தான் நினைத்தது மட்டும் இங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பது என்பது என் ஆட்சி, என் இடம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அவரிடம் நான், மனிதனுடைய ஆரம்பக் கால தொழில், வேட்டையாடுவது தான். வேட்டையாடி, இறைச்சி உண்டு பயணிப்பது தான் மனிதனுடைய வேலையாக இருந்தது. வேட்டையாட இயலாமல் போகும் போது, என்ன கிடைக்குதோ அதை சாப்பிடுபவர்கள் தான் வெஜ் என்ற இன்னொரு முறை உருவாகி இருக்கக்கூடும் என்பது என்னுடைய கணிப்பு. புத்திஸம் ஃபாலோவ் செய்யும் பூட்டான் நாட்டில், முழுக்க முழுக்க சிக்கன், மட்டன், பீப் கொட்டிக்கிடக்கிறது. இங்கு இருக்கும் மக்களை எப்படி வகைப்படுத்துவீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அப்படியா சார் என்று சொன்னார். அப்படியா என்று சொல்பவர்கள், இன்னும் இந்த உலகத்தை பார்க்கவில்லை என்று அர்த்தம். நாம் பார்த்த உலகத்தில், நாம் ஏற்படுத்திய விதிகளை வைத்துக்கொண்டு அது தான் உலகம் முழுக்க சரி என்று நினைப்பதை விட ஒரு பெரிய முட்டாள்தனம் என்ன இருக்க முடியும்?.
அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களில் நல்லவர்களே கிடையாதா?. சிறப்பான மனிதர்களே கிடையாதா? அசைவ உணவுகளையே ஒரு வணிகமாக உலகம் முழுக்க வியாபாரம் செய்கிற மனிதர்கள் இல்லையா? என்று கேட்டதற்கு அவர் கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறார். அவரிடம் பேச பேச புரிந்துகொள்கிறார். மனிதர்களிடம் இருக்கும் தன்மையை பார்ப்பதற்கு பதிலாக தன் பார்வையிலேயே அவர்களை பார்த்து குறை சொல்கிறார்கள். அசைவ உணவுகள் சாப்பிடுவர்கள் கெட்டவர்கள் தான் என்ற பார்வை இருப்பதினால், சிறப்பான மனிதர்களை கூட இழந்திருக்கக் கூடும் என்றேன். அசைவ உணவுகளையும் சாப்பிடுவதற்கு தான் இந்த பல் வலிமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டுமென்றால், சாதாரண பல்லாக படைக்கப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், படைப்பையே கிண்டல் செய்து கேள்வி கேட்கிறோம். இது எப்படி சரியாக இருக்கமுடியும் என்று அவரிடம் கேட்கிறேன்.
இந்த மனநிலையை வைத்துக்கொண்டு அந்த நபர் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறார். அசைவு உணவுகள் சாப்பிடுவதால், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பை கூட அவர் இழந்திருக்கிறார். மனிதர்கள் அணியும், பெல்ட், ஷூ போன்ற பொருட்கள் எல்லாம் மற்ற உயிர்களின் தோள்கள் மூலம் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போட்டிருக்கும் ஷு எதில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டேன். நீங்கள் அந்த மிருகத்தை கொல்லாததால், நீங்கள் சைவமா?. அல்லது பயன்படுத்துவதால் மட்டும் சைவமா?. சொல்லப்போனால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கு பின்னாலும் ஒரு உயிர் கொல்லப்படுவதற்கு எல்லாருக்கும் பங்கு இருக்கிறது. அதனால், இதில் நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவரிடம் சொன்னதற்கு பேச முடியாமல் இருக்கிறார். இந்த நேரத்தில் இரண்டு காபி வருகிறது. சக்கரை போட்ட காபியை அவர் குடிக்க போகும்போது, ஏதோ ஒரு சக்கரை ஆலையில், சக்கரையில் மாட்டு எலும்பு போட்டுவிட்டதாக சொன்னேன். உடனே காபியை குடிக்காமல் கீழே வைத்துவிட்டார். நாம் சைவம் என்று நினைக்கும் பொருட்களில் என்ன என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. வீடு கட்டும்போது கூட, பல்லாயிரக்கணக்கான புழுக்களை கொன்று தானே வீடு கட்டுகிறோம். அப்படியென்றால், நீங்கள் நான் வெஜ் கிடையாதா? என்று கேட்டேன். நான் தான் அதை சாப்பிடவில்லையே என்றார். இப்படியாக எங்களுடைய பேச்சு நகைச்சுவையாக மாறுகிறது.
எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. மனசாட்சிக்காக நாம் இன்னொரு உயிர்களை கொல்லவில்லை என்று நினைக்கிறமோ தவிர நடக்கும் போது, அமரும் போது தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொல்ல தான் செய்கிறோம். எங்களுக்குள் நடந்த விவாதத்தில் சரி, தவறு என்பது ஒன்றும் கிடையாது என்பது தான் அவர் புரிந்துகொண்டார். இந்த விவாதம் நீண்டுகொண்டே தான் போகும். மனித தன்மையோடு வாழ்வதற்கும், வீகனுக்கும், அசைவு உணவு விரும்பிகளுக்கும் சம்மந்தமே இல்லை. மனிதத்தன்மை என்பது வேறு, சாப்பிடுவது என்பது வேறு என்று சொன்னேன். இப்படியாக அந்த கவுன்சிலிங் முடிந்தது. நீண்ட நாட்கள் கழித்து அவர் என்னை சந்தித்து பேசினார். முன்னாடியெல்லாம், கம்பேனியில் புதிதாக சேரும் நபர்களின் பெயர்களை வைத்து அவர் என்ன சாப்பிடுவர் என்பது கண்டுபிடித்து வெளியே அனுப்பிவிடுவதாகவும், இப்போது, மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கவனிக்காமல் வேலை செய்யும் நபர்களை மட்டுமே வேலைக்கு சேர்ப்பதாகவும் சொன்னார்.