தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், பெற்றோர் கொடுத்த பாராட்டால் வயதுக்கு மீறி பேசும் சிறுவனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
தன்னுடைய 12 வயது பையன், வயதுக்கு மீறிய பேச்சு பேசுகிறான். எது சொன்னாலும், அதற்கு அதிகமாகப் பேசுகிறான் என வருத்தத்துடன் ஒரு பெற்றோர் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தனர். சிறு வயதிலிருந்து அவனிடம் மற்ற குழந்தைகள் போல் அவன் இல்லை எனப் பேசி பேசியே இப்படி வளர்ந்த பின் வயதுக்கு மீறி பேசுகிறான் எனச் சொன்னார்கள்.
ஒரு குழந்தையை மேடையில் பேச வைக்கிறோம். முதிர்ச்சியடைந்த மாதிரி அந்த குழந்தையினுடைய பேச்சை கேட்டு நாம் கைதட்டுகிறோம். இதே பேச்சை முதிர்ச்சியடைந்த ஒருவர் பேசினால் கைதட்ட மாட்டோம். ஏனென்றால், குழந்தையின் குழந்தை தனம் இல்லாமல், முதிர்ச்சியடையும் நடவடிக்கையை நோக்கி நாம் நகர்கிறோம். குழந்தை தனம் உள்ள குழந்தைகளை நமக்கு பிடிப்பதில்லை. மாறாக, அது முதிர்ச்சியடைந்த மாதிரி பேசினால் அந்த குழந்தையை நமக்கு பிடிக்கிறது. அதனால், குழந்தைகளை முதிர்ச்சி ஆக்கிவிட்டால் நமக்கு பல விஷயங்களில் எளிது என்பதற்காக குழந்தைகளை வயதைக் கடந்த முதிர்ச்சியை நோக்கி நகர்த்துகிறோம். திரைப்படங்களில் கூட குழந்தைகள் வயதைக் கடந்து பேசினால் நாம் அதை ரசிப்போம்.
இதனால், தனக்கு அறிவு அதிகம் இருக்கிறது என எல்லோரும் சொல்கிறார்கள் என்ற ஸ்டேட்டஸிற்குள் குழந்தைகள் போய்விடும். அதன் பிறகு, ஒரு ஈகோ டெவலப் ஆகி யார் சொன்னாலும் கேட்காமல் போய்விடும். இது தான் இந்த பையனுக்கு அவனது பெற்றோர் செய்திருக்கிறார்கள். சிறு வயதில் முதிர்ச்சியடைந்த மாதிரி பேசியதால் பெற்றோர் ரசித்து பாராட்டியத, வளர வளர தன்னை அறிவாளி என்ற நினைத்து யார் சொன்னாலும் அவன் கேட்பதில்லை. இது தான் இப்போது பிரச்சனையாகி நிற்கிறது. இதனால், அவனால் ஒரு சின்ன தோல்வியைக் கூட தாங்க முடியாது. மேலும், ஜெயித்தே ஆகவேண்டும் என்பதற்காக அனைத்து தவறுகளையும் அவன் செய்ய நினைப்பான். நான் அந்த பையனை கூப்பிட்டு பேசியதில், நான் ஒன்றை சொல்ல அதற்கு எதிர்மறையாக ஒன்றை பேசுகிறான். என்ன சொன்னாலும், அதற்கு எதிர்மறையாக பேசினால் புத்திசாலி என இன்னமும் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று எக்ஸ்ப்ளோர் செய்வது தவறு இல்லை. ஆனால், அப்படி குழந்தைகள் செய்வது பெருமை என்று பெற்றோர் நினைப்பது தான் தவறு. மற்ற குழந்தைகள் மாதிரி தன்னுடைய குழந்தை இல்லை என நினைப்பதால் சாதாரண குழந்தைகளுடன் அந்த குழந்தை ஒத்துப்போவதில்லை. பின்னாளில், பெற்றோருடனே ஒத்துப்போகாமல் போகிறது. படிப்பு விஷயத்தை பற்றி அவனிடம் பேச பேச எதிர்மறையாக ஒன்றை பேசுகிறான். இப்படியே பேச பேச கடைசியில், அவனுக்கு ஃபிலாசபி மீது ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடித்தேன்.
அதன் பிறகு, அவனுடைய அம்மாவிடம், மகன் எதை பேசினாலும் அதை பாராட்டுகிறீர்கள். நான் அவனிடம் பேசும் போது, அவனுடைய அந்த ஹைப்பை உடைத்து பேசினேன், தனக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லிவிட்டான் என சொன்னேன். எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே சொல்லும் பெற்றோர்கள் செய்வது தவறு தான். நியாயமான விஷயத்திற்கு மட்டும் பாராட்டாமல் எதை சொன்னாலும் பாராட்டுவதும் தவறு தான். எந்தளவுக்கு முயற்சி செய்ய வேண்டுமோ அந்த முயற்சியை செய்து அந்த குழந்தை தோல்வி அடையும் பொழுது பக்கத்தில் இருக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இந்த பையன் ஃபிலாசபி முதலாம் ஆண்டு படிக்கும் போது என்னிடம் ஒருமுறை, என்னுடைய அப்பா அம்மா, நான் என்னவாக இல்லையோ அதுவாக என்னை உருவாக்கிட்டாங்க சார் எனச் சொன்னான். நான் புரியவில்லை என சொன்ன போது எதிர்மறை கேள்வி கேட்காமல் சிம்பிளாக பதில் சொன்னான். அதற்கு முன்னாடி ஹைப்போடு பழக்கப்பட்ட பையன், இப்பொழுது அதை குறைத்துக் கொண்டு வருகிறான்.