மனைவி இறந்த பிறகும், உடன் வாழ்ந்த நினைவுகளை விடமுடியாமல் சுமந்து இருக்கிறவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
தன் நண்பருக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று ஒருவர் அனுகினார். தன் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த தன் நண்பர் அவர் இறந்த பிறகு தற்போது முற்றிலும் வேறொரு ஆளாக இருப்பதாக கூறி எவ்வாறு உங்களிடம் அழைத்து வருவது என்று கேட்டார். பொதுவாக எல்லாரும் செய்யும் தவறு, பாதிக்கப்பட்டவரிடமே சென்று கவுன்சிலிங் வா என்று அழைப்பது. அது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே என்னை சந்தித்தவரிடம், உங்கள் நண்பரிடம், நீ வாழ்வது சரிதான், இன்றும் நன்றாக அதை சிறக்கவைக்க என் நண்பர் ஒருவரிடம் சாதாரணமாக பேசலாமா? என்று சொல்லி கூட்டி வாருங்கள் என்றேன். அந்த நண்பரும் என்னைப் பார்க்க வந்தார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரிடம் வேறு எந்த ஒரு புகாரும் இல்லை. சந்தோஷமாக தான் இருக்கிறார். இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, இறந்த தன் மனைவியுடன் வாழும்போது கேட்ட பாடல்களை கேட்டாலோ, சேர்ந்து போன இடங்களுக்கு சென்றாலோ, பழைய நினைவுகள் வந்து நாள் முழுதும் மனது வலிப்பதாக கூறுகிறார். எனவே எங்கு செல்வதையும் முற்றிலும் தவிர்த்து வருவதாக சொல்கிறார். இறந்த என் மனைவியை பற்றி நீண்ட மாதங்கள் கழித்து யாரேனும் வந்து பேசினால், அவர்கள் போன பிறகு அவ்வளவு மனவலியை கொடுக்கிறது என்றார்.
நான் அவரிடம், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் முகத்தில் சட்டென்று மகிழ்ச்சி. தன் மனைவி தத்ரூபமாக கண்ணாடி ஓவியங்கள் வரைவார் என்று, என்னைக் கூட அப்படி ஒரு ஓவியம் வரைந்து திருமணத்திற்கு பின்பு பரிசளித்தார் என்றும் சொன்னார். நீங்கள் ஏன் உங்கள் மனைவியைப் போன்று நிறைய கண்ணாடி ஓவியங்கள் வரையும் திறமையானவர்கள் பயிலும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று பார்க்கக் கூடாது என்று கேட்டேன். உங்கள் மனைவியின் திறமைகளை ரசித்துச் சொல்கிறீர்கள், ஒருவேளை யாருக்கேனும் அந்த திறமையை வெளிப்படுத்த உதவி தேவைப்பட்டு, நீங்கள் அதற்கு உதவினால் அப்போது எப்படி உணர்வீர்கள் என்று கேட்டேன். தயக்கத்துடன், இப்போது தெரியவில்லை, ஆனால் சந்தோஷமாகத் தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, போய்ப் பார்க்கிறேன் என்றார்.
சொன்னது போல, மும்பை ரூரலில், ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்று, அங்கு தன் மனைவி போல பல திறமையானவர்கள் வரைந்திருக்கும் கண்ணாடி ஓவியங்களைப் பார்க்கிறார். அங்கிருக்கும் மேலாளரிடமும் பேசுகிறார். அவர் மூலமாக, கல் உடைக்கும் வேலையில் இருக்கும் ஒரு சிறிய பெண், இங்கு அனைவரையும் விட சிறப்பாக ஓவியம் வரைவாள், ஆனால் அவளால் இங்கு வர அவளுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்று கூறுவதைக் கேட்கிறார். என்னிடம் வந்து இதைப் பகிர்ந்து, ஏனோ மனதிற்கு கேட்டதிலிருந்து உறுத்தலாக இருப்பதாகச் சொன்னார். நான் அந்த பெண்ணைச் சென்று சந்தித்து திறமை இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்திற்கு முடிந்ததை செய்யமுடியுமா என்று பார்க்கலாமே என்று ஒரு பரிந்துரை மட்டும் செய்தேன்.
மூன்று மாதம் கழித்து சாதாரணமாக பேசும்போது, அந்த பெண்ணிற்கு மாதம் ஏழாயிரம் கிடைத்தால் அந்த வேலையே விட்டுவிட போதுமானதாக இருந்தது என்று அறிந்து, அவர் மாதம் பத்தாயிரம் குடுத்து உதவி இருக்கிறார். இப்போது அந்த பெண் அந்த பள்ளியில் முழு நேரம் செலவிட்டு நன்கு படித்து முடித்து ஒரு ஓவியம் வரைந்தால் அந்த பெண்ணிற்கு சுமார் பதினைந்தாயிரம் கிடைக்கும் அளவிற்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அந்த பெண்ணிற்கும் இவரிடம் நல்ல அழகிய பாச உறவாக மாறி இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஒரு வருடம் கழித்து சந்திக்கையில், என் மனைவி போன பிறகு நாங்கள் மூவர் என்று நினைத்தேன். இப்போது அந்த பெண்ணையும் சேர்த்து எனக்கு மூன்று மகள்களாக மீண்டும் நால்வர் என்று ஆகிவிட்டோம் என்றார்.
அவரிடம், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றும், முதலில் என்னை வந்து பார்த்தபோதும், இப்போதும் என்ன வித்தியாசம் உணருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சற்று யோசித்துச் சொன்னார், நான் முதலில் வந்தபோது நான் இழந்தது மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. இப்போது என் மனைவியின் இழந்த வலி இன்னும் இருக்கிறது என்றாலும், அவரின் திறமையை நான் இழக்கவில்லை, இந்த பெண்ணை சந்தித்த பின், அதை வேறொரு பக்கமாக தொடங்கி வைத்து விட்டேன் என்றார். அந்த பள்ளி மேலாளரிடமும் இதே போல வேறு ஏதேனும் மாணவருக்கு நிதி உதவி தேவைப்பட்டால், தன்னை அழைக்குமாறு கூறி இருக்கிறேன் என்று மன நிறைவோடு சொன்னார்.