Skip to main content

"என் கல்லறையின் மேல் அமர்ந்து கொண்டு..." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #5

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

என்னைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் வெறும் வார்த்தைகளின் கோர்வைகளில் என் வாழ்க்கையின் வலிமைகளை உங்களுக்கு உணர்த்திட முடியுமோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் முயற்சிக்கிறேன், நாப்தலினும் பச்சை ரத்தமும் கலந்த வாசனை நாசியில் துளைக்க, உடைந்த ரத்தத்திட்டுகளின் ஓவியத்தீற்றல்களோடு நான் அந்த இருள் கலந்த கர்ப்பப்பையின் வெளியே பலங்கொண்டு இழுக்கப்பட்டேன். கசிந்த வெளிச்சத்தில் கூசியது கண்கள் மட்டுமல்ல என் குறி குறித்த சோதனையில் பெண் என்றதும் சுருங்கி முகங்களும் தான். முகச்சுழிப்பின் மூலத்தை அறிந்து கொள்ளும் அறிவினை இறைவன் படைக்கவில்லை அப்போது. தாயின் மார்ப்புத் தட்டையின் பாலைச் சுவைத்த எனக்கு செயற்கையாய் கண்ணாடி புட்டியின் ரப்பர் சுவை புகுத்தப் பட்டது. பசுவின் கதகதப்பை இழந்த கன்றுக்குட்டியானேன் மூன்றே மாதங்கள் அவள் இறைவனடி சேர்ந்துவிட்டாள் அவளின் ஸ்வாசமும், ஸ்பரிசமும், எனைப் பார்த்து வியந்த, ரசித்த கண்களும் வெகு சீக்கிரம் பிரிந்து சபிக்கப்பட்டதை கூட உணர முடியாமல் ஏதோ ஒரு கரங்களில் அடைக்கலமானேன்.

இயற்கையின் கோரம் நிவாரணம் கிடைக்காத புயலாய் எனைத் தாக்கத் தொடங்கியது. அந்த கதாநாயகன் கதாநாயகியைப் போல் என்னால் தனிமையில் இனிமை காண முடியவில்லை. என்னுள் நான் ..... நான்....நான் மட்டுமே மேலோங்கி நின்றேன் ஆணவத்தின் வார்த்தையாம் நான் அதனில் இருந்தே என் அனைத்தையும் எடுத்துக்கொண்டேன். தாயின் இறப்பு தந்தையை புதுமாப்பிள்ளை ஆக்கியது. பிஞ்சு அதிரங்கள் அமிர்தப் பால் அருந்தும் போது முகம் மூடிய அந்த முந்தானைச் சுகத்திற்கு ஆசைப்பட்டு, சிறு பட்டும் கை நிறைய இனிப்புகளுமாய் தந்தையின் கரத்தோடு மணப்பந்தலில் நான்! கல்யாண மேடையிலே இதென்ன யாரோ யார்யாரோ நகர்த்த மீண்டும் தனிமை. வந்தது அன்னையில்லை தந்தையின் மனைவி என்று காலதாமதமாகவே புரிந்தது. என் சிறு தேகம் அவளின் மடிச்சுகத்தில் அமிழ்ந்து கொள்ள தகித்தது. வளையல் குலுங்க பால் சோற்றை பிசைந்து தரும் தருணத்திற்காய் ஏங்கிய என் முன் பெரும்பாலும் நீட்டப்பட்டது சில பருக்கைகள் தான். முந்தானையின் முக்கிய நூலாய் தந்தையை மட்டுமே ஆமோதித்திருக்கிறாள் என் புது அன்னை. மீண்டும் நான்... நான்... என வாழ்வின் முழுமைக்கும் ஒருமையானேன். என்னைத் தோண்டியே தோண்டியே தனித்தனி பாத்திகளாய் அன்பை விதைத்துக் கொண்டேன்.
 

xf



எப்போ பாரு ஒரே சண்டை எனக்காக இவளையும் பார்த்துக்கோ கொஞ்சம் பணம் தர்றேன் என்று சில சலவை நோட்டுக்கள் அப்பாவிடம் இருந்து கைமாறிட நானும் அகதியாய் சென்றேன் அத்தையின் வீட்டிற்குள்! நான் அறியவில்லை வறுமையின் வீட்டில் நான்காவது தட்டு விருந்துண்ண போய் தரித்திர சாயம் பூசிக்கொள்வேன் என்று! மையமாய் கிழிந்த சிறு தையல் பூசிய உடைகளில் மறைய வில்லை பூரித்த உடல். கருயைிலும் காமம் பிறக்கும் போலும், வயதிற்கே உரிய வாளிப்பு சற்று மிதமிஞ்சி நிற்க, அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்துவீட்டு தாத்தா என்று உடைகளின் அடியில் எதையோ தேடிய விரல்களைத் தவிர்க்க முடியவில்லை, விடுங்களேன் வலிக்கிறது என்று கத்திய உதடுகள் சிறைபிடிக்கப்பட்டன, புரியாத பாஷைகள் புரிந்துகொள்ள முடியாத பயமுறுத்தல்கள் என்று நீண்டது என் இரவுகள். வசவுகளே வாழ்க்கையாகிப் போனதின் உச்சம்.

ஐந்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் நான் பெற்ற குறைந்த மதிப்பெண்கள் எதன் காழ்ப்புணர்ச்சியோ நிர்வாணமாக்கி நிற்கவைத்து விட்டாள் ஆதரவு அளிப்பதாக சொல்லிக்கொண்டு இருந்த அத்தை. அரைக்கம்பத்தில் பாதி கிழிந்தாடியப் பட்டத்தை விடவும் கொடுமையான நிலைமை. என் சிறு கைகளுக்கு சக்தியில்லை வெளிச்சமிட்டு இருக்கும் அந்த அங்கத்தை மறைக்க, பயந்து உடலைக் குறுக்கி சிறு சப்தத்திற்கும் மாடிப்படியில் அடியில் கோணிச் சாக்கிற்குள் புதைய சிகப்பு எறும்புகள் என்னை ஆசையோடு முத்தமிட்டது. தடித்த உடலோடு அந்த வலியை அனுபவித்தவர்களுக்குத்தான் தான் தெரியும். நரகம் பூலோகத்திலும் உண்டென்பது.நிராதரவாய் நின்றது இரண்டு முழு பத்து நிமிடங்கள் அதன் அதிர்வுகள் இப்போதும் கூட என் உடல் முழுக்க! ஏதோ ஒரு கண்கள் என்னை இம்சித்துக் கொண்டு இருப்பதைப் போலவே இருந்தது எனக்குள் இருக்கும் நான் என்ன தொலைத்திருக்கிறேன் என்றே தெரியாமல் தேடிக்கொண்டு!

பால்யம் மறைந்து பருவம் எய்திய நொடிகள் எல்லாம் கடந்து செல்லும் ஏக்கப்பெருமூச்சுகளையும், வக்கிரப்பார்வைகளையும் முதுகில் ஊறும் தேளாய் கடந்து என் பெண்மையைக் காக்கப் போராட வேண்டியிருந்தது. தேடிச் செல்லும் யாவும் எளிதில் கிடைப்பதில்லை ஆனால் நான் தேடலாமலேயே எனக்கு காதல் 
கிடைத்தது எனக்குள் இருக்கும் நான் அவனால் அழிந்தாள். ஊரையும் உறவுகளையும் எதிர்த்து எனைக் கரம் பிடித்த என் காதலனை நினைத்து தலை கொள்ளா பெருமை, தாரை வார்த்துக்கொடுக்க சிற்றன்னையுடன் அப்பாவும் இதுதான் உன் தம்பி தங்கைகள் என்று அவரின் ஆண்மையை பறைசாற்றிக் கொள்ள வந்திருக்க, ஆங்காங்கே தொட்டுப்பார்த்த அண்ணாவும் மாமாவும் முதிர்கண்ணியாவாள் கைப்பற்றலாம் என்று நினைத்த நினைப்பில் மண் விழ நான் அவரின் துணையானேன்.

 

hj



இனிமையாய் கழிந்த நாட்கள் கசப்பாக சில வருடங்கள் பிடித்தன. எந்த நிறம் மயக்கியது என்று சொல்லப்பட்டதோ அது இன்று அடிக்கும் கறுப்பாகிப் போனது, தெத்துப்பல்லின் கவர்ச்சியில் சிரிக்கச் சொல்லி ரசித்த கண்கள் இன்று கனலை மட்டுமே கக்கிக்கொண்டு இருந்தது?! மொத்தத்தில் வெறும் நான்கு வருடத் தாம்பத்தியத்தில் சாயம் போனது எங்கள் காதலின் சொல்லாடல்கள். தினந்தோறும் வெகு சீக்கிரமாகத் தோற்றுபோனேன் அவனுடனான அந்த வார்த்தைப் போராட்டத்தில்! நான் அவனிடம் கேட்டேன் இரு நொடிகளில் வாழ்விழக்கும் தீக்குச்சியா நம் காதல் என்று! அலட்சியப் பெருமூச்சோடு நீ என் அடிமை உனக்கு சோறும் துணியும் போடுவதே பெரியது இன்னும் சலுகைகள் எதிர்பார்க்காதே என்றான்.

சோதனை பெட்டிக்குள் கரையும் சோடியம் உப்பின் கரைசலானது என் வாழ்க்கை இனியென்ன செய்யப் போகிறேன் நான். அவன் வரையில் நான் நிழலாய் பின்தொடர வேண்டியவள், மனைவி என்ற அடையாளத்துடன் நகைகள் பூட்டப்பட்ட பட்டுப்புடவை சுற்றிய ஒரு அக்மார்க் அடிமை. அந்த நிழலை உடைத்து நிஜத்தை புரிய வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ஏதோவொரு நிபந்தனைகளின் அடிப்படையில் அவனின் அன்பு படிக்கட்டுகளை அமைக்கிறது.
 

gh



ஏதோவொரு சூடான அமிலத்தின் எரிச்சலை விழுங்கும் தொண்டைக்குழியின் பயத்தைப் போல ஒரு விநாடி நிதானித்து சொல்கிறேன் நான் என் இறப்பின் செய்தியை! இதை படிக்கும் போதாவது உன் உதடுகளின் முகமூடியைக் கிழித்துவிட்டு உண்மையான புன்னகையை எனக்குத் தா காதல் கணவனே. ஆனால் என் தந்தையைப் போல நான் நசுக்கப்பட்ட குப்பைக் காகிதத்தின் கிறுக்கலாய் அவன் வரையில் சிதறிய கண்ணாடிச் சில்லுகளாய்! அழகாய் ஒதுக்கிவிட்டு புதியவேடம் போடத் தொடங்கிவிட்டான். இன்னொரு விட்டில் பூச்சியத் தேடி! பிறப்பில் விலகிய இருட்டு இறப்பில் என்னை கட்டிக்கொண்டது. நான் இதோ பற்றியெரியும் அந்த சுடுகாட்டின் என் கல்லறையின் மேல் அமர்ந்து கொண்டு உறங்கும் பிணங்களையும் அதை புதைக்க வரும் எதிர்கால பிணங்களின் அலறல்களையும் ரசித்துக் கொண்டு இப்போது என்னுள் வளர்ந்த நான் முழித்துக் கொண்டாள். மறுபடியும் உடல் அழிந்த ஆன்மாவிற்குள் தன் தேடுதலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

என் பிரதிபலிப்பாய் இன்னும் நிறைய நான்கள் இருக்கிறார்கள் அவர்களை தயவு செய்து வளரவிடாதீர்கள்.

 

சார்ந்த செய்திகள்