எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு. கூச்சல் குழப்பம். நாடாளுமன்றம் தினமும் அமளி துமளிப்பட்டது. அரசு இயந்திரத்தை முடக்குவதே நாஜிகளின் நோக்கமாகி விட்டது.
70 லட்சம் பேருக்கு வேலையில்லை. ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டன. பொருளாதார மந்தம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பசி அழையா விருந்தாளியாகப் படுத்திருந்தது.
வெளியே மக்கள் வறுமையில் சிக்கி, நொந்து நூலாகிக் கொண்டிருந்தனர். வேலையில்லா திண்டாட்டம் வாழ்க்கையை மூச்சுத் திணறவைத்தது. யார் முகத்திலும் தெளிச்சியில்லை. எங்கும் சோர்வு. பதற்றம். கம்யூனிஸ்ட்டுகளுடன் மோதுவதே நாஜிகளின் வேலையாகி விட்டது.
தெருக்களில் எப்போது சண்டை வெடிக்கும். எத்தனை பேர் சாவார்கள் என்பது நிச்சயமில்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது.
மக்களுக்கு நல்லது செய்யும் எந்த முயற்சியையும் அவர்கள் நிறைவேற்ற அனுமதிப்பதில்லை. ஆபாசமாகவும், ரவுடித்தனமாகவும் அவையை ஸ்தம்பிக்கச் செய்வதே வேலையாகி விட்டது.
ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. அவர்களுடைய நோக்கமே குடியரசை சீர்குலைப்பதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்தக் கூத்துகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
மன்னராட்சிக் காலத்தில் ராணுவ தளபதியாக இருந்த ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் 1932ல் முடிவுக்கு வருகிறது. இப்போதே, அவருக்கு வயது 84 ஆகி விட்டது. இன்னொரு முறை பதவிக்கு வந்தால் அவருடைய பதவிக்காலம் முடியும் போது, அவருக்கு 92 வயதாகிவிடும்.
ஏற்கெனவே அவர் உடல்நிலை சரியில்லை. துடிப்பாக செயல்படவும் முடியவில்லை. நாட்டின் நெருக்கடி அவரை பாடாய் படுத்தி வந்தது. மீண்டும் அவர் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. ஆனால், அவருக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் குழப்பம்தான் மிச்சமாகும் என்று பிரதமர் புரூனிங் கூறினார்.
நாஜிகளின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஹிட்லரின் ஆதரவு இருந்தால், ஹிண்டன்பர்கின் பதவிக்காலத்தை நீடித்துவிடலாம் என்பது புரூனிங்கின் திட்டம்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிண்டன்பர்க்கை சந்தித்தார் ஹிட்லர். அவருடைய நம்பிக்கையைப் பெற்று பிரதமராவது அவரது எண்ணம். தன்னுடைய எண்ணத்தை... இல்லையில்லை... ஆசையை, ஹிண்டன்பர்கிடம் தெரிவித்தார் ஹிட்லர்.
ஆனால், ஹிண்டன்பர்கிற்கு ஹிட்லரைப் பிடிக்கவில்லை. அவருடைய செயல்பாடுகள், குடியரசுத் தத்துவங்களுக்கு மாறாக இருப்பதை அனுபவரீதியாக அவர் தெரிந்து வைத்திருந்தார்.
ஹிட்லரை பிரதமராக நியமிக்க முடியாது என்று கூறிவிட்டார். மக்கள் நலனில் அக்கறை இருப்பது உண்மையானால், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அவருடயை கட்சியினரைக் கட்டுப்பாடாக நடந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்று அறிவுரை வேறு சொன்னார்.
ஹிட்லர் வெளியேறிவிட்டார். பின்னர், அங்கிருந்தவர்களிடம் ஹிண்டன்பர்க் இப்படிச் சொன்னார்...
“போஸ்ட் மாஸ்ட்டருக்குத்தான் இவர் லாயக்கு”
ஆனால், நிலைமையின் தீவிரத்தை அவர் யோசிக்கவில்லை. ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடாவிட்டால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்பது புரூனிங்கிற்கு தெரிந்தது.
எனவே, ஹிட்லரை சமாதானம் பேச வரும்படி அழைக்க முடிவு செய்தார்.
1932 ஜனவரி மாதம் பிரதமர் புரூனிங்கிடமிருந்து ஹிட்லருக்கு ஒரு தந்தி வந்தது. குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
“இப்போது அவர்கள் என் பாக்கெட்டில். தங்கள் பேச்சுவார்த்தையில் என்னையும் கூட்டாளியாக அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”
ருடால்ப் ஹெஸ்ஸிடம் கூறினார் ஹிட்லர்.
ஆனால், பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை. பிரதமர் பதவியைத் தரமுடியாது. ஜெர்மன் குடியுரிமை இல்லாத ஹிட்லர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஹிண்டன்பர்க் உறுதியாக கூறிவிட்டார்.
ஹிட்லர் தடுமாறிவிட்டார். ஏதேனும் செய்ய வேண்டும். நான்கு ஆண்டுகள் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து, உயிரை துச்சமாக நினைத்து போர்க்களத்தில் போராடிய எனக்கு ஜெர்மன் குடியுரிமை இலலையா? ஜெர்மானிய தேவதை இதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள். குமுறினார் ஹிட்லர்.
ஆனால், நல்லவேளையாக புரூன்ஸ்விக் மாநிலம் நாஜிக் கட்சியின் கையில் இருந்தது. அந்த மாநில அரசு ஹிட்லரை ஜெர்மன் குடிமகனாக அங்கீகரித்து விட்டது.
இனி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை.
ஹிண்டன்பர்க்கிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் அவரை ஆதரிப்பதாக உறுதியளித்தன. ஹிட்லரின் வளர்ந்துவரும் செல்வாக்கு அவருக்கு எதிராக எல்லோரையும் திருப்பியிருந்தது. அவர் வேறு யாரிடமும் உதவி கேட்பதாக இல்லை. தன்மீது மட்டும் நம்பிக்கை வைத்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட அவர் முடிவு செய்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதால் ஹிண்டன்பர்க் தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.
ஜெர்மன் அதுவரை கண்டிராத வகையிலான பிரச்சார யுக்திகள். நாடுமுழுவதும் நாஜிகள் சூறாவளியாக சுழன்றனர். எங்கு நோக்கினாலும் ஹிட்லரின் படங்கள்தான். பிரமாண்டமான ஊர்வலங்கள். நாடுமுழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஆரவாரமான ஊர்வலங்கள்.
ஒரேநாளில் ஏழெட்டு இடங்களில் ஹிட்லர் பேசினார். ஆனால், அவருக்கு ஹிண்டன்பர்க்கை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்துவதற்கு இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே அவர் விரும்பினார்.
கோயபல்ஸுக்கு வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் புதிய புதிய பிரச்சார யுக்திகளை கடைப்பிடித்தார். ஹிட்லரின் பொதுக்கூட்ட பேச்சுகள் செய்திப்படங்களாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளடங்கிய கிராமங்களில் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. இது அப்போது புதிது. ஏராளமானோர் அந்த படங்களைப் பார்த்தனர்.
ஆனால், 1932 மார்ச் மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், இருவருக்குமே பாதிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை. ஜெர்மன் குடியரசுத்தலைவர் தேர்தலில், மொத்தம் பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
ஹிண்டன் பர்கிற்கு 49 சதவீத வாக்குகளும், ஹிட்லருக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன. பதிவான வாக்குகளில் ஹிட்லருக்கு 1 கோடியே 13 லட்சம் வாக்குகளும், ஹிண்டன்பர்கிற்கு 1 கோடியே 85 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.
எனவே, இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது. ஹிட்லருக்கு பெரிய பெரிய தொழில் அதிபர்கள் பண உதவி செய்தனர். யூத தொழில் அதிபர்களும் இதில் இருந்தனர்.
ஜெர்மன் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக விமானத்தில் பறந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர் ஹிட்லர்தான்.
நாட்டின் எந்த மூலையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தாலும் அங்கு விமானத்தில் பறந்து சென்று பேசினார்.
வாக்குறுதிகள்...வாக்குறுதிகள்...வாக்குறுதிகள்.
கொஞ்சம் கூட சளைக்காத பொய்கள். வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்ற ரகசியத்தை மட்டும் அவர் சொல்வதே இல்லை. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், யூதர்களுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.
என்னிடம் ஜெர்மனியைத் தாருங்கள். உலகிலேயே மிகவும் கவுரவமிக்க நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று ஹிட்லர் பேசுவதன் உள்ளர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது.
இரண்டாவது சுற்றுத் தேர்தல் முடிவில் ஹிண்டன்பர்க் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஹிட்லர் 36 சதவீத வாக்குளைப் பெற்றார். ஹிண்டன் பர்கிற்கு 1 கோடியே 93 லட்சம் வாக்குகளும், ஹிட்லருக்கு 1 கோடியே 34 லட்சம் வாக்குகளும் கிடைத்திருந்தன.
பெரிய சாதனைதான் இது. இந்தத் தேர்தலில் ஒரு உண்மையை ஹிட்லர் தெளிவாகத் தெரிந்து கொண்டார். தனக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் ஜெர்மன்
தேசியவாதிகள் என்றும் தனக்கு வாக்களிக்காதவர்கள் யூதர்களும், கம்யூனிஸ்ட்டுகளும், குடியரசு ஆதரவாளர்களும் என்பதை புரிந்துகொண்டார்.
இவர்களை எப்படித் திருத்துவது? முதலில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
ஆனால், குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்தவுடனேயே நாஜிகள் வழக்கம்போல் தங்கள் வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.
பிரதமர் புரூனிங், அரசியல் சட்டத்தின் 48 வது பிரிவைப் பயன்படுத்தி, அவசரச் சட்டங்களால் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். முதலில் அவர், நாஜிக் கட்சியின் அதிரடிப்படைக்கும் இளைஞர் படைக்கும் தடைவிதித்தார்.
அவர்கள் பொங்கினர். உடனடியாக தடையை எதிர்த்து போராட வேண்டும் என்று ஹிட்லரை வற்புறுத்தினார்கள்.
ஹிட்லர் அனுபவப் பட்டிருந்தார். ஜெர்மன் ராணுவம், சக்திவாய்ந்த தொழில் அதிபர்களின் துணையின்றி எதுவும் செய்யமுடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அவர்கள், நாஜிக்கட்சியின் அதிரடிப்படையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறாரகள். அல்லது அதைக் கண்டு பயப்படுகிறாரகள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
எப்படிப்பார்த்தாலும் குடியரசின் ஆயுள், கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. காலம் வரட்டும். பொறுத்திருப்போம் என்று காத்திருந்தார் ஹிட்லர்.
ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.
அடுத்த மாதத்திலேயே, ராணுவத்தில் செல்வாக்குப் பெற்ற உயரதிகாரியான, ஸ்லெய்ச்சர் வழியாக சந்தர்ப்பம் வந்தது.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தப்படி ஜெர்மன் ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், ஹிட்லரின் அதிரடிப்படையில் ஆயுதம் ஏந்திய 4 லட்சம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தப் படைக்கு எர்னஸ்ட் ரோம் என்பவன் தலைவராக இருந்தான். மியூனிக் புரட்சியின்போது, பவேரியாவின் ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியிருந்தவன் இவன்தான்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தது. அதைச் சீரமைக்க ஒத்துழைப்புக் கொடுத்தால் மக்கள் நிம்மதியாக அவர்களுடைய வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அவர்களுடைய வெறுப்புத் தீயில் குளிர்காய முடியாது என்பது ஹிட்லருக்குத் தெரியும்.
அதேசமயம், தனது தலைமையின் கீழ் உள்ள அதிரடிப்படையை முடக்கிய அரசு உத்தரவை எதிர்த்து வன்முறைப் போராட்டத்தில் இறங்கி, வீதிகளில் ரத்த ஆறு ஓடும்படி செய்ய வேண்டும் என்று ரோம் நினைத்தான். ஹிட்லரின் அனுமதியை வேண்டி நின்றான்.
ஹிட்லர் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அந்தச் சமயத்தில்தான், ஜெர்மனி ராணுவத்தின் செல்வாக்குப் பெற்ற உயர் அதிகாரியான ஸ்லெய்ச்சர், ஹிட்லரைச் சந்திக்க விரும்பினான். வரட்டும் பேசிப்பார்க்கலாம். வருகிற எந்த வாய்ப்பையும் தட்டிக்கழித்து விடக்கூடாது என்று ஹிட்லர் திட்டமிட்டார்.
“கன்சர்வேடிவ் தேசிய அரசு அமைவதற்கு நாஜிக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். அப்படி ஆதரவளித்தால், அதிரடிப்படைக்கும், இளைஞர் அணிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும். பிரதமர் புரூனிங் தூக்கியெறியப்படுவார். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிடப்படும்”
இதுதான் ஸ்லெய்ச்சரின் பேரம்.
ஹிட்லர் ஒப்புக்கொண்டார். முதலில் ராணுவ தளபதி குரோனரை பதவி விலக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
“அதற்கென்ன செய்துவிட்டால் போச்சு”
ஹிட்லரை அவன் குறைவாக எடைபோட்டு விட்டான். ஸ்லெய்ச்சரின் ஆதரவாளர்களும், நாஜிக் கட்சியினரும் ராணுவ தளபதி குரோனருக்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வீசினர். நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நாட்டின் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கும் ஆற்றல் இல்லாதவர் என்றும் குரோனர் பதவி விலக வேண்டும் என்றும், ஒற்றைக்காலில் நின்றனர்.
குரோனர், குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு நம்பகமானவர். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
ஆனாலும் என்ன செய்வது? எதிர்ப்பு வலுத்த நிலையில் அவரைப் பதவி விலகும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
நாஜிக் கட்சிக்கு முதல் வெற்றி. அடுத்த குறி பிரதமர் புரூனிங்.
தேர்தல் முடிந்த இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கூட பிரதமராக அவர் சாதித்தது என்ன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் வலுவாக எழுந்திருந்தது. அல்லது அத்தகைய கேள்வியை எழுப்பி அதை நிலை நிறுத்துவதில் நாஜிக் கட்சியினர் வெற்றி பெற்றிருந்தனர்.
குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க்கும் புரூனிங் மீது அதிருப்தி அடைந்திருந்தார்.
புரூனிங் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் அளவுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் மேட்டுக்குடியினர் பலர், திவால் நோட்டீஸ் அளித்திருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை கிராமப்புற விவசாயிகளுக்கு பகிரந்தளிக்கும் திட்டத்தை அவர் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், மேட்டுக்குடியினரும், தொழிலதிபர்களும் இணைந்து, பெருமளவு பணம் போட்டு, குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு அழகிய பண்ணை ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அந்தப் பண்ணையில் ஈஸ்டர் விடுமுறையைக் கழிக்கப் போயிருந்த அவர், நிலச்சுவான்தார்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு விருந்து அளித்தார்.
புரூனிங்கின் செயல்பாடுகள் குறித்து தங்கள் குமுறலை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
மே மாதம் 29 ஆம் தேதி புரூனிங்கை அழைத்தார் ஹிண்டன்பர்க்.
“தயவுசெய்து உங்கள் ராஜினாமா கடிதத்தை தருகிறீர்களா?”
மறுவார்த்தை பேசாமல், தலைவலி தீர்ந்தது என்று புரூனிங் பதவி விலகினார்.
ஹிட்லரும், ஸ்லெய்ச்சரும் சந்தித்த 20 நாட்களில் இத்தனை அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.
இப்போது, அரசின் முழுக்கட்டுப்பாடும் ஸ்லெய்ச்சரின் கையில்.
சரி, அடுத்த பிரதமர் யார்?
பிரென்ஸ் வான் பாப்பென் என்ற மேட்டுக்குடி முதலாளியை பிரதமராக நியமித்தார் ஹிண்டன்பர்க். அவருக்கு எதுவும் தெரியாது. தன்னைப்போன்ற மேட்டுக்குடியினர் சிலரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.
“பாப்பெனுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா ஹிட்லர்?”
“ஆம்”
பிரதமராக பொறுப்பேற்றவுடன், ஜீ¨ன் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
15 ஆம் தேதி நாஜிக் கட்சியின் அதிரடிப்படை மற்றும் இளைஞர் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஸ்லெய்ச்சர் உத்தரவிட்டார். ஆம். ஹிட்லருக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.
ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
“ரத்த ஆறு ஓடட்டும். ரத்த ஆறு ஓடட்டும்.
குண்டாந்தடிகள் தாக்கினாலும்
எதிர்கொள்வோம், எதிர்கொள்வோம்
ஜெர்மன் குடியரசைத் தகர்ப்போம்”
இப்படி பாட்டுப்பாடி கோஷமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் நாஜிகள்.
அவர்களுடன் மோதிப்பார்த்துவிட கம்யூனிஸ்ட்டுகள் தயாராக இருந்தனர். நாஜிகளின் அதிரடிப்படையினருக்கு ஜெர்மன் காவல்துறை பாதுகாப்பு அளித்தது.
கம்யூனிஸ்ட்டுகளின் பலத்தை மட்டுப்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கின் துணையும் இருந்தது.
ஜீ¨லை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.
பிரஷ்யா மாநிலத்தில் உள்ள ஹம்பர்க் நகரில் நாஜிகள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர்.
அந்த மாநிலம் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்தது. நாஜிகளுக்கு காவல்துறை பக்கபலமாக இருந்தது. ஊர்வலத்தை தடுக்க முயன்ற கம்யூனிஸ்ட்டுகளை நாஜிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். 19 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். ரத்த ஞாயிறு என்று இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டனர்.
நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார் பிரதமர் பாப்பென்.
48 வது பிரிவைப் பயன்படுத்தி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். பிரஷ்யாவையும் சேர்த்து நெருக்கடி நிலை கமிஷனராக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டார்.
உங்கள் முடிவு தற்காலிகமானதுதான். எனது கட்சியின் செல்வாக்கு உங்களை விழுங்கிவிடும். நீங்களே முன்வந்து என்னை பிரதமராக்கும் காலம் வந்துவிட்டது என்றார் ஹிட்லர்.
ஜூலை தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெப்போதும் காணாத மக்கள் எழுச்சியை ஹிட்லர் பார்த்தார். இறைத்தூதர் இமேஜ் அதிகரித்திருந்தது. அவருடைய பொதுக்கூட்டங்களில் லட்சம் பேர் பங்கேற்பது சாதாரண விஷயமாகிவிட்டது.
தேர்தல் முடிந்தபோது, மொத்தமுள்ள 543 இடங்களில் 230 இடங்களை நாஜிக் கட்சியினர் கைப்பற்றியிருந்தனர். அதாவது, அவர்களுடைய ஆதரவு இல்லாமல் யாரும் அரசு அமைக்க முடியாது.
உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் ஹிட்லர். இதோ தனது கனவு நனவாகப் போகிறது.
முந்தைய பகுதி:
ஹிட்லரின் வெற்றியும் தோல்வியும்!- ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #2