பணி ஓய்வு பெற்ற காலத்தில் ஏற்படும் மன மாற்றங்கள் மற்றும் மன நெருக்கடிகள் குறித்து மனநல சிறப்பு மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்
பணியிலிருந்து ஓய்வு என்பது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தக்கூடிய பருவம் இது. பணியை எடுத்துவிட்டு நான் யார் என்கிற கேள்வி இந்த காலகட்டத்தில் எழும். அதுவரை பல்வேறு பொறுப்புகளில் வேலை செய்துவிட்டு அதன் பிறகு நாம் யார் என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி நமக்கே ஏற்படும். தொடர் உழைப்பிலிருந்து நம்மை நாம் எவ்வாறு விலக்கிக் கொள்வது என்பது மிகவும் முக்கியம்.
பணியில் இல்லாமல் வாழ்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்று. யாருக்காக, எதற்காக நாம் இப்படி ஓடுகிறோம் என்கிற கேள்வியை நாம் நிச்சயம் கேட்க வேண்டும். ஓய்வு காலத்துக்குப் பிறகும் அடிக்கடி ஆபீசுக்கு வந்து அனைவரையும் சந்தித்துவிட்டுப் போகும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. பணி நிறைவு என்பதை ஏற்றுக்கொண்டு எப்படி நமக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். ஓய்வு காலத்துக்கு ஒரு வருடம் முன்பே ஓய்வு காலத்துக்கான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும்.
பொருளாதாரத்துக்கான திட்டத்தை சரியாக வகுத்துக்கொள்ள வேண்டும். சிலர் பென்ஷன் பணத்தை வைத்து திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்வுகளை ப்ளான் செய்திருப்பார்கள். சிலர் சிட் கம்பெனிகளில் அந்தப் பணத்தை மொத்தமாகப் போட்டு ஏமாறுவார்கள். நீங்கள் ஒரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து நன்கு தெரிந்தவர்கள், நம்பிக்கையானவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். நாம் போட்ட திட்டம் சரியாக வரவில்லை என்றால் அதற்கான மாற்றுத் திட்டத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் இடமாறுதல் ஏற்படும். அதற்காகவும் நம்முடைய மனதை நாம் பக்குவப்படுத்தி வைக்க வேண்டும். நம் மீது அக்கறை கொண்ட நண்பர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பது நல்லது. ஓய்வுக்குப் பிறகு வீட்டில் நம்முடைய குடும்பத்தினருக்கும் நாம் உதவலாம். இதனால் குடும்பத்தினரின் பளு சற்று குறையும். ஓய்வுக்குப் பிறகு உடல்நலத்தை பேணிக் காப்பதும் மிக முக்கியம். சென்னையில் இன்று பல முதியவர்கள் நம்மை விட வேகமாக ஜாக்கிங் செல்கின்றனர். நடைப்பயிற்சி, கலந்துரையாடல் போன்றவற்றில் ஈடுபடுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.