Skip to main content

தடம் மாறிய காதலன்; தடுமாறிய காதலி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 36

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
detective-malathis-investigation-36

பல்வேறு வகையில் தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் காதலனை, துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த  ஒரு பெண் என்னிடம் கேஸ் குடுத்தார். அவர் தன் காதலனை கண்காணித்துச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். விவரம் கேட்டபிறகு, அவர் சொன்னது,  அந்த பெண்ணும் அவர் காதலனும் இங்கே பெங்களூரில் பொறியியல் படிப்பை ஒன்றாக படித்து, பின் வெளிநாட்டிற்கு சேர்ந்தே சென்று  ஒன்றாக வேலை பார்க்கின்றனர். இருவரும் காதல் ஏற்பட்டு, பின் இங்கே வந்து கொஞ்சம் செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இந்தியா திரும்புகின்றனர். ஆனால் இங்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த காதலனின் போக்கு சரி இல்லை என்று உணர்கிறார். தன்னை ஒதுக்குவது, இரவு நெடுநேரம் போன் காலில் பிசியாக இருப்பது போன்ற அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொள்கிறார். எனவே கண்காணிக்க வேண்டி என்னிடம் வந்தார்.

நாங்கள் இதை ப்ரீ மேரிட்டல் வெரிஃபிகேஷன் என்று கருத்தில் கொண்டு, அந்த காதலனை பின் தொடர்ந்து கவனிக்க  ஆரம்பித்தோம். அந்த பையன் தன் வேலையை முடித்து கம்பெனியிலிருந்து வெளியே வரும்போது வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக போவதையும், அவர்கள் வெளியே அடிக்கடி அதிக நேரம் செலவு செய்வதையும் பார்த்தோம். பதினைந்து நாட்கள் பார்த்து உறுதி செய்த பின், நம்மிடம் புகார் கொடுத்த பெண்ணை அழைத்து, மீண்டும் ஒருமுறை இது இரு பக்கமும் தெரிந்த காதலா அல்லது ஒருதலை காதலா என்பதை தெரிந்து கொண்டோம். அந்த பெண்ணும் இருவரும் மனம் ஒத்து காதலித்து, திருமணம் செய்ய வேண்டியே இங்கு வந்தோம். திருமணத்திற்காகத் தான் ஒரு வேலையில் சேர்ந்து, செட்டில் ஆகி வந்தோம். ஆனால் ஆறு மாதங்களாகத் தான் அவனது  நடவடிக்கை சரி இல்லை என்றார்.

அவருக்கு வேறொரு காதல் இருப்பது போல இருக்கிறது என்று விஷயத்தை எடுத்துச் சொன்னோம். அதிர்ச்சியான அந்த பெண்ணிற்கு புரிய நேரம் எடுத்தது. முடிவு நீங்கள் தான் எடுக்கவேண்டும். யோசித்துக் கொள்ளுங்கள். வற்புறுத்தி அவரையே திருமணம் செய்து, பின்னர் நீங்கள் விவாகரத்து வரை போக வேண்டி இருக்கும். எனவே, பேசி முடிவெடுங்கள் என்றோம். இது பெற்றோர் வரை தெரிந்து இருந்ததால், அவர்களையும் கூப்பிட்டு பேசி விஷயத்தைச் சொன்னோம். ஒரு அளவுக்கு மேல் குடும்பத்திற்குள் நாங்கள் தலையிட முடியாது என்பதால், மனமுடைந்திருக்கும் பெண்ணை பார்த்துக் கொள்ளுமாறு ரிப்போர்ட்டை கொடுத்தோம். காதலில் ஒருவரை காதலித்தால் உண்மையாக இருக்க வேண்டியது முக்கியம். பிரிவையும் முறையாக அறிவித்து பிரிய வேண்டும். ஒருவரை காதலித்து விட்டு இன்னொரு உறவுடன் பழகுதல் என்பது தவறாகும்.