தான் கையாண்ட துப்பறியும் வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் சண்டைபோட்டுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்ட தன் மனைவியை கண்காணிக்கச் சொன்ன கணவனைப் பற்றியும், அதில் கிடைத்த அதிர்ச்சியான தகவல்களை பற்றியும் விவரிக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து எங்களை தொடர்பு கொண்டார் ஒருவர், தன்னுடைய மனைவி தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு அவளுடைய சொந்த ஊருக்கு வந்துவிட்டாள். அங்கே என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அத்தோடு, தனக்கும் தன் மனைவிக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து அடிக்கடி சண்டை வரும், அப்போது வெளிநாட்டில் தனக்கு வேலை வழங்கிய பாஸ் தான் தலையிட்டு சரி செய்து விடுவார். அதனால் கொஞ்ச காலம் அமைதியாக இருப்பாள், பிறகு சண்டையை ஆரம்பிப்பாள். இப்பொழுது பெரிதாய் சண்டை போட்டுக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டாள் என்றார்.
அவரிடம் விவரங்களை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கண்காணிக்க ஆரம்பித்தோம். இங்கே வந்ததிலிருந்து அந்த பெண் ரொம்ப பிசியாக பரபரப்பாகவே இருந்து வந்தாள். ஏனெனில் அவளுடைய சகோதரனின் திருமணம் நடைபெறப்போகிறது, அதற்கான வேலைகளில் இருந்தாள். நாங்களோ இந்த பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை போல, வெளிநாட்டில் இருக்கும் கணவன் தான் சந்தேகப்படுகிறானோ என்று கூட ஆரம்பத்தில் நினைத்தோம்.
இருந்தாலும் நம்முடைய கிளைண்ட் என்ன கேட்கிறார்களோ அதை செய்து தருவது தான் நம்முடைய வேலை என்பதால், அந்த பெண்ணை அவளுடைய சகோதரனின் திருமணம் வரை ஃபாலோ செய்து விவரங்களைத் தரலாம் என்று முடிவெடுத்து வைத்திருந்தோம்.
அவளுடைய தம்பியின் திருமணத்திற்கு வந்திருந்த ஒருத்தரை அந்த பெண்ணோ விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார். கிளம்பும் போதும் ரோடு வரை வந்து வழி அனுப்பி வைக்கிறாள். அடுத்த நாளே அந்த நபரை ஒரு ஹோட்டலில் சென்று சந்திக்கிறாள். அவரோடு அந்த இரவு முழுவதும் அந்த ஹோட்டலில் தங்குகிறாள். வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வெளியே அவருடன் வந்தவள் சில பகுதிகளுக்கு சென்று சுற்றிவிட்டு மீண்டும் ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் வீட்டிற்கு போகிறாள்.
இந்த தகவலை வெளிநாட்டிலிருக்கும் அந்த பெண்ணின் கணவரிடம் சொன்னோம். அவரோ அந்த நபரின் புகைப்படத்தை பார்க்க விரும்பினார். அனுப்பி வைத்தோம். அதில் தான் அவர் சொன்னது ஆச்சரியத்தை அளித்தது. அந்த நபர் இவரின் பாஸ், வெளிநாட்டில் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டால் யார் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங்க் கொடுப்பாரோ, அதே பாஸ் தான் இங்கே இவளோடு இருக்கிறார்.
இவ்வளவுக்கும் அந்த பாஸுக்கு கல்யாணமாகி, கல்லூரிக்கு போகும் வயதில் மகள் இருக்கிறாள் என்கிற தகவல் எல்லாம் பின்னால் தெரிந்து கொண்டோம். நாம் திரட்டிய தகவல், ஆதாரங்களை நமது கிளைண்டிடம் கொடுத்தோம். அதை வைத்து அவர் விவாகரத்து அப்ளை பண்ணி டைவர்ஸ் வாங்கிக் கொண்டார்.
இதன் வழியாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை வரும் பொழுது குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் போது அது பல்வேறு வகையில் சிக்கலை உருவாக்கும். கவனமுடன் கையாள வேண்டும்.