Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #4

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

sootchuma ulagam part 4

 

அத்தியாயம்-- 4

 

கணவனும் தன் அக்கா வைதேகியும் செய்த துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத கற்பகம், வீட்டுக்குள்ளேயே மரவட்டையாய் சுருண்டு போனாள். இந்த கொடுமை போதாதென்று,  அடுத்த சில மாதங்களில்  அவளது குழந்தையும் தொட்டிலில் இருந்து நழுவி விழுந்ததில் எதிர்பாராத விதமாக இறந்துபோனது பெரும் துயரம். புறக்கணிப்பும், துயரமும் சேர்ந்து கற்பகத்தை மனநோயாளி ஆக்கிவிட்டன. யாரும் துரத்தாமலே காலம் ஓடிய ஓட்டத்தில் என்னென்னவோ நடந்துவிட்டது. கற்பகம்,  மனநிலை தெளியாமலே மரணத்தை  நோக்கிப் போய்விட்டாள். 

 

ஒரு துன்பியல் காவியமாக மாறி மறைந்துவிட்டது கற்பகத்தின் கதை. இதை இயல்பாக எடுத்துக்கொண்டான், அவள் கணவனான கங்காதரன்.

 

ஆனால், அம்மாவின் பிரிவையும் அம்மாவுக்கு நிகழ்ந்த கொடுமையையும் ஜீரணிக்க முடியாமல் மாலாதான் சுமந்துகொண்டிருக்கிறாள். கல்லூரிப் படிப்பை முடித்த மாலாவுக்கு, ஒருவழியாக அத்தை மகன் வாத்சல்யனுடன் திருமணமும் முடிந்தது. 

 

கணவனாக வாய்த்த வாத்சல்யன், பெயருக்கு ஏற்றபடி அன்பானவனாகவும் அவள் மீது காதல் மிகுந்தவனாகவும் இருந்தது மாலாவுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது.

 

பெரியம்மா வைதேகியோ, கங்காதரனுடன் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கும் இரண்டு குழந்தைகள். 

 

அன்று வெளியில் இருந்து வந்த வாத்சல்யன், 

"மாலா.... மாலா..." என்று அழைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். அவளிடமிருந்து பதில் வராமல் போக, வாத்சல்யன் மாலாவைத் தேடி வந்து, தோளில் கை வைத்து, "அப்படியென்ன யோசனை...? அழைத்தது கூட காதில் விழலையா...?" என்றதும், கண்களில் நீர்மல்க கணவனைப் பார்த்தாள்.

"இன்னைக்கு என்னவோ அம்மாவின் ஞாபகமாகவே இருக்குங்க.  நம்ம கல்யாணத்தக் கூட இருந்து பார்க்க கொடுத்து வைக்கலை. அம்மா எத்தனை தூதர்ஷ்டசாலி... இவ்வளவு சீக்கிரம் அம்மாவின் வாழ்க்கை முடிஞ்சிடிச்சேன்னு நினைச்சா, இப்பவும் பகீர்ன்னு இருக்கு. "

" போனதையெல்லாம் நினைத்து வருத்தப்பட்டு ஆகப்போவதென்ன சொல்லு.  இப்படிக் கண்டதை யோசிப்பதால்தான் என்னைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாய். நமக்குத் திருணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால்... பல வருடம் வாழ்ந்து சலித்துப் போனது போல் நடந்து கொள்கிறாய். நான் ஒன்றும் அந்நியனில்லை. உன் அத்தை மகன். ஹனிமூன் போகலாம் என்றால் மறுக்கிறாய். இந்த காலத்தில் போய்... ஜாதகம், சரியில்லை, தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்யும் வரை பக்கத்தில் வராதே என்கிறாய். பசித்தவன் பக்கத்தில் பிரியாணியை வைத்து, பார்த்துக் கொண்டே இரு என்றால் எப்படி...?

" அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் அப்படித்தான்!   48 நாட்களில்  30 நாட்கள் கழிந்து விட்டது. இன்னும் பதினெட்டே நாட்கள்தான்!  பொறுமையாக இருக்க முடியாதா உங்களால்...? அம்மா கனவில் வந்து சொன்னாள். அதை எப்படி அலட்சியப்படுத்த முடியும்..".? 

" வந்து காபியாவது போட்டுக் கொடு. நாளைக்கு என் அம்மா  வந்துடுவாங்க. உன்னை காபிக்குக் கூட எதிர்பார்க்க மாட்டேன் போதுமா...?  கோவிலுக்குப் போனால் இங்கு சாமி இல்லைங்கிறது. ஏதோ ஒரு உருவம் நடந்து போகுது பாருங்க. உங்களுக்குத் தெரியுதான்னு கலவரப்படுத்துறது. சத்தியமா எனக்குப் புரியலை. உன்னை எதாவது ஒரு மனோதத்துவ டாக்டரிடம்தான் அழைத்துக்கொண்டு போகனும்."

" சங்கரிக்கு குறைப்பிரசவம் ஆகும்னு சொன்னேன். ஆச்சா.... இல்லையா.... உங்களுக்கு புரமோஷன் கிடைக்கும்னு சொன்னேன். கிடைச்சுதா இல்லையா...?

" வேண்டவே வேண்டாம்..! தெரியவே வேண்டாம். எது எப்படி  நடக்கும்னு தெரியாமல் இருந்தால்தான்  த்ரில் இருக்கும். எதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சுக்கனும்...?   இனிமேல் எதையாவது உளறிக் கொட்டினே... கொன்னுடுவேன்!  நடக்கப் போறதை தடுக்க முடியாதுனா... எதுக்குத் தெரிஞ்சுக்கனும்...?  தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்கிறியோனு தோணுது."..! 

" சத்தியமே இல்லீங்க. சின்ன வயசிலிருந்தே இப்படித்தான். சிலது முன் கூட்டியே தெரிஞ்சுடும்."!

" நோ ஆர்க்யூமென்ட் ப்ளீஸ்... ஆனால் ஒன்னு... உனக்கு  என்மேல் பெரிசா  ஈடுபாடில்லைனு மட்டும் தெரியுது. அவனவன் சொந்த அத்தைப் பெண், மாமா பெண்ணுங்களை எல்லாம் கல்யாணத்துக்கு முன்பே கரெக்ட் பண்ணிடுறானுங்க. நான் ஒரு  தத்தி பெண்டாட்டியைக் கூட கரெக்ட் பண்ணத் தெரியாமல் முழிச்சுட்டிருக்கேன்" என்றான் வாத்சல்யன்.

" இப்ப என்ன வேணும் உங்களுக்கு... உங்க இஷ்டப்படி நான் நடந்துக்கனும் அவ்வளவுதானே....? வாங்க " என்ற மாலா, கணவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். மாலாவின் கண்களைப் பார்த்தபடி அவளைக் கட்டிலில் சாய்த்த போது...  யாரோ காலிங் பெல்லை அழுத்தும் சத்தம் கேட்டது. யாராக இருந்தாலும் காத்திருக்கட்டும் அல்லது திரும்பிப் போகட்டும் என்று நினைத்தவாறு,  மிக மிக மென்மையாக  முத்தமிட்டு இறுக்கமாக அணைத்தான். "மாலா ... உனக்கு ஓகே தானே... என்று மிருதுவாய் கேட்க..”.

" ஆண்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகள்தானே பெண்கள். ஆண் என்ற ஆளுமையை நிரூபிக்க உங்களுக்குத்  தெரிந்த ஒரே விசயம் இதுதானே... ” என்றதும் சட்டென விலகினான். "எழுந்து போடி"  என்றவன்,  "உன்னை என் பின்னால் சுத்த வைக்கிறேனா  இல்லையா பார். கோபத்தில் கொதித்தான். நமட்டுச்சிரிப்புடன் வாசலுக்கு விரைந்தாள் மாலா.

"என்னடி... காலையிலேயே ரொமான்ஸா... பதினைந்து நிமிசமா நிற்கிறேன்" என்ற வாத்சல்யனின் தங்கை சங்கரி, "டேய் அண்ணா...எழுந்து வெளியே வாடா. ஒரு முக்கியமான விசயம் பேசனும்” என்றாள். 

" அம்மா எங்கடி... நீ மட்டும் வந்திருக்கே..."

"உட்காரு சொல்றேன்” என்றவள், மாலாவிடம்... "ஸ்ட்ராங்கா ஒரு டீ போடேன். " என்றனுப்பி விட்டு,  ”டெல்லி ஏர்போட்டில் மாமாவைப் பார்த்தோம் டா. அம்மா திகைச்சு போய் நின்னுட்டா. மாமா பட்டுனு காலில் விழுந்துட்டார். அம்மாவுக்குத் தாங்கலை அழுதுட்டா தெரியுமா...? ஒரே தம்பியாச்சே..."

" மெதுவாப் பேசு.  மாலாவின்  காதில் விழுந்து தொலைக்கப் போகுது. ஏற்கனவே  என்மேல் கோபம்"

" என்ன கோபம் அவளுக்கு...? ” என்றவள் மாலா வருவதைப் பார்த்ததும், ”என்னடி எங்கண்ணனை ரொம்ப படுத்துறியாமே?” என்று விளையாட்டாய் கேட்க...கணவனை முறைத்தாள்.

" அங்க என்ன முறைப்பு...? எங்கிட்டப் பேசு!”

" நீ முதலில் என்னை அண்ணினு கூப்பிடு. அப்புறம் கேள்வி கேளு. உன்னை விட நான் பெரியவள் மறந்து பேச்சா"... என்றாள் மாலா.

" ஆறுமாதம் தானே... இதுக்கே இவ்வளவு அலட்டலா... எங்கண்ணனையே நான் வாடா போடானுதான் கூப்பிடுறேன்.  நீயும் நானும் ஒன்னாதானே படிச்சோம்.  எங்கண்ணனை கட்டிக்கிட்டா... அண்ணியாய்டுவியா.? எனக்கு நீ எப்பவும்,  ஃபிரண்ட்தான். நாளைக்கு நீ சம்பந்தியானா கூட, வாடிப் போடினுதான் கூப்பிடுவேன்."

" கண்டிப்பா என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்."

" நீ என்ன கொடுக்கிறது... அவளே என் பையனைத் தேடி வந்துடுவான்...  வரலேனா என் பையனை  விட்டுத் தூக்கிட்டு வரச் சொல்லுவேன்."

" அட டே... விடுங்கடி! இரண்டு பேருக்கும் வேற வேலை இல்லையா..” என்று வாத்சல்யன் அதட்ட, அமைதியானாள் மாலா. ”அப்ப நான் கிளம்புறேன் டா... அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். அதைச் சொல்லத்தான் வந்தேன்.என்ஜாய்.. ”என்றபடி எழுந்து சென்றதும்...

" மாலா... அதென்ன உறவை வெட்டி விடுவது போல் பேசுகிறாய்... அத்வைத்துக்கு என் பொண்ணை தரமாட்டேனு நிர்தாட்சன்யமாய் சொல்கிறாய். அவள் மனசு கஷ்டப்படாதா...?

" அண்ணினு கூப்பிட மறுக்கிறாள். அதைக் கேட்க மாட்டீங்க... என்னை மட்டும் குறை சொல்லுங்க."

" ஆ... நீ மட்டும் என்னை  அத்தான் என்றா கூப்பிடுகிறாய்.. பெயர் சொல்லிதானே அழைக்கிறாய்... அதுவும் வத்சு வத்சு என்று பெண்ணை அழைப்பது போல்."..என்றதும், உதட்டைச் சுழித்து சிரித்து விட்டுப் போன மாலாவை வியப்பாய் பார்த்தான். கோபத்தில்  வெடிப்பாள் என்று நினைத்தால்... குறும்பாக  உதட்டைச் சுழித்து சிரித்து விட்டுப் போகிறாளே...18 வயதில் தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து தனியே நிற்பது கொடுமைதான். ஆனால்...  அதற்காக இவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியலையே...அம்மாவும் இவளைக் கண்டிப்பதே இல்லை. மாலா எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லுவாள். நமக்குத்தான் இவளைப் புரிஞ்சுக்க முடியலை.

" இட்லிக்கு சட்னி போதும்தானே... பொடி இருக்கு! சாம்பார் வைத்தால் மிச்சமாய்டும். அதனால் வைக்கலை.  மதியம் நீங்கள் காய்கறி நறுக்கிக் கொடுத்தால் புலாவ் பண்றேன்.ஓகேதானே.".. கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் மாலா.

" எதாவது செய்! மதியம் நான் வரமாட்டேன். உனக்கு மட்டும் செய்துக்கோ. ரதிக்கு இன்று பிறந்தநாள். லஞ்ச் அவள் வீட்டில்தான். நீதான் வரமாட்டேனு சொல்லிட்டியே... ராத்திரி வர லேட்டாகும்... போன் செய்யாதே."

" பர்த் டே பார்ட்டியா... ஃபிரண்ட்ஸ் நிறையப் பேர் வருவாங்களா... எதையாவது குடிச்சுட்டு வந்து நிக்காதீங்க. கதவைத் திறக்க மாட்டேன் நினைப்பிருக்கட்டும்!"

" இது வரை அதன் ருசி தெரியாது. நீ சொன்ன பிறகு ருசிச்சு பார்த்துடனும்னு தோணுது." 

" தோணுமே... ஏன் தோணாது...? அப்படி எதாவது செய்துட்டு வந்து நின்னீங்க....அப்புறம் இருக்கு உங்களுக்கு.!"

" என்னடி செய்வாய்..".? செல்லமாய் சீண்டினான். 

" எனக்கு எதையும் சொல்லி பழக்கமில்லை. செய்துதான் பழக்கம்! யார் கண்டா...  அடிக்கக்  கூடச் செய்வேன்." 

" ஓ..... அந்த அளவுக்கு வந்தாச்சா... அதையும் பார்த்துடலாம்." என்றபடி குளிக்கப் போனான். சுடச் சுட இட்லியுடன் சட்னியைத் தொட்டுச் சாப்பிட்டதும், டைட் ஜீன்ஸ்சும், டீசர்ட்டும் அணிந்து கொண்டான். வாத்சல்யன் நல்ல நிறம் என்பதால்... அடர் ப்ரவ்ன் நிறத்தில் டீ சர்ட்டும், வெளிர் நீல நிறத்தில் ஜீன்சும் அவன் அழகை மேலும் மெருகூட்டியது. அவன் பார்க்காதவாறு பார்த்து ரசித்தாள். தன் வேண்டுகோளுக்காகத் தள்ளி நிற்பவன் கொஞ்சம் நெருக்கம் காட்டினால் போதும். தன்  வைராக்கியமெல்லாம் உடைந்து போகும்!  என்ற யோசித்துக் கொண்டிருந்த வேளையில்... எதிர்பாராத விதமாய் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்ற கணவனின் செய்கையில் திகைத்துப் போனாள். இன்னும் 18 நாட்கள்... மீதமிருக்கிறதே... கடவுளே... என்னை   கணவனின் அன்பில் சிக்காமல்  பார்த்துக் கொள்!" என்று மானசீகமாய் வேண்டிக் கொண்டாள்.

 

(திகில் தொடரும்...)

 

- இளமதி பத்மா.

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #3