மனசுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போது மனமும் உடலும் 100 ஹார்ஸ் பவரில் ஓடும். அதே சமயம் பிரச்சனைன்னு வந்துட்டா, எழுந்து நிற்பதற்கும் கூட உடம்பில் தெம்பிருக்காது. மனமும் உடலும் நனைந்த துணி போல் மடங்கி விழும். அது போல தியாவின் ஆபத்தான உடல் நிலையால், அவங்க அம்மாவின் உடலிலும் மனதிலும் சுத்தமாகத் தெம்பில்லை. எமர்ஜென்சி வார்டுக்குள் வரும்வரை வேகமாக வந்தவரின் கால்கள் அதன்பிறகு நகர மறுத்தது. பீதி, தட்டாமாலை சுற்றியதில், கண்ணை மறைத்தது.
கவியும், ஷாலுவும் முதலில் வேகமாக ஓடி, தியாவின் பெட் அருகே சென்றனர். ”தியா...” என்றபடி அவள் கைகளைப் பிடித்தனர். தியா மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவர்கள் அவளைச் சுற்றி நின்று கொண்டு, அவள் சுவாசம் சீராவதற்கான முயற்சியில் மும்முரமாக இருந்தனர்.
அருகே வந்து மகளின் நிலையைப் பார்த்த அவள் அம்மா, ஓ...வென்று அழுதார்கள். அப்பாவும் பரிதவிப்பாக தியாவின் தலையை வருடியபடியே " அம்மா தியா... நான் அப்பா வந்திருக்கேன். கண்ணைத் தெறந்து பாருடா என் செல்லக் குட்டி... உனக்கு ஒன்னும் ஆகாதுடா.." என்று அழுதார்.
”எல்லாரும் சுத்தி நின்னா நாங்க என்ன பண்றது. நகருங்க” என்று ஒரு நர்ஸ், அவர்களை எட்டி நிற்கச் சொன்னாள்.
இதற்கு நடுவே மருத்துவர்கள், தியாவை காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தனர். தியாவிடமிருந்து ’,ம்மா... அப்பா ‘ என மெல்ல முனகல் எழுந்தது.
அவள் கைகள், அம்மாவையும், அப்பாவையும் ஒரே சேர அணைப்பதற்காகக் காற்றில் துழாவிக் கொண்டிருந்தன. எல்லோரும் அவளைக் கண்ணீரோடும் பரிதவிப்போடும் மொய்க்க... அவள் கண்களைத் திறந்து புன்னகைத்தாள். அது சுடர்ந்தது. அணையத் துடிக்கும் தீபம் போல் சுடர்ந்தது.
"அம்மா, நான் பிழைக்கமாட்டேன். உங்கள விட்டுட்டுப் போறேன்மா... அப்பா... கிட்ட வாங்கப்பா...அப்பா... என் கையப் பிடிச்சிக்கங்கப்பா... “ என்றபடி மேற்கொண்டு என்னன்னவோ சொல்ல நினைத்தாள் தியா. தியாவின் அம்மாவும் அப்பாவும் துடித்தனர். தியாவுக்கு நிறைய மூச்சு வாங்கியது. கவியின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது.
”தியா... எங்களப் பாருடி...” என்ற படி, அவள் கைகளைத் தொட்டாள் கவி. அவள் முகத்தருகே குனிந்து "ஏய் பம்ளிமாஸ்... எங்களை விட்டு போய்டாதடி" என்று அழுதாள். "கவி... கவி.. “ என்று மூச்சுத் திணறலுடன் அழைத்தாள். திணறல் அதிகமானது. இதயம் மேலெழுந்து மேலெழுந்து இறங்கியது. "கவி ..அவனுங்கள... விடக்கூடாது...” மீண்டும் பேசமுடியாமல் மூச்சு இழுத்தது. மறுபடியும் திணறி. "விட்றாதடி" என்றாள்.
“யாரை.. விட்றக்கூடாது... சொல்லு சொல்லு தியா” என்று கவி சொல்லிக்கொண்டிருந்த போதே... அவள் இமைகள் பட்டாம் பூச்சியாய் படபடத்தன. அப்படியே கண்களை மூடினாள் தியா. மூச்சு இழுத்துக்கொண்டே இருந்தது. அவள் கண்களை மூடியதும் சுந்தரியும், கதிரும், ஓ வென்று கதறினர்.
“எல்லாரும் கொஞ்சம் நகருங்க” என்ற டாக்டர்கள், அவள் இதயத்தை அழுத்தி செயற்கை சுவாசத்திற்கு முயற்சி செய்தனர்.
”நீங்கள்லாம் கொஞ்சம் வெளியே இருங்க” என்று டாக்டர்கள் இவர்களை வெளியே அனுப்பினார்கள்.
அப்போது தியா கண் திறந்து, கவியைப் பார்த்தாள். அது கடைசிப் பார்வையாக ஆனது.
சுந்தரியை ஷாலுவும், கதிரை கவியும் கைத் தாங்கலாக பிடித்துக்கொண்டு வெளியே வந்தனர். அந்த இடத்தின் சோகத்தை விவரிக்க எத்தனை செனாய் வாசித்தாலும் முடியாது. ஒரு உற்சாகத் தென்றல், அமைதியானது. அடுத்த சில நிமிடங்களில் கதவை வேகமாகத் திறந்து கொண்டு சீனியர் டாக்டர் வெளியே வந்தார்.
கதிரின் கைகளைப் பிடித்துக் கொண்டு "சாரி கதிர் "என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு நகர்ந்தார். அந்த ஒற்றை வார்த்தையில் உலகம் இருண்டது.
"ஐயோ தியா".எனக் கதறிக்கொண்டே சுந்தரி மயங்கிச் சரிந்தாள். கதிர் தலையில் அடித்துக்கொண்டே, "மகளே தியா.. தியா எங்களை விட்டுட்டுப் போயிட்டியா"என்று முகத்தில் அறைந்துகொண்டு கதறினார். தியாவின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லமுடியாமலும், தோழியின் பிரிவைத் தாங்க முடியாமலும், நெருப்பாற்றில் விழுந்தது போல கவியும், ஷாலுவும் துடித்தனர்.
கவி, சுந்தரியை மயக்கம் தெளிவித்து நாற்காலியில் அமரவைத்து, தன் மடிமீது படுக்க வைத்துக்கொண்டு அழுதாள். ஷாலுவும் கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து கவி, அவங்க அம்மா திலகாவிற்கு போன் பண்ணி விசயத்தை சொல்லித் தேம்ப, ஷாலுவும் அவங்க அப்பா, அம்மாவிற்கு விசயத்தைச் சொன்னாள். கவியின் அம்மா முதலில் மருத்துவமனை வந்தார். கவியின் அம்மாவைப் பார்த்ததும் சுந்தரி தோளில் சாய்ந்து கதறி அழுதாள். அதற்குள் தியாவின் வீட்டிற்குச் செய்தி சொன்னார்கள்.
ஷாலுவின் அப்பாவும் , அம்மாவும் வந்தார்கள்.ஷாலுவின் அப்பா சுந்தர் டாக்டர் என்பதால் , ஃபார்மாலிட்டி எல்லாம் விரைவில் முடித்து உடனே தியாவின் உடலைப் பெற்றனர்.
வீட்டிற்கு தியாவின் உடலை கொண்டுவந்த பிறகு அந்த உறவுகள், நட்புகளின் கதறலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
கதறலின் ஓலங்களுக்கிடையில் ’அவனுங்கள விட்றாத‘ என்ற தியாவின் வார்த்தைகள் தான் மனதில் ஓடியது. அவளுக்கு என்னவோ நடந்திருக்கு. அவள் சாவுக்கு காரணமானவர்களை விடமாட்டேன் என மனதிற்குள் கறுவினாள்.
பேண்ட் வாத்தியம். மாலைகள், கண்ணீர் விழிகள், கதறல்கள் என அணிவகுக்க, தியா என்ற சுட்டிப்பெண் தன் இறுதியாத்திரைக்குக் கிளம்பினாள். முன் பின் பார்த்திராத இடுகாட்டுக்கு.
ஈமச் சடங்கு முடிந்ததும் வீட்டிற்கு வந்த கவி, ஒரு புயல் போல அப்பாவின் அறைக்குச் சென்றாள்.
( திக் திக் தொடரும்...)
'சாம்பவி சங்கர்' எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்... மரண முகூர்த்தம் #3