Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்..!‘சூட்சும உலகம்’ #13 

Published on 15/11/2021 | Edited on 17/11/2021

 

sootchama ulagam  part-13

 

மாலாவிற்கு எழுந்து கொள்ள முடியாமல் தலை கனத்தது. கடந்தப் பத்து நாட்களாக இப்படித்தான் இருக்கிறது. அத்தையிடம் சொன்னால் வருத்தப்படுவார்களே என்று அமைதியாக இருந்தாள். இன்று  அளவுக்கதிகமாய் சோர்வும், தலைசுற்றலும் சேர்ந்து கொண்டதில், அப்படியே படுத்திருந்தாள்.   

 

"மாலா... மணி ஒன்பது ஆச்சு! எழுந்து குளிச்சுட்டு வா." என்ற விசாலத்தின் குரல் கேட்டதும், மெதுவாக எழுந்து அமர்ந்தாள் மாலா. கண்களை மூடி  தன் மனதோடு பேசினாள். "என்னாச்சு உனக்கு....? கணவனை நினைத்துக் கவலைப்படுகிறாயா.... அல்லது வருத்தப்படுகிறாயா... நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் போல்.... நீயும் ஓடத்தான் வேண்டும்!  நினைவுகளை துரத்தி நடப்பதை யோசி! "  

 

" மாலா."... அழைத்தபடி உள்ளே வந்தாள் விசாலம். " ஒரு வாரமா சுரத்தில்லாமல் இருக்கியே...  என் பிள்ளை மனம் திருந்தி வந்தான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். உன் மனசு இறங்கலையே... இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. எழுந்து வா. ஒரு வாரத்தில் வரேன்னு போனவன் ஒரு மாசமாகப் போகுது இன்னும் வரக்காணோம். இதற்கு காரணம் நீதான்!  ஊர் உலகத்தில் உன்னை மாதிரி எவளும் இருக்க மாட்டாள். ஆம்பளை மனசு அலைபாயுற மனசுதான்! கண்டவளோடப் போகலையே... காதலிச்சவளோடுதானே போனான். தொலையட்டும்னு மன்னிச்சிருந்தால்.... இப்படி ஒரேயடியாய் அங்கேயே கிடப்பானா..".? 


 
" உங்கப்  பிள்ளை செய்ததை நியாயப்படுத்துறீங்களா."..?  


 
"நியாயப்படுத்தல!  அதுக்காக அப்படியே விடக் கூடாதுன்னு சொல்றேன். ஒரு ஃபோன் பண்ணி ஏன் வரலைன்னு கேட்கலாம்ல... பத்து நாளா... சுணங்கி சுணங்கி உட்காரும் போது எனக்கு வருத்தமா இருக்கே. கண்ணெல்லாம் கருவளையம் விழுந்து கிடக்கு. எழுந்து வா டாக்டரிடம் போய்ட்டு வரலாம் என்ற விசாலத்தின் மனதில்  "பளிச்" என்று  மின்னல் வெட்டியது! 
 


" போன மாசம்  குளிச்சியா"...? 


 
" தினமும்தானே  குளிக்கிறேன்! " 


 
" அட... வெவரங்கெட்டவளே... தலைக்குளிச்சியாடி...?! என்றதும், திரு திருவென விழித்தாள்." குளித்த மாதிரிதான் ஞாபகம்! 


 
" ஆ... நீயும் உன் ஞாபகமும்! எழுந்து வா டாக்டரிடம் போய்ட்டு வந்துடுவோம்" என்ற விசாலத்தின் கண்களில் மகிழ்ச்சி தெரிய... 


 
இருக்குமோ...என்று நினைத்த போதே உடலில் சிலிர்ப்பு! வயிற்றை வருடிக் கொடுத்தாள். அம்மாவின் நினைவு வர கண்கள் கலங்கியது. மருமகளை அணைத்தபடி அமர்ந்த விசாலம்... தலையைக் கோதியபடி,  எல்லாம் நல்லபடியாக நடக்கும்! கவலைப்படாதே. அம்மா மாதிரி உன்னைப் பார்த்துக்குவேன் என்றதும்... 


 
" அத்தை" என்றபடி  தோளில் சாய்ந்தாள் கட்டுக்கடங்காமல் வந்த கண்ணீர் வழிந்து விசாலத்தின் தோளை நனைத்தது.!  


 
" மாலா... சந்தோசமான நேரத்தில் அழக் கூடாது." என்று ஆறுதல்படுத்தி, குளிக்கும்படி வற்புறுத்தி, காலை உணவை தன் கையால் ஊட்டினாள். அருகிலிருக்கும் டாக்டரைத் தேடிச் சென்று அமர்ந்த்தும்...

 
 
" அட...! நீங்களா... ?!  வாத்சல்யன் ஊரில் இல்லையா."..?  


 
" ஆமாம்! என்ற மாலாவை சோதித்து பார்த்த டாக்டர் மதுவந்தி விசாலத்திடம்... 


 
" பாட்டியாகப் போறீங்க மா என்றவள், மாலாவிற்கு வாழ்த்து தெரிவித்தாள். பிளட் டெஸ்ட் எடுத்துடலாம். நல்லா சாப்பிடு. சந்தோசமா இரு! அதுதான் முக்கியம்! டெஸ்ட் ரிசல்ட் வரட்டும் எத்தனை மாதம்.... எப்ப டெலிவரி ஆகும்னு கன்ஃபார்ம் பண்றேன். வீட்டிலேயே டாக்டர் இருக்கார். நல்லா பார்த்துப்பார்." 


 
" என் பிள்ளை ஹார்ட் சர்ஜன் மா.  செக்அப்  பண்ணனும்னா....உங்களிடம்தான் வரணும் ." 


 
சின்ன சிரிப்பை பதிலாக தந்த மதுவந்தி, மாலா  அமைதியாக இருப்பதை கவனித்தாள். " உங்க மருமகள் ரொம்ப அமைதியான சுபாவம் போல..".என்றதும்... 


 
"அடக்கமானப் பெண்தான்! கோவம் வந்தால் பத்ரகாளிதான்." என்ற விசாலத்தைப் பார்த்து சிரித்தாள் மதுவந்தி. 


 
மேலும் இரண்டு நாட்கள் கடந்த பின் பிளட் ரிசல்ட் குழந்தை தான் என்று உறுதியானதில் மாலா நெகிழ்ந்தாள். விசாலம் மகிழ்ந்தாள்! 


 
"விடுமுறையை நீட்டிக்க முடியுமா...?  என்ற ரதி, புறப்பட ஆயத்தமான வாத்சல்யனை பின்புறமாய் போய் அணைத்தபடி கழுத்தில் முத்தமிட்டாள்.

 
 
" ஹேய்... இதென்ன ரகளை....? ஒரு மாதம் முழுக்க உன்னோடு இருந்தாச்சு. அம்மா நான்கு முறை ஃபோன் செய்து விட்டார்கள். தவிர விடுமுறையே இனி எடுக்க முடியாது!  முடிகிற போது வருகிறேன்." 


 
" அப்ப நீ பணிமாற்றத்திக்கு அப்ளை  பண்ண மாட்டாயா."..?! 


 
" அவசியம் செய்வேன்! உடனே கிடைக்குமா."..?  


 
" டிரை பண்ணுடா ப்ளீஸ்" 


 
" ஓகே. பை" என்னபடி விரைந்து காரில் ஏறியவனை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றாள்.  


 
விமானம் ஏறிய ஒன்றரை மணி நேரத்தில் தனக்கும், ரதிக்கும் ஏற்பட்ட சிநேகம் முதல் காதல் வரை ஒரு சுற்று நினைவு கூர்ந்ததும், கோவில் அவளுக்குத் தாலி கட்டியதும் நினைவு வர, வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கேள்விக்குறியும், ஒரு வித அச்சமும் அவனை சூழ்ந்தது. விமானம் தரையிறங்கியதும்  டாக்சி பிடித்து வீடு வந்து அழைப்பு மணியை அழுத்தினான். ஐந்து நிமிடக் காத்திருந்த பிறகு நிதானமாய் வந்து கதவைத் திறந்த விசாலம், மகனுடன் எதுவும் பேசாமல் நேராகத் தன் அறைக்கு போய் கதவை அறைந்து சாத்தியதில், அம்மாவின் கோபம் புரிந்து தன்னறைக்கு வந்தான். அசந்து தூங்கும் மாலாவைப் பார்த்தான். மெதுவாக அருகில் அமர்ந்தான். அதற்குள் ரதியின் அழைப்பு வர, எரிச்சலோடு வெளியே வந்தான்.

 
 
" ம்ம்ம்... வந்துட்டேன் சொல்லு." 


 
" போனதும்   கால் பண்ண சொன்னேன்ல..." 


 
" ரதி... இப்பதான் உள்ளே வந்தேன்.கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண விடமாட்டியா..".? 


 
"பக்கத்தில் பொண்டாட்டி இருக்காளா.... அவளிடம் போனைக் கொடு! நான் பேசணும்!

 
 
" என்ன பேசப்போறே... வம்பு பண்ணாதே ரதி" 


 
" நமக்குத் திருமணம் நடந்ததை சொல்லிடு. இல்லேனா நீ இங்க மாற்றலாகி வரமுடியாது. உங்கம்மா  அழுதால் மனசு மாறிடுவே. " 


 
" ரதி... உன் விருப்பத்திற்கு இறங்கி வந்த பிறகும் இப்படி இம்சை செய்தால் எப்படி...?  அம்மா என்னோடு பேசலை. அவங்க என்மேல் கோவமா இருக்காங்க. நேரம் காலம் தெரியாமல் விளையாடாதே. நாளை டியூட்டியில் ஜாய்ன் பண்ணணும்! "

 
 
"யாரோ சொல்லி தெரிவதற்கு பதில் நீ சொல்றது நல்லதில்லையா..?  உனக்கு பயமா இருந்தா உங்கம்மாவிடம் நானே சொல்றேன். அது கூட அவசியமில்லை வீடியோ அனுப்பிடுறேன்" என்று சொல்லி ஃபோனை கட் செய்தாள் ரதி! 


 
வியர்த்து வழிந்த முகத்தைத் துடைக்கக் கூட முடியாமல் அதிர்ச்சியில் அசையாமல் நின்றான் வாத்சல்யன்.  


 
" ஐயோ..".. என்ற அம்மாவின் அலறலில் அதிர்ச்சியிலிருந்து மீண்ட வாத்சல்யன் அவசரமாய் அம்மாவின் அறைக்குள் ஓடினான்.   


 
" என்ன டா இது...? என்றபடி ஃபோனை மகன்மேல் விட்டெறிந்தாள். என் பிள்ளையா நீ.... ச்சீ... தாலி கட்டிட்டு வந்து நிற்கிறியே டா. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும் உனக்கு."...? என்றபடி மகனின் கன்னத்தில் மாறி மாறி ஆத்திரம் தீரும் வரை அறைந்தாள்.  


 
" ஒரு மாசம் அவளோடு குடும்பம் நடத்தியது தப்பில்லைன்னா... தாலி கட்டியதிலும் தப்பில்லை அத்தை!  மன்னிச்சு விடுங்க பொழச்சுப் போகட்டும். அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டுமா."..? என்ற மாலா, கீழே கிடந்த போனை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் கோவிலில் வாத்சல்யன் ரதிக்கு தாலி கட்டிய வீடியோவை ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்தாள்.  


 
" பரவாயில்லை...! ரதிக்கு கொஞ்சம் இங்கிதம் இருக்கு. படிச்சப் படிப்பிற்கு அது இருக்கணுமே... எனக்கு வேற வீடியோ அனுப்பியிருக்கா. அதில் உங்க பிள்ளை ரொம்ப சந்தோசமா இருக்கார். அவளும்தான்! என்றதும் வேகமாய் வெளியேறிய வாத்சல்யனிடம்... டாக்டர் சார் பயப்பட வேண்டாம். வெறும் முத்தக்காட்சிதான்! உங்க ஃபோனுக்கு சேர் பண்ணியிருக்கேன் உட்கார்ந்து ரசிங்க." என்றதும் அவசரமாய் வாட்ஸ்அப்பை திறக்க  ஒன்றன் பின் ஒன்றாக நான்கு வீடியோக்கள் ... இரண்டு மூன்று நிமிடங்கள்தான் என்றாலும்... இந்த நெருக்கம் மாலாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்! இனி இணைந்து வாழும் வாய்ப்பே இல்லை என்று நினைத்தவன், ரதிக்கு ஃபோன் செய்து கோபமாய் திட்டித் தீர்த்தான். 


 
" ரதி... நீ செய்வது நாகரிகமற்ற செயல்..." 


 
" சரி சரி ரொம்ப அலட்டாதே... வெள்ளிக்கிழமை  நைட் நீ இங்க இருக்கணும்!" என்று ஃபோனை துண்டித்தாள். மனபாரம் குறைந்தது போல் இருந்தது. மாலாவும், வாத்சல்யனும் சேரவே கூடாது. அதற்கு  தான் அனுப்பிய வீடியோ போதும் என்று  நினைத்த போது மனசுக்குள் குதூகலம் பொங்கியது.  


 
வீடும் மனிதமும் சகஜ நிலைக்கு வர இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. விசாலம்தான் சமைத்தாள். மகனுக்குப் பரிமாறினாள். தாயும் மகனும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட... அன்பின் சாரல்களை  தம்மோடு தெளித்துக் கொள்ள தவறவில்லை. ஊஞ்சலில் தலைசாய்த்து படுத்தவன் அப்படியே தூங்கிப் போனான். தட்டி எழுப்பிய விசாலம்... 


 
" நீ அப்பாவாகப் போறாய். இனிமேலாவது பொறுப்பாய் நடந்து கொள். மாலாவின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளாதே." என்ற போது திகைத்தான். 


 
"நிஜமாகவா.... ?! எந்த டாக்டரிடம் போனீர்கள்...? ஏன் என்னிடம் சொல்லலை” என்று  கேள்விகள் கேட்டதோடு, மாலாவைத் வாத்சல்யன் தேடிப் போக... தானே தன் கையால் எரித்த தாத்தாவின் டைரியைப் படித்துக்கொண்டிருந்தாள் மாலா. 

 

அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றான்....! 


 
(திகில் தொடரும்) 

 

முத்தைய பகுதி : இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! ‘சூட்சும உலகம்’ #12