கணவனுக்கு துரோகம் செய்த மனைவி பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்
வெளிநாட்டிலிருந்து ஒருவர் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தார். தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார். அவர் தன்னுடைய மனைவி சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை அங்கிருந்தே செய்து கொடுத்தார். அவருடைய தாய் தந்தையும் மனைவியுடன் தான் இருந்தனர். திடீரென்று அவருடைய மனைவியின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. கடையில் அவர் அதிக நேரம் இருப்பதில்லை. அடிக்கடி வெளியே சென்ற அவர், நீண்ட நேரம் கழித்தே திரும்பி வந்தார்.
அம்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது என்று குழந்தைகளும் அப்பாவிடம் தெரிவித்தனர். ஆனால் வேலை காரணமாக அம்மா அப்படி நடந்துகொள்கிறார் என்று குழந்தைகளை அவர் சமாதானப்படுத்தினார். ஆனால் தன்னுடைய தாய் யாருடனோ அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பதாக மகன் தெரிவித்தான். ஒருநாள் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வீட்டை விட்டே கிளம்பினார். ஆனால் கடை தன்னுடைய பெயரில் இருப்பதால் கடைக்கு மட்டும் தினமும் வந்தார். இதனால் இந்தியா கிளம்பி வந்த கணவர், இதுபற்றி நம்மிடம் கேஸ் கொடுத்தார்.
அவருடைய மனைவியை நாங்கள் பின்தொடர்ந்தோம். இன்னொருவரிடம் மனைவி போல் அவர் நெருக்கமாக இருந்தது தெரிந்தது. தன்னுடைய கணவரிடம் விவாகரத்து பெற அவர் முடிவு செய்தார். இன்னொருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் அதிர்ச்சியானார். தன்னுடைய குழந்தைகள் பற்றி கூட அவருடைய மனைவி கவலைப்படவில்லை. குழந்தைகளும் மீண்டும் அவரிடம் செல்ல விரும்பவில்லை. அம்மாவின் அன்பு இல்லாமல் வளர்ந்த அந்தக் குழந்தைகள் தங்களுடைய தாய் தங்களுக்குத் தேவையில்லை என்று முடிவு செய்தனர்.
அந்த நிலைமைக்கு அந்தக் குழந்தைகள் தள்ளப்பட்டனர். உளவியல் ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இதனால் அவர்களுடைய திருமணத்தின்போது கூட பிரச்சனை ஏற்படும். இளவயதில் சொந்தங்களை யாரும் மதிப்பதில்லை. வயதான பின் அவர்கள் அதை உணரும்போது, அவர்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருமணமான தம்பதியினரிடமிருந்து தான் எங்களுக்கு அதிகமான கேஸ்கள் வருகின்றன. அந்த நிலையில் தான் இன்று சமூகம் இருக்கிறது.