மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிக்கவிட்ட கணவன் குறித்த வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தபோது கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால் மற்றவர்கள் அதைப் பேசி சரி செய்வார்கள். தனிக்குடித்தனத்தில் கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் சரி செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் தற்போது விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. இன்று ஸ்பெசல் சில்ரன்ஸ் அதிகமாகியுள்ளனர். காதல் திருமணம் செய்த ஒரு தம்பதி அமெரிக்காவுக்கு சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே மாற்றுத்திறனாளிகள்.
திடீரென்று ஒருநாள் கணவரைக் காணவில்லை. மனைவி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்தார். அதன் பிறகு நம்மை வந்து சந்தித்தார். நடந்தவற்றைக் கூறி கணவரை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்ப்பதற்கு நிறைய பணம் செலவாகும். ஏனெனில் தங்களுடைய வேலைகளைத் தாங்களாகவே அவர்களால் செய்துகொள்ள முடியாது. அனைத்தையும் அந்தப் பெண் ஒருவரே கவனித்து வந்தார். அதன் பிறகு அவருடைய கணவரை நாங்கள் கண்டுபிடித்தோம்.
குழந்தைகளை எடுத்துக்கொண்டு அவர் முன் சென்று அந்தப் பெண் அழுதார். அந்தப் பெண்ணை தாய் வீட்டில் இருக்குமாறு அவர் சொன்னார். தான் பணம் அனுப்புவதாகவும் கூறினார். சில நாட்கள் கழித்து மீண்டும் அவர் காணாமல் போனார். மீண்டும் நாங்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்தோம். இந்தக் குழந்தைகளுக்காக தன்னுடைய வாழ்க்கையை தன்னால் வீணாக்க முடியாது என்று அவர் கூறினார். செலவுக்கு பணமும் கொடுக்க முடியாது என்று கூறினார்.
குழந்தைகளை வளர்ப்பது அந்தப் பெண்ணுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்ணின் கணவருக்கு இன்னொரு தொடர்பு ஏற்பட்டது. அதில் அவருக்கு குழந்தையும் பிறந்தது. இந்தப் பெண்ணின் பிரச்சனையை அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் இன்று நிறைய நடக்கின்றன. மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வளர்ப்பதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என நினைத்து ஆண்கள் பலர் விலகுகின்றனர். இறுதியில் அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குழந்தை வளர்ப்புக்கான பணத்தைப் பெற்றார்.