பெற்ற தாய் மீது மகன் சந்தேகப்பட்டு விசாரிக்கச் சொன்ன வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
மகன் ஒருவர் தன்னுடைய தாய் குறித்து விசாரிக்கச் சொல்லி நம்மிடம் வந்தார். அவருடைய தாய் கிராமத்தில் இருந்தார். மகன் இந்தியாவின் வேறு ஒரு பகுதியில் வேலையாக இருந்தார். ஊரில் நிலத்திலிருந்து வருமானம் வந்தாலும், தானும் பணம் அனுப்பினாலும், தன்னுடைய தாய் அதிகமாக செலவு செய்கிறார் என்று மகன் குற்றம் சுமத்தினார். இவ்வளவு பணத்தைத் தன்னுடைய தாய் என்ன தான் செய்கிறார் என்று தனக்குத் தெரிய வேண்டும் என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சனை பல குடும்பங்களில் நடக்கிறது. அவருடைய தாயை நாம் பின்தொடர ஆரம்பித்தோம்.
பணத்தையெல்லாம் தன்னுடைய இளைய மகளுக்கு அவர் செலவழித்து வந்தது தெரிந்தது. அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது முதல் பல்வேறு வகைகளில் அவருக்காக தன்னுடைய பணத்தை அவர் செலவழித்தார். தான் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும்போது, தான் அனுப்பும் பணத்தை தன்னுடைய தங்கைக்காக தாய் இவ்வாறு செலவழிக்கிறார் என்று மகன் வருத்தப்பட்டார். குடும்பத்தில் மூத்த பிள்ளை இளைய பிள்ளைக்கு உதவ வேண்டும் என்பது நம்முடைய நாட்டில் எழுதப்படாத ஒரு விதியாக இருக்கிறது.
ஒருவருக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது. மூத்த பிள்ளை தான் இளைய பிள்ளையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவதை விட, வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதை இரு பிள்ளைகளுக்குமே கற்றுத் தருவது தான் பெற்றோரின் கடமை. இல்லையெனில் இருவரில் ஒருவர் மட்டுமே வளமாக வாழ முடியும்.
"நீங்கள் இருக்கும்வரை மூத்த பிள்ளையிடமிருந்து வாங்கி இளைய பிள்ளைக்குக் கொடுப்பீர்கள். அதன் பிறகு அவர் என்ன செய்வார்? அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்" என்கிற புரிதலை அந்த அம்மாவுக்கு கவுன்சிலிங் மூலம் நாங்கள் ஏற்படுத்தினோம். அம்மா தன்னுடைய பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டார் என்று அவர் தன்னை ஏமாற்றியதாகவும் நினைத்து வருந்திய மகனுக்கும் சில விசயங்களை சொல்லி புரிய வைத்தோம்.