தன் பாலியல் தேவைக்காக பெண்களை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றும் கொடூரம் என்பது ஆண்களால் பல காலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வழக்கு குறித்து துப்பறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவியது குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விளக்குகிறார்.
கல்யாணம் ஆகாத பெண் ஒருவர் நம்மிடம் வந்து அழுதார். தன்னுடைய முதலாளியுடன் தான் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அவருக்காகத் தனியாக வீடு எடுத்து, தான் தங்கி இருந்ததாகவும் கூறினாள். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான தன்னுடைய முதலாளியின் மனைவிக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், அதனால் அவர் தன்னோடு நெருக்கமாக இருந்ததாகவும் அந்தப் பெண் கூறினாள். அவரைத் தற்போது காணவில்லை என்றும் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் கூறினாள்.
அவளிடம் நான் ஒரு சகோதரி போல பேச ஆரம்பித்தேன். அவளுடைய தவறை அவளுக்கு உணர்த்தினேன். திருமணத்தை மீறிய உறவு தவறு என்பதையும்; பாலியல் ரீதியாக அவள் சுரண்டப்பட்டதை அவளுக்கு உணர்த்தினேன். மேலும், அவளுடைய முதலாளியால் அவள் ஏமாற்றப்பட்டிருப்பதையும் உணர்த்தினேன். பெற்றோரிடம் நடந்ததைக் கூறி புதிய வாழ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தினேன். மெதுவாக அவளும் உண்மையை உணர ஆரம்பித்தாள். அந்த முதலாளியிடமிருந்து விலகிப் புதிய வாழ்க்கையை அவள் தொடங்கினாள்.
பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் தான் வழிதவறிச் செல்கின்றனர். தங்களைப் பரிதாபமாகக் காட்டிக்கொண்டு பெண்களை ஏமாற்றி மயக்குகின்றனர். மனைவிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். திருமணம் ஆகாத பெண்களும் இது போன்ற ஆண்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உண்மையில் அந்த முதலாளி தன்னுடைய மனைவியோடு சந்தோஷமாகத் தான் இருந்து வந்திருக்கிறார் என்பதை அதன் பிறகு அறிந்தோம்.
பள்ளிக் குழந்தைகளிடம் நல்ல கருத்துகளை விதைக்கும் பணியைத் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். குழந்தைகளைச் சீர்திருத்துவதற்கு பள்ளிகளில் பிரத்தியேகமான வகுப்புகள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.