Skip to main content

மனைவியின் தகாத உறவு; தனிமையில் தவித்த கணவன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 03

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Detective Malathi's Investigation : 03

 

தன்னுடைய உளவுப் பணியில் தான் சந்தித்த பல்வேறு விசித்திரமான வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

 

தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று கணவர் எங்களிடம் புகார் கொடுத்தார். ஒரு அரசுப் பள்ளியில் தான் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். அங்குதான் தன் மனைவி பணியாற்றி வந்ததாகச் சொன்னார். கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு நாங்கள் சென்றோம். வண்டியில் வந்த அந்தப் பெண் திடீரென்று காணாமல் போனார். அவருக்காக நீண்ட நேரம் நாங்கள் அங்கு காத்திருந்தோம். ஒருகட்டத்தில் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியாது என்பதால் கிளம்பினோம். 

 

அடுத்தடுத்த நாட்களிலும் அந்தப் பெண் எங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருந்தார். அவரைப் பிடிப்பது கடினமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களைப் பயன்படுத்தி ஒருவழியாக அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்தோம். வீட்டில் குழந்தை இருந்தது. 27 வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தையைப் பராமரித்து வந்தான். இந்தப் பெண் தொடர்ந்து பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தாள். அவளுடைய கணவருக்குத் தெரியாமல் இது நடந்தது.

 

கணவருக்கு அவருடைய மனைவி மேல் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், அது சின்ன பையனாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், மீண்டும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழவே அவர் விரும்பினார். போலீஸ் மூலம் அந்தப் பெண் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள். ஆனால், திரும்பவும் அந்தப் பையனுடன் சென்றாள். இதனால் குழந்தையை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பையனுடன் சென்றுவிட்டாள் அந்தப் பெண்.

 

எங்களுடைய பணி மிகவும் கடினமான ஒன்றுதான். பல நேரங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். சில நேரங்களில் கெட்டப் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஹேக்கிங் என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை நாம் செய்வதில்லை. எங்களுடைய பணியின்போது சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். முடிந்தவரை பிரச்சனைகளை வீட்டிலேயே பேசித் தீர்த்துக்கொள்வது சிறந்தது.