குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
கஜபதி என்பவரின் வழக்கு இது. இயல்பிலேயே பருத்த சரீரம் அவருக்கு. கூடுதலாக அன்சைட்டி, பிளட் பிரஷர், சுகர் வேறு இருக்கிறது. மேட்ரிமோனியில் பதிவு செய்யும்போது இதையெல்லாம் குறிப்பிட்டு தான் பெண் தேடுகிறார். அதற்கேற்றார் போல ஒரு வரனும் அமைகிறது. சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் கஜபதி, அந்த பெண்ணிற்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்க, இருவரும் முடிவெடுத்து கஜபதி பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் வெளிநாட்டுக்கே குடி ஏறுகிறார். ஆனால் அங்கு போன பின்பு அந்த பெண் கஜபதியின் உணவு முறையை கிண்டல் செய்வது எனப் பலவாறு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறாள். மேலும் இந்தியாவிற்கு அனுப்ப மறுத்து, சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே வேலைக்குச் செல்லுமாறு சொல்லியிருக்கிறாள். கஜபதியின் பெற்றோரும் அவரிடம் பொறுத்து போகுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அந்த பெண்ணும் கர்ப்பம் ஆகிறாள். அதன் பின்னே அவளின் பேச்சும் மாறுகிறது. குழந்தைக்காகத்தான் காத்திருந்ததாகவும், இனிமேல் அவரை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் போலீசை வரவழைத்து வெளியே துரத்துகிறாள். வேறு வழி இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் தனது சகோதரனின் வீட்டிற்குச் செல்கிறார். அந்த பெண்ணும் மீண்டும் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். கஜபதி போலீசில், தன்னை கூட்டி வந்து செலவுக்கு பணமும் தராமல், வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாதிருக்க, தினசரி கொடுமை படுத்துவதாகவும் அந்த பெண்ணை பற்றி புகார் கொடுக்கிறார். டைவோர்ஸ் கேட்டு அந்த பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பி விடுகிறார். தன்னுடைய விசா காலம் முடிவடைய இந்தியா திரும்பியதால், அமெரிக்காவில் அனுப்பிய டைவோர்ஸ் கேஸ் தொடர முடியவில்லை. ஆனால் கஜபதிக்கு அந்த பெண்ணிடமிருந்து இம்முறை நோட்டீஸ் வருகிறது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தொடர்ச்சியாக குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகவும் புகார் வருகிறது. போலீசும் கஜபதியை கைது செய்ய, அவரது அம்மா என்னிடம் சட்ட உதவியை நாடினார்.
மதுரை கோர்ட்டில் கஜபதிக்கு பெயில் வாங்கினேன். வாய்தா நடக்கும்போதும் கூட கஜபதி மேல் அந்த பெண் மீண்டும் நிறைய பொய் வழக்குகள் அடுக்குகிறார். குழந்தைக்காக பார்த்துக் கொள்ள 4 கோடி நஷ்ட ஈடும், மாதம் நாற்பது ஆயிரம் வேறு கேட்கிறாள். மிகவும் மனம் உடைந்து போகிறார் கஜபதி. சென்னையிலிருந்து அவருக்கு டைவர்ஸ்க்கு பதிவு செய்தோம். அதற்கு, இவர் ஏற்கனவே அமெரிக்காவில் அப்ளை செய்த நோட்டீஸ் தேவைப்படுகிறது. அதை கையில் வாங்கவே மூன்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒருவழியாக அதை வாங்கி அந்த பெண் வேலை பார்த்த அலுவலகத்திற்கு சம்மன் அனுப்பினோம். இது ஒருபுறம் இருக்க, திருச்சி கோர்ட்டில் 70 வயது முதிர்ந்த கஜபதியின் பெற்றோர் மாதம் தவறாமல் வாய்தாவுக்காக 8 வருடமாக அலைந்து வருகின்றனர். இறுதியில் தான் அந்த பெண் அளித்த ஒரு குற்றச்சாட்டு கூட உண்மையில்லை என்றும் வரதட்சணை கொடுமை புகாரையும் தவறானது என்றும் நீதிபதி தீர்ப்பு அளிக்க கஜபதிக்கு ஒருவழியாக விடுதலை கிடைக்கிறது. சாப்ட்வேர் டெஸ்ட் என்ஜினீயராக இருந்த கஜபதி இப்பொழுது தன் வயதான தாய் தந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஜெராக்ஸ் கடை போட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்.