குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
பொதுவாக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவரே வழக்கறிஞரான என்னை பார்க்க வருகையில், இதற்கு மாறாக பையனின் பெற்றோர் வந்து என்னை சந்தித்தனர். அவர்களின் வழக்கு பின்னணி இது. ஐரோப்பாவில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யுவராஜ் என்ற அந்த பையன் நல்ல குணமுள்ளவன், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அவன், கடவுள் மீது அளவு கடந்த பக்தியை வைத்திருக்கிறான். அதற்கேற்றார் போல பெண் தேடி இறுதியில் ஒரு வரன் அமைகிறது. இருவரும் பேசுகிறார்கள்.
இவர் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, வரும் மனைவி தனக்கு மட்டுமே முதலாவதாக சுத்தமான பெண்ணாக இருக்க வேண்டும் என்று. அந்த பெண்ணும் தனக்கு அந்த பழக்கம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மட்டும் இருப்பதாகவும், மேலும் தனக்கும் தேவன் பக்தி அதிகம் உள்ளவள் என்றும் கூறுகிறாள். தனக்கு ஏற்றார்போல அந்த பெண்ணும் இருக்க வீட்டில் பேசி ஒரு மாதத்திலேயே திருமணம் நடக்கிறது.
ஆனால் தேனிலவின் போதுதான் ஏதோ ஒன்று சரி இல்லாததாக அந்த பையனுக்கு உறுத்துகிறது. பின்னர் இருவரும் ஐரோப்பாவிற்கு செல்ல ஏற்பாடாகும் போது அந்த பெண், விசா கிடைக்கும் வரை தன் பெற்றோருடன் பெங்களூரில் இருப்பதாகச் சொல்லி விடுகிறாள். அந்த பையனும் விசாவுக்காக எல்லாம் அப்ளை செய்து அவளது விசா ப்ராசஸுக்காக அவளது மெயிலை வாங்கி இருக்கிறான். ஆனால் தற்செயலாக அந்த பெண்ணிற்கு வேறொரு மெயில் ஐடி இருப்பதை கவனித்து அதை ஓபன் செய்ய, அதில் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததற்கான எல்லா மெசேஜயும் படிக்கிறார். எல்லாமும் தவறான பேச்சாக வேறு இருக்கிறது.
மனமுடைந்து போகிறார் அந்த ஆண். விசாவுக்கான வேலை அப்படியே இருக்க, தன் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் என்றே வருகிறது. இவனும் பெண்ணின் மொபைலை ட்ராக் செய்து அது வயநாட்டில் இருப்பதை தெரிந்து கொள்கிறான். இதற்கு மேலேதான் பெற்றோரிடம் எடுத்து சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பி வைக்கிறான். அவனோடு தொடர்பு கொண்டு பேசியபோது நடந்த அத்தனையும் சொல்கிறான். கிடைத்த ஆதாரத்தின் எல்லா காப்பிஸும் கேட்டு வாங்கிக் கொண்டு, அவனை ஒரு வாரம் மனைவியுடன் இருந்து போனில் தேவைப்படுகிற ஆதாரத்தையும் வாங்குமாறு அனுப்பி வைத்தோம்.
இரண்டே நாளில் எல்லா ஆதாரத்தையும் திரட்டி வந்தபின் தான் தெரிகிறது, அவளுக்கு திருமணம் ஆகியும் அந்த ஆணுடன் தகாத தொடர்பு தொடர்ந்திருக்கிறது என்று. அவர்கள் வயநாடு சென்ற எல்லா டிக்கெட்ஸ், விடுதி முகவரி வரை எல்லா ஆதாரத்துடன் என்னிடம் சமர்ப்பிக்கிறார். அந்த பெண்ணிற்கு டிவோர்ஸ் நோட்டீஸ் போனவுடன், தன்னுடைய ஆபீஸ் கம்ப்யூட்டரில் இதையெல்லாம் திருடி இருக்கிறார் என்று அந்த பையன் மீது கிரிமினல் புகார் அளிக்கிறாள். கூடுதலாக டொமெஸ்டிக் வயலென்ஸ் கேஸ் போடுகிறாள்.
இதற்காக பெங்களூரிலிருந்து சென்னை, திருவள்ளூர் கோர்ட்டிற்கு அவள் வந்து போக இருக்க, நான்கு வாய்தாவுக்கு மேல் அவளால் அலைய முடியவில்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில் கேஸை ட்ரான்ஸ்பர் செய்து இருக்கிறாள். வேறொரு வக்கீலை வைத்து கேஸ் நடக்கிறது. என்னால் அங்கு போக முடியாது என்பதால், அந்த வழக்கின் தற்போதைய நிலை தெரியவில்லை. ஆனால் இன்னும் அந்த கேஸ் போய்க்கொண்டு தான் இருக்கிறது. விசாரித்து திருமணம் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் எப்படி விசாரிப்பது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? தனி மனித ஒழுக்கம் மட்டுமே தீர்வாக இருக்கும்.