Skip to main content

அப்பா குடிப்பதை பார்த்த குழந்தை; கணவனை திருத்த மனைவி அதிரடி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு: 21

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Advocate Santhakumari's Valakku En - 21

 

தன்னிடம் வந்த வழக்குகள் குறித்து,  குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் விவரித்து வருகிறார். அந்த வகையில் இடைக்கால பிரிவினை விரும்பி ஏற்ற மனைவியின் அன்பை புரிந்து அருமையை தெரிந்து மீண்டும் சேர்ந்த தம்பதி பற்றிய வழக்கு குறித்து விவரிக்கிறார். 

 

சுகந்தி என்ற பெண்ணுடைய வழக்கு இது. அவளை நான் 15 வருடங்கள் கழித்து சந்தித்தபோது மிகவும் மெலிந்து போயிருந்தாள். என்னோடு பேச வேண்டும் என்றாள். கல்லூரி காலத்தில் அவள் ஒரு ஸ்டார். அனைத்து போட்டிகளிலும் அவள்தான் பரிசு வாங்குவாள். அவளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. திறமையான பெண். அப்படி இன்னொரு கல்லூரியில் போட்டிகளில் கலந்துகொள்ளச் சென்றபோது ஒரு பையனை அவள் சந்திக்க நேர்ந்தது. இரண்டு மூன்று முறை சந்தித்த பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. 

 

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோரும் அவர்களை மன்னித்தனர். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். கர்ப்ப காலத்துக்குப் பிறகு ஐந்து மாதங்கள் பெற்றோர் வீட்டில் அவள் தங்கினாள். ஐந்து மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்தாள். வேலைக்குச் சென்ற கணவன் இரவு வீட்டுக்கு குடித்துவிட்டு வந்தான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த நாள் காலை அதற்காக அவளிடம் அவன் மன்னிப்பு கேட்டான். ஆனால் அவன் குடித்துவிட்டு வருவது தொடர்ந்தது. 

 

இதனால் வீட்டில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஒருநாள் அப்பாவைப் போலவே தள்ளாடியபடி மகன் நடித்துக் காட்டியபோது அவளுக்கு பயம் ஏற்பட்டது. அவள் என்னை வந்து சந்தித்தாள். என்ன செய்தாலும் கணவர் திருந்தவில்லை என்றாள். அவனைத் தான் எப்போதும் நேசிப்பதாகவும், குழந்தையின் நலன் கருதி அவனோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அவள் கூறினாள். இரண்டு வருடங்களுக்கு Judicial separation  கேட்டு வழக்கு தொடர்ந்தோம். Judicial separation என்றால் இருவரும் கணவன் மனைவி தான். ஆனால் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாது என்று அர்த்தம். 

 

அந்த நோட்டீஸ் கிடைத்தவுடன் அவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுக்கும் அவள் மீது காதல் இருந்தது. அவளோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று என்னிடம் வந்து அழுதான். அவன் மனம் மாறுவதற்கான வாய்ப்பு தான் Judicial separation என்று அவனுக்கு விளக்கினேன். குடியை மறக்க அவனுக்கு ஆலோசனைகள் வழங்கினேன். அதன்படி செயல்பட்டு அவனால் நன்றாக வாழ முடிந்தது. குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அவன் கேட்டபோது நாங்கள் மறுத்தோம். வாரம் ஒருமுறை அவன் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு இப்போது இருவரும் நிம்மதியாக இணைந்து வாழ்கின்றனர். தவறு செய்யும் ஒருவரைத் திருத்த வேண்டும் என்று நினைத்தால் Judicial separation  பெறலாம்.