குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிர்ந்த ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
ஸ்வேதா என்ற பெண்ணுடைய வழக்கு இது. ஒரு நாள் அந்த பெண் தன்னுடைய குழந்தை மற்றும் அப்பாவுடன் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தாள். விஷயம் என்னனென்று கேட்டபோது, அந்த பெண்ணின் கணவர் சண்டை போட்டுவிட்டு சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வராமலேயே இருந்துள்ளார் என்றாள். அதோடு தான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறினாள். பின்பு அதற்கான வக்கீல் நோட்டீஸை அந்த பெண்ணின் மாமனார் வீட்டிற்கு அனுப்பினோம். அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அந்த நோட்டீஸ் அவரை சென்றடையவில்லை. அதன் பிறகு 6 மாத காலம் அந்த நோட்டீஸூக்கு எந்தவித பதிலும் இல்லாமல் இருந்தது. அந்த பெண்ணின் கணவர் கல்லூரியில் ஆசிரியர் பணி செய்து வந்ததால் அங்கும் நோட்டீஸ் அனுப்பிப் பார்த்தோம் அப்படியும் அவருக்கு அந்த நோட்டீஸ் சென்றடையவில்லை. கல்லூரியில் விசாரித்தபோது அவர் அங்கும் இல்லாமல் இருந்திருக்கிறார்.
அதன் பிறகு கணவரைக் காணவில்லை என்று காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யச் சொன்னேன். ஆனால் போலீசார் குடும்ப தகாராருக்கு ஏன் வழக்குப்பதிவு செய்ய வருகிறீர்கள் என்று வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாக வழக்கு தொடர்ந்தோம். பின்பு நீதிமன்றம் போலீசாருக்கு அந்த பெண்ணின் வழக்கை ஏற்றுக்கொண்டு கணவரை கண்டுபிடித்துத் தர உத்தரவிட்டது. இதையடுத்து முறையான விசாரணை செய்து அந்த பெண்ணின் கணவரை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் நீதிமன்றம் வந்தார். கவுன்சிலிங் நடந்தபோது தன்னை பெண் வீட்டார் மதிப்பதில்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து கவுன்சிலிங் வந்த அவர் அதன் பிறகு 6 மாதங்கள் நீதிமன்றம் வருவதை நிறுத்திவிட்டார்.
அந்த பெண் அவருடன் வாழ உறுதியாக இருந்ததால் மெயிண்டனன்ஸ் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றம் வராமல் இருந்தால் போலீசார் அவரை அழைத்து வரலாம். அப்படியும் அவர் வராததால் நீதிமன்றம் எக்ஸ் பார்ட்டி முறையில் சேர்ந்து வாழ உத்தரவிட்டது. இதற்கிடையில் மெயிண்டனன்ஸ் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, அந்த பெண்ணின் கணவர் அவரின் நீதிமன்றம் வந்தால் தன்னுடைய மனைவியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுவதாக சொந்த ஊரிலுள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீண்ட நாள் நீதிமன்றம் வராத காரணத்திற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு என்பதை தெரிந்து கொண்ட அந்த பெண் நடந்ததை காவல் நிலைத்திற்கு சென்று சொல்லிவிடுகிறார். அதோடு சேர்ந்து வாழ ஆசைப்படும் நான் ஏன் அவரை நீதிமன்றம் வர வேண்டாம் என்று மிரட்ட போகிறேன் என்பதையும் கூறியிருக்கிறாள்.
நீதிமன்றம் ஏற்கனவே சேர்ந்து வாழ உத்தரவிட்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கோரி தன்னுடைய சொந்த ஊரில் வழக்கு தொடர்ந்தார். அதற்கான நோட்டீஸ் அந்த பெண்ணிற்கு வந்தவுடன் என்னிடம் வந்து புலம்பினாள். பின்பு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் போட்ட வழக்குக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினோம். அதன் பிறகு அந்த பெண்ணின் கணவர் நீதிமன்றம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. ஏற்கனவே அவர் மெயிண்டனஸ் வழக்கில் மனைவி மற்றும் குழந்தைக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதால் இறுதியாக மனைவிக்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என்று குற்றம் சாட்டினார். இதை அவரின் மனைவியால் ஏற்க முடியாமல் டி.என்.ஏ. டெஸ்ட் போடலாம் என்றாள். அதற்கான மனுவை நீதிமன்றத்தில் கொடுத்தபோது, எத்தனை மனுதான் கொடுப்பீர்கள் என்று நீதிபதி கேட்டார். நீதிபதி சொன்ன வார்த்தை ஆழமாக அந்த பெண்ணின் மனதில் பட்டதால், குழந்தையைத் தவறாகப் பேசிய அவருடன் சேர்ந்து வாழப் போராடுவது தவறு என்று உணர்ந்து நீதிமன்றம் வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த பெண்ணின் முடிவால் வழக்கும் பாதியில் முடிந்தது.