அதிரடி பேட்டிங், சுறுசுறுப்பான ஃபீல்டிங், ஆச்சர்யம் தரும் பந்துவீச்சு என பல இந்திய ரசிகர்களின் பிடித்தமான வீரராக அறியப்படும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், புற்றுநோயுடன் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த முடிவை அறிவித்த அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து உருக்கமாக பேசினார்.
செய்தியாளர்கள் முன் பேசிய அவர், "கிரிக்கெட்டை சுற்றியே 25 ஆண்டுகள் எனது வாழ்க்கை சுழன்றுள்ளது. அதில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். தற்போது ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட் எனது வாழ்க்கையில் கற்றுக்கொடுத்தது ஏராளம். போராட்டக்குணம், தோல்வி, அதிலிருந்து மீண்டும் வெற்றியை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்" என கூறினார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை என இரண்டையும் இந்தியா வென்றதில் இவரது பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.