2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக தற்போது நடைபெற்று வருகிறது, இதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த கொசோவோ என்ற 19 லட்சம் மக்களை கொண்ட நாடு, இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஆச்சரியப்படுத்தியது.
அதேபோல் பெர்முடாவில் இருந்து இரண்டே இரண்டு பேர் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று சான் மரினோ நாட்டை சேர்ந்த அலெஸாண்ட்ரா பெரில்லி, ட்ராப் ஷூட்டிங்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை சான் மரினோ படைத்துள்ளது. அந்தநாட்டின் மொத்த மக்கள் தொகை 35,000 ஆயிரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1960லிருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பிவரும் சான் மரினோ, 61 வருட காத்திருப்புக்கு பிறகு முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த வெற்றியை சான் மரினோ கொண்டாடி வருகின்றனர்.