தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட இந்திய அணியில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது என கிரிக்கெட் வீரர் நடராசன் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2023ல் பங்குபெறும் அணிகள் செப்டம்பர் 5க்குள் முதற்கட்ட 15 வீரர்களை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) காலக்கெடு வைத்திருந்தது. கடைசி நாளான (05-09-2023) அன்று உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட இந்திய அணி விவரங்கள் வெளியிடப்பட்டது. பிசிசியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இணைந்து இலங்கை, கண்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வீரர்களின் பெயரை அறிவித்தனர். அதில், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்டிக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேரளத்தின் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் போன்றவர்கள் அணியில் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதோடு தேர்வு செய்த முறை குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில், சேலம், சீலநாயக்கன்பட்டியில் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் திறந்து வைத்துள்ளார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் பேசுகையில், “இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த வருட உலகக் கோப்பையை இந்தியா உறுதியாக வெல்லும் என எதிர்பார்க்கலாம். ஆனால், உலகக் கோப்பையில் பங்குபெறும் அணிகள் எல்லாம் மிகவும் பலம் பொருந்தியவை. இதனால், இந்தியாவிற்கு இது சவாலாக அமையும். எனினும், இந்தியா சொந்த மண்ணில் உலகக் கோப்பையை நடத்தி விளையாடுவதால், வெற்றி வாய்ப்பும் சற்று அதிகமாகவே உள்ளது" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அணிகள் நன்றாக அமைந்துள்ளது. இருந்தும், தமிழகத்தில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விஷயம் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித வருத்தத்தை ஏற்படுத்தியதோ, அதே வருத்தம் எனக்கும் உண்டு. அதிலும், அஷ்வின் அண்ணா கூட தேர்வாகவில்லை என நினைக்கையில் மேலும் வருத்தம் அளிக்கிறது" எனப் பேசியுள்ளார்.கடந்த இருபது வருட உலகக் கோப்பை இந்திய அணியில் , ரவிச்சந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக்கை தவிர வேறு எந்த ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.