4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பைக்கான முதல் ஆட்டம் இன்று அஹமதாபாத்தில் தொடங்குகிறது.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் 1975ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு தொடர்களை மேற்கிந்தியத் தீவு கைப்பற்றி அடுத்த தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்வி பெற்று ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து உலகக் கோப்பையை வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியும் கபில் தேவ் தலைமையில் 1983லும், தோனி தலைமையில் 2011லும் என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான்(1992), இலங்கை (1996), இங்கிலாந்து (2019) தலா ஒருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில் தான், 45 லீக் போட்டிகள் மற்றும் மூன்று நாக் அவுட் போட்டிகள் என பத்து அணிகள் விளையாடும், 13வது எடிஷன் 2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கோலாகலமாக இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. தொடர்ந்து வான்கடே ஸ்டேடியம், மும்பை; ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்; எம்.சி.ஏ சர்வதேச அரங்கம், புனே; எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை; எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு; ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (எச்.சி.பி.ஏ) ஸ்டேடியம், தர்மசாலா; ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா; பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் நரேந்திர மோடி ஸ்டேடியம், அஹமதாபாத்தில் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு இன்றைய ஆட்டம் தொடங்கவுள்ளது.
இதில், இங்கிலாந்து அணியில்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
நியூஸிலாந்து அணியில்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ல், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னையில் விளையாடவுள்ளது.
- மருதுபாண்டி