Skip to main content

மகளிர் (ஐ)பிஎல்; வீராங்கனைகள் ஏல விபரம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Women's (I)PL; Players auction details

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 

 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும். 

 

இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டினர் உட்பட 90 வீராங்கனைகள் தேவைப்படும் நிலையில், 15 நாடுகளை சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். இவர்களில் 269 இந்திய வீராங்கனைகளும் 179 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடக்கம்.

 

இந்நிலையில், ஏலத்தின் முதல் சுற்றில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டிவைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியை ரூ. 1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஸ்லேக் ஹார்டெனரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா தாகூர் சிங்கை ரூ. 1.5 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனியை ரூ. 2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ. 3.2 கோடி என்ற அதிகமான தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் இதுவரை இதுதான் 2வது அதிகபட்ச தொகை ஆகும். இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ. 2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மா ரூ. 2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியால் வாங்கப்பட்டனர்.