Skip to main content

களத்தில் காட்டிய கோபத்திற்காக இளம்வீரரிடம் மன்னிப்பு கேட்ட அஃப்ரிடி!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

களத்தில் சகவீரரிடம் காட்டிய ஆக்ரோஷத்திற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடி.

 

இந்தியாவிற்கு ஐ.பி.எல். போட்டிகளைப் போல பாகிஸ்தானுக்கு பி.எஸ்.எல். டி20 கிரிக்கெட் தொடர். துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

 

 

அதில், முல்தான் சுல்தான் அணியைச் சேர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீரன் பொல்லார்டை தனது சுழற்பந்தில் வெளியேற்றினார் நட்சத்திர ஆட்டக்காரர் சாகித் அஃப்ரிடி. பின்னர் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த முல்தான் அணியின் இளம் வீரர் சைஃப் படாரை கிளீன் பவுல்டு ஆக்கிய அஃப்ரிடி, ‘அதோ ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது. வேகமாக போ’ என ஆக்ரோஷமாக கூறினார். அஃப்ரிடியின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்தக் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சைஃப் படார், ‘இன்னமும் உங்களைப் பிடித்திருக்கிறது சாகித் பாய் #லெஜண்ட்’ என எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து சாகித் அஃப்ரிடி, ‘ஆட்டத்தின் சூழலில் அங்கு நான் நடந்துகொண்டதற்கு வருந்துகிறேன். இளம் வீரருக்கு (சைஃபிற்கு) எப்போதும் என் ஆதரவு உண்டு. வாழ்த்துகள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.