சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 283 ரன்களை குவித்தது.
அடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் இரு விக்கெட்களை பறிகொடுத்து 286 ரன்களை விளாசி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஸ்குவாடுக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆனால் தற்போது அது பல் இல்லாத பாம்பு போல் உள்ளது. நசீம் ஷா இல்லை, ஷாஹீன் அப்ரிடி இருந்தும் வேகப்பந்து வீச்சில் உயிர் இல்லை. மோசமான ஃபீல்டிங்.
இரு விக்கெட்களை மட்டுமே இழந்து 280 ரன்களை எடுப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், இதனை ஆஃப்கானிஸ்தான் அசால்டாக செய்திருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட்டை காரணம் சொல்ல முடியாது. வீரர்களின் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். மூன்று வாரமாக நீங்கள் விளையாடவில்லை. நான் தனிப்பட்ட முறையில் வீரர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களுக்கு முகம் வாடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது.
மிஸ்பா பயிற்சியாளராக இருந்தபோது வீரர்களுக்கான அளவுகோலை வைத்திருந்தார். அதன் காரணமாக அவரை வீரர்கள் வெறுத்தனர். ஆனால் அது பலன் அளித்தது. தற்போது இவர்களுக்கு எந்த சோதனையும் வேண்டாம். நீங்க உங்க நாட்டுக்காக விளையாடுறீங்க. தொழில் ரீதியாக நீங்கள் விளையாட பணம் பெறுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.