வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் நிடகாஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மூன்று பேரை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். இந்திய அணியின் வெற்றியில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, ‘வாஷிங்டன் சுந்தரின் மேஜிக்கல் ஸ்பெல் மிரளவைத்தது. ஒரு சுழற்பந்து வீச்சாளரால் புதிய பந்தில் சாமர்த்தியமாக வீசமுடியும் என்பது பாராட்டுக்குரியது. நான் ஓவரை வீச பந்தைத் தரும்போது, எங்கு எப்படி பந்துவீச வேண்டும் என்பதை முன்பே கணித்து வைத்திருக்கிறார்’ என புகழ்ந்துபேசியுள்ளார்.
நடந்துகொண்டிருக்கும் நிடகாஸ் கோப்பைத் தொடரில் நான்கு போட்டிகளில் களமிறங்கியுள்ள வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.