ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.
தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.