தமிழக அணி வீரர் நடராஜன், ஐ.பி.எல் தொடரில், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நெட் பவுலராக தேர்வானார். பின்பு இந்திய அணியில் இடம் பிடித்த அவர், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நடராஜனின் சிறப்பான ஆட்டத்தை, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினர் புகழ்ந்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா, தனது இருபது ஓவர் தொடரின், தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு அளித்துப் பாராட்டினார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில், நடராஜனின் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர், இருபது ஓவர் தொடரை இழந்தாலும் நடராஜனுக்காக மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெற்றியோ தோல்வியோ அல்லது ட்ராவோ, நாங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். தொடரை இழந்துவிட்டோம் ஆனாலும் நடராஜனுக்காக மகிழாமல் இருக்கமுடியவில்லை. நடராஜன் மிகவும் அருமையான மற்றும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் ஒருவர். ஒரு நெட் பவுலராக இந்த சுற்றுப்பயணத்திற்கு வந்து, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அறிமுகமானது என்ன ஒரு சாதனை!" எனப் பதிவிட்டுள்ளார்.