உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் முடங்கியுள்ள நிலையில், இந்தியச் சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 1.8 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 7000க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் 5 முறை உலக வாகையர் பட்டம் வென்றுள்ள பிரபல இந்திய சதுரங்க நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற பன்டெஸ்லிகா செஸ் தொடரில் கலந்து கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் நேற்று சென்னை திரும்புவதாக இருந்தது.
சென்னை திருப்பிய அவர், ரஷ்யாவில் நடைபெறும் சதுரங்க தொடர் ஒன்றில் முதன்முறையாக வர்ணனையாளராகப் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் அனைத்து பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளுடன், அவர் தாயகம் திரும்பும் திட்டங்களுக்காகக் காத்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.