கிரிக்கெட் கடவுள், ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார், அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்து அசைக்கமுடியாத மைல் கல் ஒன்றை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தியிருந்தார். இதனை கடந்த (15.11.2023) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சச்சின் அடித்த அந்த 49வது சதத்தை விராட் கோலி முறியடித்து உலக சாதனை படைத்தார்
இந்த சாதனையை தொடர்ந்து நியூசிலாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி; இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளங்களில் விராட் கோலியை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர், இதில் 12 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகி உள்ளது
2012ஆம் ஆண்டு பதிவிட்ட அந்த பழைய பேஸ்புக் பதிவு கேரளாவைச் சேர்ந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான சிஜூ பாலநந்தனின் பதிவு; அப்பதிவில் அவர் கூறியிருப்பது, “விராட் கோலி ஒரு நாள், சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை முறியடிப்பார்” என்றும், தொடர்ந்து விராட் கோலியின் 35வது சதம் வரை அந்த பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்த சிஜூ பாலநந்தன் கார் விபத்தில் காலமானார்; இதன் பிறகு அவரின் நண்பர்கள் விராட் கோலி அடித்த அடுத்தடுத்த சதத்தை இறந்த நண்பனின் பேஸ் புக் பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்துள்ளனர்.
அரையிறுதி ஆட்டத்தில் சிஜூ பாலநந்தன் சொன்னது போல் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடித்த நிலையில், சிஜூவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரோடு அவர் இல்லை என்றாலும், அவரின் அந்த வார்த்தைகள் இன்றளவும் உயிர் வாழ்வதாக அவரது நண்பர்களும் நெட்டிசன்களும் உருக்கம் தெரிவிக்கின்றனர்.
- காலேப் கீர்த்தி தாஸ்