இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத், இந்தியாவின் பதக்கப்பட்டியலில் இன்னொரு தங்கம் வருவதற்கு காரணமாகி உள்ளார்.
இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இருப்பினும், இந்தியாவின் பதக்கப்பட்டியலில் பெரிய ஏற்றம் இருந்ததாக தெரியவில்லை. இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். 65 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய பஜ்ரங் பூனியா, தங்கம் வென்று அசத்தினார். அதேசமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுஷில்குமார் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், மகளிருக்கான மல்யுத்தப் பிரிவில் களமிறங்கிய ஷாக்ஷி மாலிக் மற்றும் பூஜா தண்டா ஆகியோர் தோல்வியடைந்தனர். இவர்கள் இருவரும் இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளனர். மற்றொருபுறம், 50 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகாத், தன்னை எதிர்த்து விளையாடிய ஜப்பானைச் சேர்ந்த யூகி ஐரியைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசியப் போட்டிகளில் இந்தியா பெற்றிருக்கும் இரண்டாவது தங்கம் இதுவென்பதும், ஆசிய மல்யுத்தப் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் வினேஷ் போகாத் படைத்துள்ளார்.
பேட்மிட்டன் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார். அதேசமயம், பிவி சிந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடி வருகிறார்.