இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (03.12.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாறு படைத்தார். இதன்மூலம் அவர், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டாம் லாதமும், ஜேமிசனும் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
நியூசிலாந்து எடுத்த 62 ரன்கள், இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. ஃபீல்டிங்கின்போது காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக புஜாரா, மயங்க் அகர்வாலோடு இணைந்து களமிறங்கியுள்ளார்.