சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கீழ் இயங்கிவரும் ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அனில் கும்ப்ளே பதவி வகித்துவந்தார். இந்தக் கிரிக்கெட் கமிட்டியின் தலைவருக்கான பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். அதேபோல் ஒருவர் மூன்றுமுறை இந்தப் பதவியை வகிக்கலாம். இந்தச் சூழலில் அனில் கும்ப்ளே தொடர்ச்சியாக மூன்றுமுறை இந்தப் பதவியை வகித்துவந்தார்.
இந்தநிலையில், தற்போது அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி இந்தக் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்கு கங்குலி அப்பொறுப்பில் இருப்பார்.
கிரிக்கெட் விளையாட்டின் விதிகள், விளையாடும் சூழ்நிலைகள், நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் தொடர்பான விஷயங்கள், பந்துவீச்சு புகாரில் சிக்கும் பந்து வீச்சாளர்களுக்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் இந்தக் கிரிக்கெட் கமிட்டி ஆலோசித்து, அதுதொடர்பாக ஐசிசியின் தலைமை நிர்வாக குழுவிற்குப் பரிந்துரை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.