2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த மெகா ஏலத்தை பொறுத்தவரை, ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நான்கு வீரர்களில், மூவர் இந்தியர்களாகவும், ஒருவர் வெளிநாட்டவராக இருக்க வேண்டும் அல்லது இருவர் இந்தியர்களாகவும், இருவர் வெளிநாட்டவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்திய வீரர்களில் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்க வைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பிராவோ அல்லது ஃபாப் டு பிளெசிஸை தக்க வைக்கவுள்ளதாவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்திய வீரர்களில் ரோகித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரையும், இஷான் கிஷன் அல்லது சூர்யா குமார் யாதவ் இருவரில் ஒருவரையும் தக்க வைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பொல்லார்டை தக்க வைக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையே ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணியைவிட்டு விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியபோது, கேப்டனாக ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டுவருவதால் அவரே டெல்லி அணியின் கேப்டனாக தொடரவிருக்கிறார் என்றும், எனவே அணி மாறினால் தனக்கு கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஷ்ரேயாஸ் ஐயர் வேறு அணிக்கு மாறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.