
இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி மனம் நெகிழ்ந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்புத் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நேற்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தொடருக்கான, 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து, அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்தது குறித்து வருண் சக்கரவர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர், "இது ஏதோ கனவு போல உள்ளது. தொடர்ச்சியாக விளையாடி அணியின் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்திய அணிக்காக விளையாடும் போதும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணித் தேர்வாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். நம்பிக்கையும், உத்வேகமும் என்னைச் சுற்றியுள்ள பலரிடம் இருந்து கிடைக்கிறது. கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. ஏற்றம், இறக்கம் என இரண்டும் இருந்தது. இந்த வருடத்தில், அவையெல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்துள்ளேன்" எனக் கூறினார்.