Published on 19/06/2018 | Edited on 19/06/2018
இந்திய அணியில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு நடத்தப்படும் யோ-யோ தேர்வு முறையானது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல மூத்த நட்சத்திர வீரர்கள் வாய்ப்பை இழந்துவிடும் சூழல் நிலவிவரும் நிலையில், அதுகுறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டன.
யோ-யோ தேர்வு எனப்படுவது சர்வதேச போட்டிகளில் இடம்பெறுவதற்காக, இந்திய வீரர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ளும் வீரர் 16.1 மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இதில் தவறும் வீரர், அதற்கு முந்தைய போட்டிகளில் எப்படி விளையாடி இருந்தாலும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். உதாரணமாக சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் யோ-யோ தேர்வுமுறையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சமீபத்தில் இந்தத் தேர்வில் தோல்வியடைந்த சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை யோ-யோ தேர்வு மூலம் இழந்திருக்கிறார் அம்பத்தி ராயுடு. இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, தேர்வாளர்களையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் பேசுகையில், ‘வீரர்களின் உடல்தகுதி என்பது தவிர்க்க முடியாத காரணியாக இருக்கலாம். ஆனால், அதற்காக வெறும் அரை மணிநேர தேர்வின் மூலம் அவர்களை அணியில் இருந்து நீக்குவது, அவர்களது கடந்தகால பங்களிப்பு கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ் இல்லையென்றால், மற்றொன்றில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படுவது போல், யோ-யோ தேர்விலும் இரண்டாம் வாய்ப்பு தரலாம். அடுத்த அரை மணிநேரமோ, அடுத்த நாளோ மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாம். இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் அம்பத்தி ராயுடுவின் நீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என தெரிவித்துள்ளார்.