2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்த உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து அண்மையில், இந்த உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளை இரண்டு பிரிவாகப் பிரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
அதன்படி, முதல் குரூப்பில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டாம் குரூப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்தநிலையில் இந்தப் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்தப் போட்டி, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அக்டோபர் 31 ஆம் தேதி நியூசிலாந்தையும், நவம்பர் மூன்றாம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. அதன்பிறகு தகுதித் சுற்றில் வெல்லும் இரண்டு அணிகளோடு இந்தியா மோதவுள்ளது.
இந்த இருபது ஓவர் உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டிகள், நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரையிறுதிப் போட்டிகளுக்கும், இறுதிப்போட்டிக்கும் 'ரிசெர்வ் டே'வும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.